வியாழன், 7 ஜூன், 2012

மத்திய அமைச்சராகின்றார் டி.ஆர்.பாலு?

சென்னை: திமுக சார்பில் மீண்டும் மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு பதவியேற்க கூடும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மிக ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகி்ன்றன.
1941 ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தளிக்கோட்டையில் பிறந்த டி.ஆர்.பாலு, 1957 ம் ஆண்டு முதல் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்.
மிசா காலத்தில் ஒரு ஆண்டு சிறையில் இருந்த அவர், திமுக சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 20 முறைக்கு மேல் சிறை சென்றவர். 1986 - 1992-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

முதல் முறை 1996 ம் ஆண்டு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 1999 ம் ஆண்டு முதல் 2003 ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 2004 ம் வருடம் கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார்.
தற்போது, ஸ்ரீபெரும்புதூருக்கு திமுக எம்.பியாக உள்ளார். இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என அப்போது பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி தலைமை சிலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றும் குறிப்பிட்ட இலாகாக்கள் மட்டும் ஒதுக்க முடியும் எனக் கறாராக கூறிவிட்டது.
இதனால் திமுக தலைவர் கருணாநிதி சென்னைக்கு கோபத்துடன் திரும்பினார். ஆனால், பிரதமர் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்கும் என செய்தி வெளியானது.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் தி.மு.க. எம்.பி.க்கள் பெயர்கள் வெளியானது. அதில் தனது பெயர் இடம் பெறும் என கடைசிவரை எதிர்பார்த்து டி.ஆர்.பாலு ஏமாந்தார்.
தற்போது மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் இடம் பெற்றுள்ள அனைவருமே டி.ஆர்.பாலுவுக்கு ஜூனியர்கள் தான்.
முரசொலி மாறன் காலத்தில் இருந்து மத்திய அரசில் பங்கெடுத்து வரும் சீனியரான தன்னை திமுக திமுக தலைமை ஓரம் கட்டுவதாக அறிந்து கொஞ்ச காலம் அமைதியாகவும் இருந்தார்.
இந்த நிலையில், டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்த அதிர்ஷ்டம் கனிமொழி மூலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. கனிமொழியால் மதிக்கப்பட கூடிய தலைவர்களில் ஒருவராக டி.ஆர்.பாலு உயர்நதுள்ளாராம்.
டி.ஆர்.பாலு உதவியோடு டெல்லி அரசியல் தலைவர்களின் தொடர்பை வலுபடுத்த கனிமொழி விரும்புகின்றார். டெல்லி என்றாலே கனிமாழி தான் என்ற டாக் வரும் வரை தூக்கமில்லை என்று அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக டெல்லி பத்திரிக்கையாளர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
இதனால் டி.ஆர்.பாலுவை மத்திய அமைச்சராக்க கனிமொழி ஆதரவு தந்து, காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகின்றது.
விரைவில் ஜனாபதி தேர்தல் வரும் நிலையில், காங்கிரஸ் திமுக தயவை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கினறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காலியாகவுள்ள தனது அமைச்சர் கோட்டாவை நிரப்ப திமுக தயாராகி வருகிறதாம். அந்த கோட்டாவில் டி.ஆர்.பாலு மீண்டும் மத்திய அமைச்சர் ஆகின்றார் என்பதே டெல்லியில் அலையடிக்கும் ஹாட் நியூஸ்

கருத்துகள் இல்லை: