ஞாயிறு, 3 ஜூன், 2012

தமிழகத்தில் தொடரும் "ஆன்-லைன்' : பேராசை பெரும்நஷ்டம்

மதுரை:"நீங்கள் அதிர்ஷ்டசாலி. எங்கள் நிறுவனம் நடத்திய குலுக்கலில் ஆறுதல் பரிசு விழுந்துள்ளது. கமிஷனோ, டெபாசிட்டோ, பங்குத் தொகையோ வேண்டாம். பணம் பரிமாற்ற தொகையாக சில லட்சம் ரூபாயை செலுத்தினால் போதும்' என "ஆன்-லைனில்' ஆசைக்காட்டி மோசடி செய்யும் வேலை தமிழகத்தில் தொடர்கிறது.
"உங்களுக்கு கடன் வாங்கித் தருகிறோம். கடன் தொகைக்கு ஏற்ப எங்களுக்கு கமிஷன் தந்தால் போதும்' என மற்றொருபுறம் மோசடி நடக்கிறது. இதை நம்பி, ரூ.13 லட்சம் கமிஷன் தொகையை முன்கூட்டியே செலுத்திய பெங்களூரூவைச் சேர்ந்த சுஜாதாவை, தேனி வடுகப்பட்டி ஓய்வு பெற்ற சி.பி.ஐ., ஏட்டு ராஜாராம் உட்பட 3 பேர் மோசடி செய்தனர்.


இப்படி பல "ஆன்-லைன்' மோசடிகள் நடக்கின்றன. அதில், "பரிசு" மோசடி நடக்கிறது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறியதாவது : இமெயில் முகவரிக்கு தகவல் ஒன்று வந்தது. அதில், அமெரிக்காவின் பிரபல நிறுவனம், போட்டி ஒன்றை நடத்தியதாகவும், ஒவ்வொரு இமெயில் முகவரிக்கும் ஒரு லாட்டரி எண் கொடுக்கப்பட்டதில், எனது இமெயிலுக்கு ஆறுதல் பரிசு விழுந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் எனது இமெயிலுக்கு கடிதம் வந்தது. "உங்கள் வங்கி கணக்கு எண், பாஸ்போர்ட் நகல், இன்டர்நேஷனல் வங்கி எண் ஆகியவற்றை உடனே அனுப்புங்கள்' என தெரிவிக்கப்பட்டது. நானும் அனுப்பியதைதொடர்ந்து, "உங்கள் பரிசுத்தொகை ரூ.16 கோடி குறிப்பிட்ட வங்கியில் டெபாசிட் செய்ததோடு, இன்சூரன்ஸூம் செய்துள்ளோம்' என்று அதற்குரிய போலி சான்றுகளை அனுப்பினர்.

பின், இமெயிலில் "நீங்கள் பணம் பெற பரிவர்த்தனை எண்ணை, வங்கி அதிகாரியிடம் தெரிவிக்கவும்' என்று தெரிவிக்கப்பட்டு, அவரது இமெயில் முகவரி தரப்பட்டது. அந்த அதிகாரியை தொடர்பு கொண்ட போது, "பணம் பரிவர்த்தனைக்காக ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும். 12 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் பரிசுத்தொகை வந்து விழும்' என்று தெரிவித்தார். இதை நம்பி, பணம் செலுத்தி ஏமாந்ததுதான் மிச்சம், என்றார்.

போலீசார் கூறியதாவது:கிடைத்தவரை லாபம் என்று மோசடி நபர்கள் "சுருட்டுகின்றனர்'. மொபைல் போன் டிஸ்ப்ளேயில் எந்த நம்பரிலிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தில் பேசி ஏமாற்றுகின்றனர். இப்படி பணத்திற்கு சபலபட்டு ஏமாந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். வெளியே தெரிந்தால் அவமானம் என்று கம்ப்யூட்டர் முன் முடங்கி கிடக்கின்றனர்.இதுபோன்ற பரிசுத்தொகை அறிவிப்பவர்கள் தங்களது நிறுவன இமெயிலில்தான் தகவல் தெரிவிப்பது வழக்கம். பொதுவாக இருக்கும் இமெயிலை பயன்படுத்துவதில்லை. இதிலிருந்தே அவர்கள் மோசடி பேர்வழிகள் என தெரிந்து கொள்ளலாம். முழு முகவரியும் தருவதில்லை. சிலர் "நெட்வொர்க்' அமைத்து இந்த மோசடிகளில் ஈடுபடுகின்றனர். சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும்' என்றனர்.

கருத்துகள் இல்லை: