சனி, 9 ஜூன், 2012

Vishvarupam அமெரிக்கா இனி கமல்ஹாசனை விருந்தினராக

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

கமல்ஹாசனுக்கு இனி அமெரிக்காவிற்கு விசா உடனே கிடைக்கும்.
இந்திய இஸ்லாமியார் என்பதற்காகவே அப்துல்கலாம், ஷாருக்கான் போன்ற பெரிய தில்லாலங்கடிகளையே பேண்டை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இனி கமல்ஹாசனை விருந்தினராக உபசரிக்கும்.
அதை நம்மஊர் அறிஞர்கள் ‘உலக நாயகனை ஹாலிவுட் அழைக்கிறது, இனி ஹாலிவுட் படங்களின் தரத்தை நம்மவர் உயர்த்துவார்’ என்று மொழி மாற்றம் செய்வார்கள்.

கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம்.
சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது.
இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது.
‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார்.

வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார்.
மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார்.
‘தருகிறேன்’ என்று மகாபலி மன்னன் கூற, உடனே அப்பு கமலாக இருந்த திருமால், தசாவதார கமலாக விஸ்வரூபம் எடுத்து தனது ஒரு அடியால் பூமியையும் இன்னொரு அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு காலை உயர்த்தி மகாபலி மன்னன் தலைமீது வைத்ததாகப் புராண கதை இருக்கிறது.
அதுபோல், இந்த முறை ‘விஸ்வரூப’த்தில் கமல், இஸ்லாமியர்கள் தலையில் காலை வைத்திருப்பார் என்றுதான் அந்த விளம்பரம் உணர்த்துகிறது.
அரபி எழுத்து வடிவம், இஸ்லாமியர்களை குறிக்கிறது. விஸ்வரூபம் என்பது இந்து அடையாளமாக இருக்கிறது.
‘இது என்ன நியாயம்? படம் வருவதற்கு முன்னே இப்படியெல்லாம் எழுதுவது மோசடியல்லவா?’  என்று கமல் ஆர்வலர்கள் கொதிக்கக் கூடும்.
கமலின் முந்தைய படங்களில் உள்ள அரசியலே, இந்த படத்தின் முன்னோட்ட விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு படத்தின் கதையை யூகித்து, பாராட்டி முன்னோட்டமாக எழுதும்போது, அதே முறையில் அதை விமர்சித்து எழுதினால் தப்பா?
உன்னை போல் ஒருவன் படத்தில், தமிழகத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய கமல், இந்த முறை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளிடமி ருந்து அமெரிக்காவை காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன்.
தலையில் முக்காடிட்ட கமல், பின்னணியில் அமெரிக்க நகரம், அரபி எழுத்தில் விஸ்வரூபம்… நடுநிலை நாடகத்திற்கு சமாதானப்புறா (சமாதானத்தை வறுத்து தின்பவனே அமெரிக்காகாரன்தான்)
இந்த விஸ்வரூபம் அமெரிக்காவை பாதுகாக்குமா..?
நல்லவனைப்போல் நடித்து கழுத்தறுப்பதில் கில்லாடியான திருமால், அன்று வாமன அவதாரத்தில் இரண்டே அடியில் இன்றைய அமெரிக்காகாரனைப்போல் உலகத்தை பிடித்தான்.
தனது ‘ஜனநாயகம்’ என்கிற அவதாரம் கொண்டு உலகையே வளைக்க துடிக்கிறது இன்றைய வாழும் திருமாலான, அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய சர்வாதிகாரம்.
அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய, கிறித்துவ அமெரிக்காவை, சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து, இந்தியாவை சேர்ந்த  ஒரு வைணவ இந்து காப்பாற்றுகிறார் என்பது கூட கதையாக இருக்குமோ என்கிற எண்ணத்தை ‘விஸ்வரூப’ விளம்பரம் ஏற்படுத்துகிறது.
அந்த வைணவ இந்து, தசாவதாரம் படத்தில் வந்த, சோழர்காலத்து ரங்கராஜ நம்பி  என்கிற நேரடியான அய்யங்கார் அம்பியாகவும் இருக்கலாம்; அல்லது அதே படத்தில், அமெரிக்காவில் இருந்து வந்த விஞ்ஞானி பார்ப்பனரல்லாத வைணவர் கோவிந்த் நாயக்கராகவும் (நாயுடு) இருக்கலாம்.
பார்க்கலாம். நாயகன் அய்யங்காரா? இல்லை அய்யங்கார்களுக்கு அடியாளாக நடக்கிற நாயுடுவா? என்று.
ஆனால், தீவிரவாதி கண்டிப்பாக முஸ்லிமாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. ஒரு வேளை, முழுக்கதையும் தீவிரவாதியை அல்லது கெட்டவனை மய்யமிட்டு இருந்தால், சிகப்பு ரோஜாக்கள் கமல் போல், அந்த பாத்திரத்தில் கமல்ஹாசனே நடிக்கலாம்.
இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், இந்திய இந்து தீவிரவாதம். சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பொறுப்பு, அமெரிக்க அரசின் தீவிரவாதம்.
இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து, உன்னை போல் ஒருவன் என்று படம் எடுத்தபோது, இந்திய இந்து தீவிரவாதம் பற்றி வாய் திறக்கவில்லை ரங்கராஜ நம்பி.
அதனால் ‘மகா நடிகன்’ என்று மனதார பாராட்டப்பட்டார்.
சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், அமெரிக்க பயங்கரவாதம் என்பதை மறைத்து விஸ்வரூபம் எடுத்தால்,
‘உலகநாயகன்’ என்று உரத்து அமெரி்க்காவிற்கு கேட்கும்படி அழைக்கப்படுவார்.
அவரின் ஆஸ்கர் கனவும் நிஜமாகலாம்.
சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க சார்பு படமாக விஸ்வரூபம் இருந்தால், அதனால் உடனடியான நன்மை என்னவென்று கேட்கிறீர்களா?
கமல்ஹாசனுக்கு இனி அமெரிக்காவிற்கு விசா உடனே கிடைக்கும்.
இந்திய இஸ்லாமியார் என்பதற்காகவே அப்துல்கலாம், ஷாருக்கான் போன்ற பெரிய தில்லாலங்கடிகளையே பேண்டை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இனி கமல்ஹாசனை விருந்தினராக உபசரிக்கும்.
அதை நம்மஊர் அறிஞர்கள் ‘உலக நாயகனை ஹாலிவுட் அழைக்கிறது, இனி ஹாலிவுட் படங்களின் தரத்தை நம்மவர் உயர்த்துவார்’ என்று மொழி மாற்றம் செய்வார்கள்.
‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் என்பதால், கமல்ஹாசனை தன் நாட்டினுள் அனுமதிக்க ஆட்டம் காட்டிய அமெரிக்கா,
‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் அல்ல, அது நம் அடிமையின் பெயர் என்று  புரிந்து கொள்ளும்.

கருத்துகள் இல்லை: