பட்டுப்பாதை
எனப்படும் சில்க் ரோட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘பட்டுப்பாதை’
என்பது உலகமே சீனப் பட்டுக்கு ஆசைப்பட்டு அதை வாங்கத் துடித்த காலத்தில்
பல்வேறு நாடுகளைச் சார்ந்த வியாபாரிகள் பட்டு வாங்க சீனத்துக்கு சென்றுவரப்
பயன்படுத்திய பாதை. பணம் கொழித்த பாதை.
இதில் இரு வழிகள் தெரியும். ஒன்று தரை மார்க்கமான பாதை மற்றொன்று கடல்
மார்க்கமான பாதை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தரை மார்க்கமாகவும், கடல்
மார்க்கமாகவும் பாதைகள் இருந்தன. இதை, இன்னொரு கோணத்தில் சொன்னால் வட
இந்தியாவுடன் தரைவழித் தொடர்பையும், தமிழகம் போன்ற தென்னிந்தியப்
பகுதிகளுடன் கடல்வழித் தொடர்பையும் சீனர்கள் கொண்டிருந்தார்கள் எனக்
கொள்ளலாம்.ஏனென்றால், தரைவழியே தமிழகத்திலிருந்து சீனா சென்றடைய சிக்கல் மிகுந்த பாலைவனங்கள், காடுகள் எனப் பல பகுதிகளையும் இமய மலையையும் கடக்கவேண்டி இருக்கும். தட்பவெப்ப நிலையும் சாதகமானது அல்ல. எனவே தரைவழியைவிட கடல்வழிப் பாதையையே அதிகம் பயன்படுத்தினர்.
போதிதர்மர் வாழ்ந்த காலத்தில் இக்கடல்வழி பட்டுப்பாதை வழியேதான் சீன-தமிழக வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். அது மட்டுமில்லாமல், போதிதர்மர் தங்கள் நிலத்தைக் கடந்தே சீனா சென்றார் என்று சுமத்ரா, கம்போடியா, மலேசியா, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகள் தீர்மானமாக அறிவிக்கின்றன. மலேசிய தற்காப்புக் கலையான ‘சிலாத்’ போதிதர்மர் வாயிலாகவே அறிமுகமானதாக மலேசியர்கள் கருதுகிறார்கள்.
இதுவும் கணக்கில் கொள்ளத்தக்கதுதான். காம்பே (Kambe) போன்ற வரலாற்றாசிரியர்கள் இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டு, சில சான்றுகளையும் அளிக்கிறார்கள். காம்பே கூறுவதாவது: ‘தற்போதைய கப்பல்களைப்போல் போதிதர்மர் காலத்தில் எரிபொருளால் துரிதமாக இயக்கப்படும் மிகப்பெரும் கப்பல்கள் எல்லாம் இல்லை. எல்லாம் பாய்மரக் கப்பல்கள் தான். பருவக்காற்றை கணக்கிட்டு ஓட்டப்படும் கலங்கள்தான். அதேபோல், பல நாட்களுக்கு உணவுப்பொருளை பதப்படுத்தி வைக்கும் நுட்பங்கள் எல்லாம் அப்பொழுது கிடையாது. அதனால், தாங்கள் செல்லும் வழியில் இருக்கும் நாடுகள் பலவற்றில் நிறுத்தி உணவுப்பொருள்களை நிரப்பிக்கொண்டு, பயணத்துக்குத் தக்க பருவம் வரும்வரை காத்திருந்து தான் பயணத்தைத் தொடர்வர்.’
போதிதர்மரும் இவ்வாறுதான் சென்றிருப்பார். பெரும் துறவி என்பதால் வழிநெடுகிலும் உள்ள நாடுகளின் மன்னர்கள் அவரை விருந்தினராக வரவேற்று உபசரித்திருப்பார்கள். போதிதர்மரும், அங்கிருக்கும் பௌத்த மடங்களில் சில காலம் தங்கிவிட்டு, பௌத்தத்தைப் பரப்பிவிட்டு, தக்க பருவம் வரும்பொழுதுதான் கிளம்பியிருப்பார். ஏனென்றால் பௌத்த மத பிக்குகள் மழைக் காலங்களில் பயணம் மேற்கொள்ளமாட்டார்கள். இதனால் போதிதர்மர் இலங்கை, ஜாவா, சுமத்ரா, மலேயா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் வழியாக குவாங்சூவ் (Guǎngzhōu) வந்திருப்பார். இதுதான் போதிதர்மர் சீனா சென்ற பாதை.
இதை வைத்தும் வட இந்தியாவையும் திபெத்தைக் காட்டிலும் இந்நாடுகள் போதிதர்மரைக் கொண்டாடுவதை வைத்தும் இன்னபிற சான்றுகளை வைத்தும், போதிதர்மர் வட இந்தியத் தரைவழி பட்டுப்பாதையை விட கடல்வழி பட்டுப்பாதை வழியாகவே சீனா சென்றார் என அடித்துக் கூறுகிறார் காம்பே.
அதேநேரத்தில் சீன ஆசிரியர்கள் தான்லின், லியோயங், தாவோக்வஷுவான் ஆகியோர் போதிதர்மர் இந்தியாவிலிருந்து தரை மார்க்கமாகவே சீனா வந்ததாகப் பதிவு செய்திருக்கின்றனர்.
0
போதிதர்மர் இந்தியாவிலிருந்து சீனா செல்லும்பொழுது வயதானவராகத்தான் இருந்தார். சரியாக எத்தனை வயது என்பதற்குக் குறிப்புகள் இல்லை. 100 வயதுக்கு மேல்தான் போதிதர்மர் சீனா வந்தார் என ‘தான்லின்’ போன்ற சீன ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
அதே வேளையில், ஜெஃப்ரி ப்ராடன் (Jeffery L.Broughton), ஜான் ரே (John McRae) போன்றவர்கள் போதிதர்மர் சீனா வரும்போது அவர் நிச்சயம் இளைஞர் இல்லை, வயது ஐம்பதுக்கும் மேல் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம் என்கின்றனர்.
ஆகையால் ஐம்பது வயதுக்கு மேல் தான் போதிதர்மர் சீனப் பயணம் மேற்கொண்டார் என்பது தெளிவான கருத்து. ஐம்பது வயதில் ஒருவர் இமயமலையைக் கடந்து சீனா செல்வதெல்லாம் எட்டாவது அதிசயம். ஆகையால், சீனாவுக்கு கடல்வழியே தான் சென்றார் என்ற முடிவுக்கு இன்றைய நவீன மேற்கத்திய ஆசிரியர்கள் வருகின்றனர்.
அதேபோல், போதிதர்மர் எந்தத் துறைமுகத்தில் கப்பலேறினார் என்பதற்கும் ஆதாரம் ஏதுமில்லை. அந்தக் காலகட்டத்தில் வியாபாரிகளுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் காஞ்சி முக்கிய நகரமாக இருந்ததால் காஞ்சிக்கு அருகில் நிறைய துறைமுகங்கள் இருந்திருக்கும். அப்படி காஞ்சிக்கு அருகே இருந்த ஏதாவதொரு துறைமுகத்தில் தான் போதிதர்மர் கப்பல் ஏறியிருப்பார் என்பது பொதுவான கருத்து. இப்படி இருக்கும் வேளையில் காம்பே போன்ற சில வரலாற்று அறிஞர்கள் அவர் மாமல்லபுரத்தில் கப்பலேறியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள்.
கப்பலேறும்போது அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல் என்பதைப் பார்த்தோம். அவர் நல்ல திடகாத்திரமான உடலைப் பெற்றிருந்தார். மிகப் பெரிய பானைத் தொப்பையுடன் அவர் இருந்ததாக அவர் காலத்தைச் சார்ந்த சீன சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ‘சீனர்களிடம் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஒரு வினோத கருத்து நிலவியது. அதாவது மனிதனின் மூளை அவனது வயிற்றில் உள்ளதென அவர்கள் கருதினார்கள். அதனால் மரியாதைக்குரிய முக்கியஸ்தர்களின் உருவத்தை வரையும்பொழுதும் சிற்பமாகச் செதுக்கும் பொழுதும், எழுத்தில் வடிக்கும்பொழுதும் அவர்களுக்கு அறிவு அதிகம் என்பதைக் காட்ட வயிற்றை சற்று வீங்க வைத்துவிடுவர். இதன் விளைவாகக்கூட போதிதர்மர் பெரும் வயிற்றை பெற்றிருக்கக் கூடும்’ என்றும் சிலர் கருதுகிறார்கள்.
போதிதர்மருக்கு கோலி குண்டைப் போன்ற மிகப் பெரிய கண்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது விழிகள் நீல நிறத்தில் இருந்தாகவும், பார்ப்பவரை அடிபணியச் செய்யும் ஆற்றல் பெற்றிருந்ததாகவும், மொத்தத்தில் அவர் ஒரு நீலக்கண் காட்டுமிராண்டியைப் (Blue Eyed Barbarian) போல் இருந்ததாகவும் சீன வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நடுத்தர உயரம், தலையில் மிகப் பெரும் வழுக்கை, விளையாட்டு மைதானத்தைப் போல் பரந்து விரிந்த மார்பு, மீசைபோல் அடர்ந்த புருவங்கள், வாயை மறைக்கும் மீசை, ஒழுங்கில்லாத காடுபோல் தாடி. மரத்தை உடைத்து எடுத்துக்கொண்டு வருவதைப்போல் கையில் ஒரு தடி, காவி நிறத்தில் இரு முரட்டுத் துணிகளால் ஆன ஆடை. இன்ன பிற பொருள்களை அடக்கி தோளில் ஒரு பொதி. இதுதான் போதிதர்மரின் உருவம் என்று வர்ணிக்கப்படுகிறது. போதிதர்மரின் தோற்றம் பற்றிய இக்கருத்தில் அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஒன்றிவிடுகின்றனர். ஆதலால், படங்களில் காட்டப்படும் கட்டுமஸ்தான இருபது வயது போதிதர்மரை தயவுசெய்து மனத்தில் இருந்து அகற்றிவிடுங்கள். அடுத்து வரைபடத்தைக் கூர்ந்து கவனியுங்கள், போதிதர்மரின் வழித்தடங்களை பின் தொடர.
தமிழகத்திலிருந்து இந்தோனேஷியத் தீவுகள் வழியே தென் சுமத்ராவுக்குச் செல்கிறார். அங்கிருந்து மலேயா, தாய்லாந்து, வியட்னாம் என கடல் வழியாகவே பயணம் செய்து முத்து ஆற்றை Pearl River) அடைந்து அங்கிருந்து தென்சீனத்தை அடைகிறார். எப்படிப் பார்த்தாலும் அவருக்கு சீனா சென்று சேர பல ஆண்டுகள் பிடித்திருக்கும் என்று மட்டும் தெரிகிறது. மூன்று ஆண்டுகள் என்பது பொதுவான கருத்து. இத்தனை ஆண்டுகளை அவர் சீன மொழியை கற்றுக்கொள்ளவும், அவர்களது பண்பாட்டை அறிந்துகொள்ளவும் பயன்படுத்தியிருக்கக் கூடும்.
எது எப்படியோ அவர் தமிழகத்தில் இருந்து கடல் வழியே பயணம் செய்து தென் சீனத்தை அடைகிறார். தென் சீனத்தில் அவர் முதலில் நுழைந்த இடம் எது? Nanyue, Qi/Qin, Guǎngzhōu, Canton என்று பல்வேறு பெயர்கள் முன்மொழியப்படுகின்றன. இவை ஒன்றும் ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் தனித்தனிப் பகுதிகள் அல்ல. அனைத்தும் ஒரே மாகாணம் தான். காலம் தான் வேறு வேறு. புரியவில்லையா? கலிங்கத்தையும் ஒரிஸாவையும் ஒடிஸாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். இவை ஒரே பெயரைத்தான் குறிக்கின்றன அல்லவா?
போதிதர்மரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று நாம் கொண்டிருப்பதால் ‘குய்’ என்றே இத்தென்சீன நிலப்பரப்பைக் கொள்வோம். கம்போடியா, வியட்நாம் வழியாக குய் பகுதிக்குள் நுழைவது சுலபம். அதே போல், கடும் பனிப்பிரதேசமான வட சீனத்தைவிட தென் சீனம் சற்று தமிழகத்தைப் போல்தான் இருக்கும். தட்பவெப்பமும் நமக்கு ஏற்றாற் போல்தான் இருக்கும். இதனாலேயே அக்காலத்திய தமிழகப் பயணிகளின் முதல் விருப்பம் தென்சீனம் தான். இப்பகுதியில்தான் போதிதர்மரும் தரை இறங்குகிறார்.
போதிதர்மர் சீனம் சென்றடைவதற்கு முன்பே அவர் சீனம் வருகிறார் எனும் செய்தி சீனா சென்றடைந்துவிட்டது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக