இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் தீண்டாமையை அறவே ஒழிக்கும் வகையிலும், அனைத்து மக்களும் சுதந்திரமாக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையிலும், தீண்டாமை இல்லாத வகையில் செயல்படும் கிராமங்களை, மாவட்டத்திற்கு ஒரு கிராமம் (சென்னையைத் தவிர) என்ற வகையில் 31 கிராமங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கிராமத்திற்கும் 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற நிலைமையை விரைவில் உருவாக்கும் வகையில், தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையினை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம், 31 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு கிராமத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 31 கிராமங்களுக்கு பரிசுத் தொகையாக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த பரிசுத்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்கள் உள்ளுர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொதுக்கோயில், குடிநீர்க் கிணறு, கடைகள், ஒட்டல்கள், குளம், ஏரி, சலூன் ஆகியவற்றைச் சுதந்திரமாக அனுபவிக்கும் கிராமமாக இருக்க வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்ற தத்துவத்தை கடைபிடிக்கும் மக்கள் உள்ள கிராமமாக இருக்க வேண்டும்.
அனைத்து சமூகத்தினரும் பல ஆண்டுகளாக சுமூகமாக நல்லுறவுடன் வாழும் கிராமமாக இருத்தல் வேண்டும்.
தமிழக அரசு வழங்கும் பரிசுத் தொகையைக் கொண்டு அந்தந்த கிராமங்கள், தங்கள் கிராமங்களின் பொது முன்னேற்றப் பணிகளான குடிநீர் வசதி செய்தல், பாதை வசதி மேம்பாடு, பள்ளிக் கட்டடம் சீர் செய்தல், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் கட்டுதல், புதிய விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மற்றும் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ஊராட்சியே முடிவு செய்யும் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக