செவ்வாய், 5 ஜூன், 2012

Ragging போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி

சென்னை : "ராகிங், ஈவ்-டீசிங்' குறித்த தகவல்களை மாணவர்கள் நேரடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வசதியாக, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு தனியான அலைபேசி எண்கள் வழங்கப்பட்டு உள்ளதாக, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
"ராகிங்' பிரச்னை : இதுகுறித்து, தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள பட்டப்படிப்பு மற்றும் தொழிற் கல்லூரிகளில், 2012 - 13ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, கேலி செய்தல் (ராகிங்) மற்றும் பெண்களைக் கேலி செய்தல் (ஈவ்-டீசிங்) ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழ்நாடு போலீசார் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
புதிய இணையதள முகவரி : கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில், "ராகிங், ஈவ்-டீசிங்'கை தடுக்க, அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் விழிப்புணர்வுடன் பணியாற்றும் வகையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், பெண் போலீசாரும் உள்ளனர். தமிழ்நாடு போலீசின் இணையதளத்தில் (www.tnpolice.gov.in), கேலி செய்தல் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் பற்றிய புகார்களைத் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாது என்பது குறித்தும், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இதைத்தவிர, எந்த இடத்தில் இருந்தும் புகார்களை அனுப்புவதற்காக, தனியாக raggingcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் : இந்த மின்னஞ்சல் முகவரியில் பெறப்படும் புகார்கள், தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மூலமாக உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படுகிறது. இதுகுறித்த புகார்களைப்பெற, கமிஷனரகங்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு தனியான அலைபேசி எண்கள் அளிக்கப்படுகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வை அதிகரிக்க, கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் கலந்துரையாடுவர்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

புகார் பெட்டி : போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய புகார் மற்றும் தகவல்கள் ஏதும் இருப்பின், அவற்றை மாணவர்கள் தெரியப்படுத்த ஏதுவாக, கல்வி நிலையங்களில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தனி நபர்கள், அலைபேசி மூலம் குறுந்தகவல்கள் அனுப்புவதற்கு வசதியாக, அலைபேசி எண்களையும் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: