திரைப்படத்தினை மிஞ்சிய சம்பவங்கள். கொலைகளை துப்பு துலக்கிய நிகழ்ச்சி,
காதலர்களை பிரித்து கொண்டுபோக போலீசுடன் வந்த பெற்றோர்கள் என
நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ‘சொல்வதெல்லாம் உண்மை'
நிகழ்ச்சி.
செய்தி வாசிப்பாளராக வணக்க்க்கம் என்று ஆரம்பித்து
இன்றைக்கு பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக
மாறியிருக்கிறார் நிர்மலா பெரியசாமி. இந்த நிகழ்ச்சி உருவான விதம்
பற்றியும், அதில் தன்னுடைய பங்களிப்பு பற்றியும் நம்மிடையே பகிர்ந்து
கொள்கிறார்.இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு மொழிகளில் ஜி'டிவியில் முன்பே வந்துகொண்டுதான் இருந்தது. தமிழிலும் எடுக்கலாம் என்று யோசித்த போது அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த என் தோழி, "நிர்மலாவைப் போடலாம்' என்று சொல்லியிருக்கிறாள். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன்.
சிலர் இதை கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சி என்று சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. சொல்வதெல்லாம்' உண்மை நிகழ்ச்சியைப் பொருத்தவரைக்கும் பிரச்னையோடு வருகிறவர்களை அக்கறையாக, அன்பாக அணுகுகிறேன். என் வீட்டிற்கு யாராவது உதவி கேட்டு வந்தால் நான் எப்படி நடந்துகொள்வேனோ அதுபோலத்தான் இந்த நிகழ்ச்சியை ஆர்த்தமார்த்தமாக செய்கிறேன். இந்த நிகழ்ச்சி ஒரு கவுன்ஸிங் மாதிரிதான். ஒரு மன ஆறுதலுக்கான விஷயம். குறைந்தபட்ச தீர்வுக்கான அல்லது பிரச்னையை முளையிலேயே கிள்ளியெறிவதற்கானது. இதை கட்டப்பஞ்சாயத்து என்று சொன்னால் எப்படி?
நிறைய பேர் போன் பண்ணுவார்கள். சிலர் நேரடியாக நிறுவனத்துக்கே வந்து பிரச்னையைச் சொல்லுவார்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கென்று ஒரு பெரிய குழுவே இருக்கிறது. அவர்கள் பிரச்னையின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து நிகழ்ச்சிக்கு கொண்டு வருவார்கள். ஆனால் எனக்கு நிகழ்ச்சியில் உட்காரும் வரை இதுதான் பிரச்னை என்றோ.. இவர்தான் பிரச்னைக்குரியவர் என்றோ எதுவுமே தெரியாது. ரொம்ப கெட்டவர்கள்கூட இங்கே வந்தவுடன் அடங்கித்தான் போகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நிறையபேர் பாராட்டுகின்றனர். இந்த நிகழ்ச்சியால டிஆர்பி ரேட்டிங் ஏறியிருக்கிறது. பார்க்கிற இடத்தில் எல்லாம் என்னை ரொம்ப பெரிய மனுஷியாக மக்கள் பேசுகிறார்கள். மற்ற டிவி நிகழ்ச்சிகளைவிட இது மாறுபட்டதாக இருக்கிறது. பிரச்னைக்குரிய மனிதர்களை அணுகி அவர்களுக்குத் தீர்வு தருகிறோம் என்பது எவ்வளவு பெரிய பணி? இது எனக்கு மிகப் பெரிய மனதிருப்தியைத் தருகிறது. பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைக்கும் போது அவர்கள் காட்டும் நன்றிக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.
கொலை கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி.
பார்க்கிறவங்களும் "இதுமாதிரியெல்லாம் பண்றீங்களே "பயமா இல்லையா?' என்பார்கள். அவர்களும் மனிதர்கள்தானே.. அவர்களை அன்பாகவும், அரவணைப்பாகவும் அணுகினால் போதும் என்று நினைக்கிறேன். இதுவரை அப்படித்தான் செய்து வருகிறேன்.
மக்கள் பிரச்னையைக் கையிலெடுக்கும் சமூக நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நிறைய வரவேண்டும். மக்களும் அழுகைத் தொடர்களை விட்டு வெளியே வந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அன்போடு கட்டளை இட்டார் நிர்மலா பெரியசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக