வெள்ளி, 8 ஜூன், 2012

சென்னை வந்த ராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

 முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மாலை டில்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு, தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, 15 மாத சிறை வாசத்திற்கு பின், ஜாமினில் வெளி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தமிழகம் செல்வதற்கு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அனுமதியளித்தது. இதை தொடர்ந்து, இன்று மாலை, 5.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய ஓய்வறையில், 40 நிமிடம் அமர்ந்திருந்தார். ராஜாவை வரவேற்க, விமான நிலையத்திற்குள் சென்றிருந்த முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் மற்றும் சில நிர்வாகிகளிடம், அவர் பேசிக் கொண்டிருந்தார். சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு, 6.15 மணிக்கு ராஜா விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார்.

மேள, தாளம் முழங்க: ராஜாவை வரவேற்க சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, தி.மு.க., நிர்வாகிகள் வந்திருந்தனர். 2,500க்கும் மேற்பட்ட தி.மு.க., தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடி, மேள, தாளம் முழங்க ராஜாவுக்கு, உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதற்கு முன், விமான நிலைய உள்நாட்டு முனைய வளாகத்தில் தொண்டர்கள் குத்தாட்டம் போட்டனர். "திகாரை வென்ற தீரனே; தமிழினத்தின் மறவனே; வருக, வாழ்க, வெல்க' என்ற வாசகங்களை தாங்கிய டீ-சர்ட் அணிந்திருந்தனர். தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த ராஜா, நிர்வாகிகள் அணிவித்த சால்வைகளை பெற்றுக் கொண்டார். ராஜா காரில் ஏறி வெளியே செல்ல முயன்ற போது, தொண்டர்கள் காரின் முன் வந்து காரை மறித்து "வாழ்க' கோஷமிட்டனர். ராஜாவின் பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய போலீசாரும், அவர்களை கட்டுப்படுத்திய பிறகு 20 நிமிட இடைவெளியில் ராஜாவின் கார் விமான நிலையத்தை விட்டு வெளியேறியது. ராஜாவின் வருகையால், இன்று மாலை சென்னை விமான நிலையம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது

கருத்துகள் இல்லை: