செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சு.சாமி, சோ ராமசாமியை கண்காணித்தால் பார்ப்பனியம் புரியும்

ரண்டு சாமிகளும் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, மறைந்த சந்திரசேகர் பஜனை, ஜெயா விசுவாசம், நரேந்திர மோடியை போற்றுதல், ராமர் பாலம் என்று பல்வேறு சமாச்சாரங்களில் ஒரே மாதிரி கருத்துடையவர்கள். அதில் அண்ணா ஹசாரே குழுவை இருவரும் எதிர்க்கிறார்கள், ஏனென்று தெரியுமா?
மத்தியப் பிரதேசம் சட்னாவில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி பேசும் போது, ” நான் பாபா ராம்தேவுக்கு ஆதரவாக உள்ளேன். ஆனால் அண்ணா ஹசாரே குழுவில் நக்சல்கள் இருப்பதால் அவரை ஆதரிக்கவில்லை. அவர் எனது ஆதரவைப் பெறவிரும்பினால் நக்சல்களின் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் ” என்று கூறியிருக்கிறார். அதே போன்று அண்ணா ஹசாரே மீது கொஞ்சம் மரியாதை உள்ள சோவும் அவரது குழுவை கடுமையாக எதிர்க்கிறார்.
சமீபத்திய நிலக்கரி ஊழலை எதிர்த்து “ஊழலுக்கு எதிரான இந்தியா” நூறு பேரை வைத்து முற்றுகை போராட்டம் நடத்தியபோது அது காங்கிரசுக்கு எதிராக மட்டும் இருக்க வேண்டுமென்று கிரண்பேடி விரும்பினார். பா.ஜ.கவை எதிர்ப்பதை அவர் விரும்பவில்லை. இதில் கிரண்பேடிக்கு வருங்கால டெல்லி முதல்வர் பதவியை அளிக்க பா.ஜ.க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அரவிந்த் கேஜ்ரிவால், சாந்தி பூஷன் போன்றோர் பா.ஜ.கவை எதிர்க்கின்றனர். இந்த மேலோட்டமான இந்துத்தவ எதிர்ப்புதான் சோவுக்கும், சு.சாமிக்கும் ஆகவில்லை.
புரியும்
முன்பு கூட மோடிக்கு ஆதரவாக அண்ணா ஹசாரே பேசி பின்னர் அவரது குழுவால் மறுக்க வைக்கப்பட்டது போன்ற நாடகத்தையும் இவர்கள் ரசிக்கவில்லை. பா.ஜ.கவை வெளிப்படையாக அண்ணா குழு ஆதரித்திருந்தால் இவர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் வீக் எண்ட் ஜாலி புரட்சியாளர்களைக் கூட நக்சல்கள் என்று சு.சாமி பயமுறுத்தும் காமடிதான் சகிக்கவில்லை. ஒருவேளை அண்ணா குழுவின் முதல் கட்ட போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்ததை வைத்து அப்படி ஒரு கருத்தை சு.சாமி முன்வைக்கிறார் என்றால் அப்படி இல்லை.
அவரைப் பொறுத்த வரை மேலோட்டமான அமெரிக்க எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு இருந்தாலே போதும், சம்பந்தப்பட்டவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார். பாபா ராம்தேவை சு.சாமி ஆதரிப்பது போல சோ ஆதரிக்கவில்லை. இந்துத்தவ அணியில் பாபா ராம்தேவ் தனி ஆவர்த்தனம் வாசிப்பது சோவுக்கு உடன்பாடில்லை என்றாலும் சு.சாமி ராம்தேவின் மத ரீதியான நிலையை மனதில் கொண்டு ஆதரிக்கிறார். பா.ஜ.கவும் ராம்தேவும் கூட ஒருவித புரிந்துணர்வில்தான் இருக்கிறார்கள். அதனால் அண்ணா குழுவோடு ராம்தேவும் ஒரு இடைவெளியை கடைபிடிக்கிறார்.
இரண்டு சாமிகளும் அமெரிக்க ஆதரவில் ஆண்டாளைப் போன்று பெருங்காதல் கொண்ட அடிமைகள். ” ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்ன?” என்ற ஒரு துக்ளக் வாசகரின் கேள்விக்கு பதிலளித்த சோ, “அது என்ன சீனாவிடமிருந்து கற்றுக் கொள்வது? இந்த விஷயத்தில் இரண்டாவதாக வருபவர்களைத்தான் பார்க்க வேண்டுமா, என்ன? முதலாவதாக வருகிற அமெரிக்காவிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாமே? இதில் கூட அமெரிக்கா என்றால் வாய் சுட்டு விடுமா?” என்கிறார்.
சுப்ரமணியன் சுவாமி
எதார்த்தமான ஒரு கேள்வியில் கூட அமெரிக்க விசுவாசம் இப்படிக் கொப்பளிக்கிறது என்றால் அமெரிக்கா தொடர்பான குறிப்பான அரசியல் பிரச்சினைகளில் எப்படி வெடிக்கும்? இந்துமதவெறியர்களும் அமெரிக்கா மீதான அடிமைத்தனத்தில் முன்னணியாக இருக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பின் போது ஒரு விசுவ இந்து பரிஷத் தலைவர் அதிபர் கிளிண்டனை கிருஷ்ண பகவான் போல உருவகித்து நமஸ்கரித்து கடிதமே எழுதியிருக்கிறார்.
பார்ப்பனியம் என்றால் என்ன, பார்ப்பனியத்தின் அரசியல் திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியாதவர்கள் சு.சாமி, சோ ராமசாமியை நெருக்கமாக கண்காணித்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம். அதே நேரம் பார்ப்பனிய பாசிசத்தின் கோமாளி வேடத்தை மட்டுமல்ல, புரோக்கர் வேலைகளையும் இருவரும் செய்து வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை: