புதன், 6 ஜூன், 2012

ஜெயலலிதாவுக்காக விடியோவை தேடி அலைந்த போலிஸ்



சசிகலா மீண்டும் கார்டனுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று ஜெ.வின் உண்மை விசுவாசிகள் தீர்க்கமாக நம்பிக் கொண்டிருந்த வேளையில்தான், ஒருநாள் அந்த நம்பிக்கையில் மண் விழுந்தது... மீண்டும் கார்டனுக்குள் என்ட்ரி ஆனார் சசி. முன்னதாக சகோதரிகள் மாறி மாறி உருக்கம் மேலிட அறிக்கைகள் விட்டு உறவுகளை புதுப்பிக்கும் செமி பைனலுக்குள் நுழைந்தது தனிக்கதை. கார்டனில் சசி நுழைந்ததும் அவர் பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. "உறவினர்கள் ஒருவ ரோடும் தொடர்பு இல்லை... அவர்கள் அக்கா (ஜெ.)வுக்கு துரோகம் செய்து விட்டார்கள். அவர்களை மன்னிக்கவே முடியாது' என்ற ரீதியில் இருந்தது அந்த அறிக்கை.
இந்தச் சூழ்நிலையில் தான் சசியின் கணவர் எம்.நடராஜனின் தம்பி எம்.ராமச்சந்திரனின் மகன் திருமணம் தஞ்சை தமிழரசி அரங்கில் கடந்த மாதம் 23-ந்தேதியன்று நடந்தது.
எம்.என்.னின் தம்பி ராமச்சந்திரனின் மகன் மண விழாவில் பழ.நெடுமாறன், திருநாவுக்கரசர், திண்டுக்கல் அய்யப்ப சுவாமிகள் பங் கேற்று வாழ்த்த... மறுபக்கம் "பாசறை'யின் மாஜி செய லாளரான டாக்டர் வெங்க டேஷ் தன் சகாக்களோடு திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தியிருக்கிறார்.
இதன் வரவேற்பு விழா 24-ந்தேதி நடந் துள்ளது.
அடுத்ததாக சசியின் தங்கை மகளுக்கு அதே தமிழரசி மண்டப மேடையில் 25-ந்தேதி எம்.என். தலைமையில் திருமணம். இதற்கு எப்படியும் சசியுடன் தொடர்பிலிருக்கிறவர்கள் போகலாம்... அல்லது சசியே கூட வாழ்த்துத் தந்தி அனுப்பும் வாய்ப்பு இருக்கிறது என்று ரொம்பவும் லேட்டாக உளவுப் பிரிவு கார்டனுக்கு போட்டுக் கொடுக்க... பதற்றமாகியிருக்கிறார் ஜெ. இதைத் தொடர்ந்தே பல அதிரடி உத்தரவுகள் போலீசுக்கு கிடைத்துள் ளது. அதே வேளையில் சசி எப்படியும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று எம்.என்.தரப்பு உறுதியாக நம்பியதால் சசிக்கு திருமண பத்திரிகையை பார்க்கும் வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தேவையற்ற பிரச்சினையை உருவாக்கிவிடும் என்று சசி தரப்பும், எம்.என்.தரப்பும் ஒரே நேர்கோட்டில் சிந்தித்ததால் மொத்தமாக இந்த மேரேஜ் விஷயத்தில் "ஆஃப்' ஆகிவிட்டிருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். சசியின் செல்ஃபோன், தொலைபேசி உரையாடல்கள் சசியின் ரீ-என்ட்ரிக்குப் பின்னர் மிகத் தெளிவாக ஒட்டுக் கேட்பு செய்யப்படுவதும் இதற்கான வலுவான காரணம் என்கிறார்கள்.

சசி-நடராஜன் தரப்பு யோசனை ஒரே மாதிரியாக இருந்தாலும், யாரையும் முழுமையாக நம்புகிற மனநிலை யில் ஜெ. இல்லை என்பதை புரிந்து கொண்ட போலீசார், 24-ந்தேதி முதல் திருமண வரவேற்பின் போது தஞ்சை விளார் கிராமத்தில் அதிரடியாக நுழைந்தனர். சில நிமிடங்களே அங்கிருந்த போலீசார் வீடியோ படப்பிடிப் பாளர்களை, "சாயந்திரம் நீங்க ஸ்டேஷனுக்கு வந்துட்டுப் போகணும்' என்று மிரட்டிவிட்டுப் போயுள்ளனர்.

திருமணத்தை வீடியோ படம் பிடித்தவர்களிடம் என்ன விசாரணை... அப்படி அந்த வீடியோவில் என்ன தான் இருக்கிறது. விலைவாசியை ஒரே நாளில் குறைத்து விடக்கூடிய அளவு ஏதேனும் அதில் "டெக்னிக்' சொல்லப்பட்டிருக்கிறதா... என்றால்... ""அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. திருமணத்துக்கு யார் யாரெல்லாம் வந்தார்கள் என்பதை அந்த வீடியோ பதிவு மூலம் அறிந்து கொள்ளலாம். ஆகவே, "பதிவான டேப்பை -அதுவும் உடனடியாக கைப்பற்றச் சொல்லி கார்டனில் இருந்து ஆணை...'' என்று சொல்லி தலையி லடித்துக் கொண்டனர் காக்கிகள்.

23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை அந்த டேப்பைத் தேடித் தேடி ஓய்ந்த போலீசார் 26-ந்தேதி நடராஜன் வீட்டுக்கே போயிருக்கிறார்கள். அங்கே என்ன நடந்தது? நடராஜனே கூறுகிறார். ""தஞ்சையில் 26-ந் தேதி செல்வாங்கிற தம்பி வீட்டுக்குள்ளேயே ஓடிவந்து, அய்யா என்னை காப்பாத்துங்கன்னு கதற ஆரம்பிச்சிட்டாரு.

என் தம்பி மகன் திருமணத்தை செல்வாதான் வீடியோ பண்ணியிருந்தாரு. "தஞ்சை தெற்கு இன்ஸ்பெக்டரு ஜெயச்சந்திரன்தான் செல்வாவைத் தேடி என் வீட்டுக் கதவைத் தட்டறாரு. அவர்மேல நடவடிக்கை கேட்டு ஹோம்ல பெட்டிஷன் கொடுத்திருக்கேன்' என்கிறார் எம்.என்.

சென்னையில் ஜஸ்ட் மிஸ்ஸில் டேப்பை கோட்டை விட்டவர், மண்ணின் மைந்தர் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் வி.தலித் ரகு. டேப்பை எப்படிப் பறித்தார்கள்?' என்றதும், குமுறலாய் வெடித்தது ரகுவின் வார்த்தைகள்.

""இப்படிக் கேவலமான அணுகுமுறையை போலீஸ் கையாளுவாங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை. 26-ஆம் தேதியன்று காலையில் தலைவரு எம்.என். கிட்டயிருந்து எனக்கு போன் வந்தது. டேப்பைத் தேடி போலீஸ் என் வீட்டுக்கு வந்துட்டாங்க. கோடம்பாக்கம் முருகதாஸ்தான் வீடியோ கவரேஜ் ஆர்டர் எடுத்தவரு. வீடியோ ஹார்டு டிஸ்க்கை உடனே வாங்கிடுங்கன்னாரு. நான் போயி ஹார்டு டிஸ்க்கையும் வாங்கிட்டேன். அப்ப தான் தேனாம்பேட்டை போலீஸ் ஏ.சி. ராஜ ராஜன் இரண்டு போலீஸோட அந்தக் கடைக்கு வந்தாரு. "ஒரு டிஸ்க் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல போகும். உங்க கடையில இந்த மாதிரி டிஸ்க்கெல்லாம் பிளாக்ல வெச்சிருக்கீங் களாமே...' என்று ஏதோ ரெய்டு வந்ததைப் போல காட்டிக்கொண்ட ஏ.சி.ராஜராஜன், கடை ஊழியர் முத்தையாவிடம் "நடராஜன் வீட்டு கல்யாண சி.டி. எங்கேய்யா?' என்று கேட்டதும்... முத்தையா என்னை கை காட்டி விட்டார். சட்டென்று என் கையில் இருந்த வீடியோ ஹார்டு டிஸ்க்கை பிடுங்கி உடனிருந்த போலீசாரிடம் ஏ.சி. கொடுத்துவிட, அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் போல அந்த டிஸ்க்கோடு அங்கிருந்து ஓடியே போய்விட்டனர்.

காலை 10 மணிக்கு பறித்த டிஸ்க்கை வைத்து பத்துக்கும் மேற்பட்ட பிரிண்ட்டுகள் போட்ட பின் மாலை 5 மணிக்கு டிஸ்க்கை என்னிடம் ஒப்படைத்தார்கள்'' என்றார் ஒரே மூச்சாக. தலித் ரகு, ஏ.சி. மீது கமிஷனரிடம் இது தொடர்பான புகார் மனுவையும் கொடுத்திருக் கிறார்.

அந்த சி.டி.யில் அப்படி எதைத்தான் உதவி கமிஷனர் ராஜ ராஜன் பார்த்து பிரிண்ட் போட்டார் என்று தெரிந்துகொள்ள அவரிடமே இதுபற்றிக் கேட்டோம்.

""எதற்காக அப்படி ஒரு கதையை சொல்றாங்கனே எனக்குத் தெரியல. நான் அந்த ஸ்பாட்டுக்கே போகலை. அந்த டிஸ்க்கை கையால கூட தொடலை. என்மேல இப்படி ஒரு கலரை ஏன் கொண்டு வர்றாங்கன்னு எனக்கே ஆச்சரியமாயிருக்கு. அதோட பேக்ரவுண்ட்டும் புரியல. என் மேலேயே புகார் வேற கொடுத்திருக்காங்க. முழுசா விசாரிச்சிட்டு இதுபற்றி உங்ககிட்ட விரிவா சொல்றேன்'' என்று முடித்துக்கொண்டார் ராஜராஜன்.

எது எப்படியோ தமிழகத்தின் தலையாய பிரச்சினையான திருமணத்துக்கு வந்தவர்களை டிக் செய்யும் பிரச்சினை அந்த வீடியோ பதிவு கிடைத்ததால் முடிவுக்கு வந்துள்ளது. "இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி' கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

-இரா.பகத்சிங்
-ந.பா.சேதுராமன்
thanks nakkeeran + suriyakumaran,Milar

கருத்துகள் இல்லை: