ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: நிறுத்தி வைக்க முடிவு

புதுடில்லி:நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, சுரங்க ஒதுக்கீடு உரிமங்களை நிறுத்தி வைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், சரியான ஏல நடைமுறையை பின்பற்றாததால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது. "சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, நிலக்கரி இலாகாவை கவனித்து வந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக பார்லிமென்ட் முடங்கியுள்ளது. பார்லிமென்டை சுமுகமாக நடத்துவதற்கு, அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு தரப்பு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்து, அளித்த உரிமங்களை, நிறுத்தி வைக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய கனிம வளத் துறை இணை அமைச்சர் தீன்ஷா படேல் கூறுகையில், ""இந்த விஷயத்தில், சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து, பதில் வரும் வரை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு உரிமங்களை நிறுத்தி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை: