புதன், 29 ஆகஸ்ட், 2012

திரையிசைச் சக்கரவர்த்தி MSVக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா!



சென்னை: சென்னையில் இன்று மாலை நடந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திரையிசை சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 
 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் வழங்கப்பட்ட பட்டம் மெல்லிசை மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். இன்றும் கூட இதயங்களில் அவர்களது பாடல்கள் ஒலித்துக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் உள்ளன.

1963ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமியில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில்தான் முதல் முறையாக மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் இந்த இசை மன்னர்களுக்கு வழங்கப்பட்டது. அதை வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார்.
அன்று முதல் இவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் என்றும் மெல்லிசை மன்னர்கள் என்றும் அழைக்கப்படலாயினர். இன்று வரை இந்தப் பெயர்தான் இவர்களுக்கு நிலைத்து வருகிறது.
ஆனால் இன்று முதல்வர் ஜெயலலிதா எம்.எஸ்.விக்கு புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார். அது - திரையிசை சக்கரவர்த்தி என்பதாகும். இந்தப் பெயரைச் சொல்லித்தான் என்று எம்.எஸ்.வியை வாழ்த்திப் பேசினார் ஜெயலலிதா.
எம்.எஸ்.வி என்றால் மெல்லிசை மன்னர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில், அந்தப் பிரபலமான பெயரில் அழைக்காமல், புதிய பட்டப் பெயரை ஜெயலலிதா கொடுத்தது ஏன் என்பது பலருக்கும் புரியவில்லை.
இருப்பினும் இந்தப் பட்டத்தை ஜெயலலிதா அவராகவே தரவில்லை. ஜெயா டிவி சார்பில் எம்.எஸ்.விக்கு எந்தப் பட்டம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று மக்களிடையே கடந்த 15 நாட்களாக ஊர் ஊராகப் போய் வாக்கெடுப்பு நடத்தினார்களாம். அந்த வாக்கெடுப்பில் பலரும் பல பட்டங்களைப் பரிந்துரைத்துள்ளனர். அதில் இந்த திரையிசை சக்கரவர்த்தி என்ற பட்டத்துக்கு அதிக ஆதரவு கிடைத்ததாம். இதனால் அந்தப் பட்டத்தை இன்றைய விழாவில் ஜெயலலிதா மூலம் கொடுத்துள்ளனராம் ஜெயா டிவி நிர்வாகத்தார்.
எப்படி இருந்தால் என்ன, இந்தப் பெயரும் நன்றாகத்தானே உள்ளது...

கருத்துகள் இல்லை: