புதன், 29 ஆகஸ்ட், 2012

கிரானைட் கிங்’ பி.ஆர்.பி. கொலை மிரட்டல்: இதில் எங்கோ ‘புகை’ வருகிறதே

Viru News
“ஆயிரம் கோடிகளில் முறையீடு செய்தார்” என்ற குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி மீது, “ஆறரை ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பிடுங்கினார்” என்று ஒரு கொலை மிரட்டல் வழக்கும் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக, இதுவரை 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபரான பி.ஆர். பழனிச்சாமி மீது பதிவாகி உள்ளன. அதாவது, இதுவரை பதிவான வழக்குகளில் மூன்றில் ஒரு வழக்கு இவர் கணக்கில்தான் உள்ளது என்ற நிலையில், கொலை மிரட்டல் வழக்கும் வந்து சேர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில், பி.ஆர்.பி. எங்கெல்லாம் தோண்டினார் என்பதை மட்டும் விசாரிப்பதுடன் நின்றுவிடாமல், பி.ஆர்.பி. வாங்கி குவித்த சொத்துகள் குறித்து தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. மதுரை மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களிலும் அவருக்கு ஏறத்தாழ 2,000 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது வேற கேஸூங்க
இப்படியான ஒரு நில விவகாரத்திலேயே, இவர் மீதான கொலை மிரட்டல் புகார் வருகிறது.கோவையைச் சேர்ந்த அரசு துணை வழக்குரைஞர் பிரேமா கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில், யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரின்படி, மதுரை வடக்கு ராஜாக்கூர் உட்கோட்டம் சிவலிங்கம் கிராமத்தில் பிரேமா கருணாகரனுக்குச் சொந்தமாக ஆறரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், அப்பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. நிலத்தின் அருகே, பி.ஆர்.பி. நிறுவனத்தின் கிரானைட் குவாரி செயல்பட்டு வந்தது.
நிலத்தை பி.ஆர்.பி,யும் வேறு சிலருமாக சேர்ந்து குத்தகைதாரரிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கியுள்ளதாக புகாரில் கூறப்படுகிறது.
இதன் பேரில் பி.ஆர்.பழனிச்சாமியுடன், தாமரைப்பட்டியின் அப்போதைய சார்பதிவாளர் நெல்சன் மீதும், யா.ஒத்தக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 147 (கூட்டாகச் சேர்ந்து மிரட்டுதல்), 341 (மிரட்டல்), 506 (1) (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வருகின்றன இந்த வழக்குகள்.
ஏற்கனவே மூன்று நாள் போலீஸ் காவலில் வைத்து பி.ஆர்.பி.-யிடம் விசாரணை நடத்திய போலீஸ், விசாரணையில் அவர் சொன்னவற்றை அவரது வாக்குமூலமாக எழுதி, அதில் பழனிசாமியிடம் கையெழுத்து கேட்டபோது அவர் கையெழுத்திட மறுத்திருந்தார். கையெழுத்திடா விட்டால், மீண்டும் ஒருவாரம் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்யப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டதால், வேறு வழியின்றி கையெழுத்திட்டதாக தகவல் உள்ளது.
இந்த கொலை மிரட்டல் வழக்கு, பி.ஆர்.பி.-யை மீண்டும் ஒரு தடவை போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு மனு செய்ய, சிலருக்கு உதவக்கூடும். (விவகாரம் புரிகிறதா?)

கருத்துகள் இல்லை: