வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

நாம் நொண்டியடித்துக் கொண்டிருப்பது உண்மைதான்

பால ராமாயணத்தில் ஆரம்பித்து பாகவதம், கஜேந்திரமோட்சம், குசேல புராணம் என பெரிதும் புராணப் பாடங்களே மிகுதியாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, வேத வேதாந்த விசாரங்களின் சாராம்சமானது கதை வடிவில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அங்கு போதிக்கப்பட்டிருக்கின்றன.

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 6
தரம் பால் தொகுத்துத் தந்திருக்கும் புள்ளிவிவரங்களில் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள், பள்ளியில் சேர்க்கப்படும் வயது, எத்தனை வருடம் கல்வி கற்றனர், உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை எனப் பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தரம்பால் அந்தத் தகவல்களைச் சேகரித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம்தான் அவற்றைச் சேகரித்திருந்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாரசீகம் என அவரவர் தாய்மொழிகளில் பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. ஆங்கிலம்கூட சில பள்ளிகளில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. பள்ளியில் சேர்க்கும் வயதானது மாவட்டத்துக்கு மாவட்டம் சிறிய வேறுபாடுகளுடன் இருந்திருக்கிறது. ராஜமுந்திரி பகுதியைப் பொறுத்தவரையில் ஐந்து வயது, ஐந்தாம் மாதம், ஐந்தாம் நாள் என்பது பள்ளியில் சேர்ப்பதற்கு சுப தினமாகக் கருதப்பட்டிருக்கிறது.
கடப்பாவைப் பொறுத்தவரை பிராமணச் சிறுவர்கள் ஐந்திலிருந்து ஆறு வயதுக்குள் பள்ளியில் சேர்ந்துவிட்டிருந்தனர். சூத்திரர் வகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் ஆறிலிருந்து எட்டு வயதுக்குள் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களில் ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் வரை கல்வி ஆண்டு இருந்திருக்கிறது. மதராஸ் கவர்னர் இது தொடர்பாகச் சொல்கிறார்: மாணவர்கள் பதிமூன்று வயதை அடைவதற்கு முன்பாகவே பல்வெறு கல்வித்துறைகளில் கணிசமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்துவிடுகிறார்கள்.
பள்ளியானது அதிகாலையில் ஆறுமணிக்கே ஆரம்பித்ததாகத் தெரியவருகிறது. இரண்டு இடைவேளைகள், மதிய உணவு இடைவேளை என இருந்திருக்கின்றன. சில இடங்களில் மாலை சூரியன் மறைவது வரைகூட வகுப்புகள் நடந்திருப்பதாகத் தெரியவருகிறது. எழுதவும் படிக்கவும் முக்கியமாக கற்றுத்தரப்பட்டிருக்கிறது. கணிதமும் முக்கியப் பாடமாக இருந்திருக்கிறது. பால ராமாயணத்தில் ஆரம்பித்து பாகவதம், கஜேந்திரமோட்சம், குசேல புராணம் என பெரிதும் புராணப் பாடங்களே மிகுதியாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, வேத வேதாந்த விசாரங்களின் சாராம்சமானது கதை வடிவில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அங்கு போதிக்கப்பட்டிருக்கின்றன. இவையே நாடகமாக, தெருக்கூத்துகளாக, பொம்மலாட்டமாக, தோல்பாவைக் கூத்தாக பல்வேறு வடிவங்களில் சமூகத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சென்று சேரும் வகையில் தரப்பட்டிருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
உயர் கல்வியைப் பொறுத்தவரையில் வேதங்கள், வான சாஸ்திரம்,கணித சாஸ்திரம்,தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், தத்துவ விசாரம், மருத்துவம் என பல துறைகள் இருந்திருக்கின்றன. வேதங்கள், தத்துவ விசாரங்கள், நீதி சாஸ்திரம் போன்றவற்றைப் பெரிதும் பிராமணர்கள் மட்டுமே கற்றிருக்கிறார்கள். வான சாஸ்திரம், மருத்துவம் போன்றவற்றை அனைத்து சாதியினரும் கற்றிருக்கிறார்கள். கேரளாவைப் பொறுத்தவரையில் வான சாஸ்திரம் படித்த மொத்தம் 808 பேரில் 78 பேர் மட்டுமே பிராமணர்கள். மருத்துவம் படித்த 194 பேரில் 31 பேர் மட்டுமே பிராமணர்கள். மதராஸைப் பொறுத்தவரையில் மருத்துவம், அறுவை சிகிச்சை போன்றவற்றை பல்வேறு சாதியினர் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் மருத்துவர்களின் பார்வையில் மதராஸைச் சேர்ந்த சிகை அலங்காரத்தொழிலில் ஈடுபட்ட பிரிவினரே அறுவை சிகிச்சையில் நிபுணர்களாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உலகம் யாரால், எப்படி உருவாக்கப்பட்டது, உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்ன போன்ற கேள்விகளால் தூண்டப்பட்ட பிரிவினர் அது சார்ந்த பாடங்களைக் கற்றிருக்கிறார்கள். இந்த உலக வாழ்க்கையே மாயை என்று கூறும் அளவுக்கு அது தத்துவார்த்த அம்சங்களைக் கொண்டதாக இருந்திருக்கிறது. அதே நேரம் இந்த உலக வாழ்க்கையை கொண்டாட்டமாக, கேளிக்கையாக பார்க்கும் பார்வையும் இருந்திருக்கிறது. லவுகீகத் தேவைகளே பிரதானம் என்று நினைத்த பிரிவினர் அது சார்ந்த கல்வியைத் தேடிப் பெற்றிருக்கின்றனர். பர வித்யா, அபர வித்யா என கல்வியானது இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு கற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது, அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. உயர் கல்வியானது வாழ்க்கைப் பார்வை சார்ந்து பெறப்பட்டிருக்கிறது.
பிராமணச் சிறுவர்களின் கல்வியைப் பற்றி கூடுதலாக பிரிட்டிஷ் ஆவணங்களில் இன்னொரு தகவலும் தரப்பட்டிருக்கிறது. கடப்பா, குண்டூர் பகுதிகளில் ஏழை பிராமணச் சிறுவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து 10 முதல் 100 மைல் தொலைவில் இருக்கும் பள்ளிகளில் சேர்ந்து படித்திருக்கிறார்கள். வீடு திரும்ப பல வருடங்கள் ஆகும். சில நேரங்களில் கல்வி கற்ற கிராமத்திலேயே கூட தங்கிவிடுவதும் உண்டு. எந்த கிராமத்தில் தங்கி இருக்கிறார்களோ அந்த கிராமத்தினரே அந்தச் சிறுவர்களுக்கு தினமும் உணவுகொடுத்து பராமரித்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு பிராமணர் வீட்டின் முன்னாலும் சென்று யாசகம் பெற்றே உணவுத்தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.
இது தவிர வீடுகளில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிகின்றன. பெற்றோர், உறவினர்கள் அல்லது தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்தும் பலர் கல்வி கற்றிருக்கிறார்கள். கேரளத்தில் இது ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக மருத்துவம் சார்ந்த உயர் கல்வி இப்படிப் பெறப்பட்டிருக்கிறது. இப்படியான மருத்துவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்திருக்கிறார்கள். நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், மெய்யியல், கவிதை, இலக்கியம் போன்றவையும் நிறுவனம் சாராமல் பரவலாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. மதராஸிலும் தனிப்பட்ட முறையில் கற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்திருக்கிறது. சூத்திரர்களில் 28.7%, இன்று தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சாதியினரில் 13% அப்படியான கல்வி பெற்றிருக்கிறார்கள்.
பள்ளிகளில் கல்வி கற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால், மலபாரிலும் விசாகபட்டணத்தில் ஜெய்ப்பூர் ஜமீனிலும் மட்டும் பெண்கள் கணிசமான அளவில் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும் இந்தப் பகுதிகளில் இந்த ஒற்றுமை இருந்தது எப்படி என்பது ஆய்வுக்குரியது.
பள்ளிகள் களி மண்ணால் கட்டப்பட்டு கூரை வேய்ந்ததாக இருந்திருக்கின்றன. ஓரிரு அறைகளில் ஆரம்பித்து 11 அறைகள் வரை கொண்டதாக இருந்திருக்கின்றன. வீடுகளில் திண்ணைகளில் அமர்ந்தும் கல்வி கற்றிருக்கிறார்கள்.
ஆரம்பக் கல்வியானது நான்கு கட்டமாகக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. முதலில் அகர வரிசை எழுத்துகளை மணலில் சிறிய குச்சியால் எழுதிப் படித்திருக்கிறார்கள். இரண்டாவது கட்டமாக பனை ஓலையில் எழுதிப் படித்திருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கணிதத்தைப் பொறுத்தவரை 100 வரை எழுதிப் படித்திருக்கிறார்கள். நிலங்களின் அளவு தொடர்பான விஷயங்களும் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. இதன் அடுத்த கட்டத்தில் வாழை இலையில் எழுதிப் படித்திருக்கிறார்கள். அதில் கூட்டல், கழித்தல் போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. நான்காவது கட்டத்தில் காகிதத்தில் எழுதிப் படித்திருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் ராமாயணம் போன்ற காவியங்களை எழுதிப் படிக்கத் கற்றுக் கொள்வார்கள். கடிதங்கள், மனுக்கள் எழுதுதல், கணக்கு வழக்குகள் போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன.
சமூகத்தின் அனைத்து பிரிவில் இருந்தும் ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். இரு பிறப்பாளர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் பிற 30 வகை ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். சந்தால் வகுப்பைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கைப் பார்த்தால் பிஹார் பகுதியில் பிராமண, காய்ஸ்த சாதியைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 15-16%கூடத் தாண்டவில்லை. பர்த்வான் மாவட்டத்தில் வைசியர்களின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட இணையாக, சந்தால் எனும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த மாவட்டத்தில் 13 கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளும் இருந்திருக்கின்றன. ஆனால், அங்கு படித்த தலித் சிறுவர்களின் எண்ணிக்கை வெறும் 86 தான். ஆனால், சுதேசிப் பள்ளிகளில் படித்த தலித் சிறுவர்களின் எண்ணிக்கையோ 674.
போக்குவரத்து வசதிகளும் அச்சு ஊடகமும் பெரிதாக இருந்திருக்காத ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி இவ்வளவு விரிவாகவும் அனைத்து சாதியினரை உள்ளடக்கியதாகவும் இருந்தது மிகவும் ஆச்சரியமானதுதான். இந்தத் தரவுகளைச் சேகரித்த பிரிட்டிஷாருக்கு யதார்த்த நிலை இப்படி இருந்ததைப் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. கிறிஸ்தவ ரட்சிப்பும் ஐரோப்பிய அரசாட்சியும் இல்லாமலேயே உலகில் நல்ல விஷயங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர்கள் அப்படி நினைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், அந்த 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிரிட்டனும் ஐரோப்பிய தேசங்களும் இந்தியாவை ஒப்பிடும்போது கல்வியிலும் பல மடங்கு பின் தங்கியதாகத்தான் இருந்திருக்கின்றன. அங்கு அதுவரை சமுகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இருந்த கல்வி என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் பைபிள் வகுப்புகளில் சொல்லித்தரப்பட்ட வேதாகமக் கல்வியாக மட்டுமே இருந்தது.
இன்று அவர்கள் வாழ்வின் பல தளங்களில் நாம் எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த முன்னேற்றம் என்பது நேர்மையான வழியில் பெறப்பட்டதல்ல. தன்னை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்த ஒருவருடைய காலை உடைத்துப் போட்டுவிட்டு ஓடிப் பெற்ற வெற்றி.
இன்று நாம் நொண்டியடித்துக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், நாம் முடமாகவே பிறந்தவர்கள் அல்ல. முடமாக்கப்பட்டவர்கள். அதையும் மீறி நாம் சாதிக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பது வேறு விஷயம். என்றாலும் காலத்தைத் திருப்பி வைக்கும் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், இந்தியாவில் காலடி எடுத்து வைத்த முதல் ஐரோப்பியனை அப்படியே அவன் வந்த கப்பலிலேயே திருப்பி அனுப்புவதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் செயல்.
மிகவும் சிறிய செயல்தான். ஆனால், அதைச் செய்யாததால் நமக்கு ஏற்பட்டதோ பேரிழப்பு.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: