திங்கள், 4 ஜூன், 2012

ரன்வீர் சேனா வெறிநாய்கள் தலைவன் கொல்லப்பட்டான்!

 வினவு
பிரம்மேஷ்வர் சிங்
இந்த ஆண்டின் மகிழ்ச்சிக்குரிய செய்திகளில் இது முக்கியமானது. ஆதிக்க சாதி வெறியர்களின் குண்டர் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங், ஜூன் 1 – 2012 அன்று பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தலைநகர் ஆராவில் சுட்டுக் கொல்லப்பட்டான். நவாதா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கட்டிரா மொஹல்லா என்ற இடத்தில் இவன் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற போது ‘அடையாளம்’ தெரியாத ஆறு பேர் சுட்டுக் கொன்றனர்.  அந்த அடையாளம் தெரியாத தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

இந்தியாவில் நிலவுடமை சமூகத்தின் கொடுங்கோன்மை நிலவும் மாநிலங்களில் பீகார் முக்கியமானது. பார்ப்பன, பூமிகார், ராஜ்புத், லாலா முதலான ஆதிக்க சாதிகள்தான் பீகாரின் கிராமப்புறங்களை சொத்துடமை –  ஆதிக்கத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக பூமிகார், ராஜ்புத் சாதிகளின் பணக்கார பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை கொடுரமாக அடக்கி கொடுமைப்படுத்துகின்றனர். கால் வயிற்றுக் கஞ்சிக்காக எல்லா வகை உரிமைகளையும் இழந்து நடைப் பிணங்களாக இம்மக்கள் வாழும் துயரம் அளவிடற்கரியது.
இந்த சூழலில்தான் 1970களில் இருந்து நக்சலைட் இயக்கம் இம்மக்களின் மீதான கொடுமையை முறியடிக்க வீரத்துடன் களமிறங்கியது. பார்ட்டி யூனிட்டி, எம்.சி.சி (இந்த இரண்டு குழுக்களும் மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து தற்போது மாவோயிஸ்ட்டு கட்சியாக செயல்படுகின்றனர்), லிபரேஷன் ( இந்தக் குழு பிற்பாடு பாராளுமன்றவாதத்தில் பங்கேற்று சீரழிந்து போனது) போன்ற நக்சலைட்டு கட்சிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களை அணிதிரட்டி வன்முறையை ஏவிவிடும் நிலப்பிரபுக்களுக்கு தக்க பாடத்தை புகட்டத் துவங்கினர். இவற்றில் எம்.சி.சி எனப்படும் மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பங்களிப்பு பிரதானமானது.
இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் நக்சலைட்டு கட்சிகளில் சேர்ந்து ஆயுத பாணியாகி நிலப்பிரபுக்களின் நிலங்களை கைப்பற்றி நிலமற்ற வறிய விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுத்தது, நிலப்பிரபுக்களின் குண்டர் படையை உடனுக்குடன் எதிர்த்து முறியடித்தது, கூலி விவசாயிகள் தங்களது கூலியை உயர்த்தக் கோரி போராடியது, தாழ்த்தப்பட்ட பெண்களை பாலியல் வன்முறை செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் நக்சலைட்டுகளின் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டது என்ற தொடர்ச்சியான போராட்டத்தால் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்கள் வன்மத்துடன் பொறுமிக் கொண்டிருந்தனர்.
ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை90களில் ஆதிக்க சாதி பண்ணையார்கள் சாதிக்கொரு குண்டர் படையை நிறுவி நக்சலைட்டுகளை ஒழிக்க முயன்று வந்தனர். ஆளுக்கொரு பகுதி என சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த குண்டர் படைகள் அவற்றில் முக்கியமான சவர்னா சேனா, சன்லைட் சேனா போன்றவை இணைந்து ரன்வீர் சேனா தோன்றியது.  இப்படித்தான் பூமிகார் உள்ளிட்ட ஆதிக்கசாதி பண்ணையார்களின் ரவுடிப்படையாக ரன்வீர் சேனா 1994 ஆம் ஆண்டு போஜ்பூர் மாவட்டத்தில் பிரம்மேஸ்வர் சிங்கால் தோற்றுவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை இந்த குண்டர் படை நூற்றுக்கணக்கில் தலித் மக்களைக் கொடூரமாக கொன்றிருக்கிறது. 1996ம் ஆண்டு நடந்த பதனி டோலா படுகொலையில் 21 தலித் மக்களை கொன்றனர். அதில் 11 பெண்களும், ஆறு குழந்தைகளும் அடக்கம். பெண்களையும், குழந்தைகளையும் கூட இரக்கமில்லாமல் கொன்றதற்கு காரணம்? குழந்தைகள் வளர்ந்து நக்சலைட்டுகளாகி விடுவார்களாம், பெண்கள் அத்தகைய எதிர்கால நக்சலைட்டுகளை பெற்றுக் கொடுக்கிறார்களாம் என்று ரன்வீர் சேனா பகிரங்கமாகவே அறிவித்தது.
தமிழகத்தின் கீழ்வெண்மணி படுகொலையை ஒத்த இந்த பதனி டோலா படுகொலை குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டாலும் பாட்னா உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் அவர்களை விடுவித்தது. படுகொலையை நேரடியாக பார்த்த சாட்சியங்களை கூட ஆதிக்க சாதி வெறிக்கு அடிபணிந்து நடக்கும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
1997 டிசம்பர் லக்ஷமன்பூர் படுகொலையில் 61 தலித் மக்கள் ரன்வீர் சேனாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 16 குழந்தைகளும், 27 பெண்களும், 18 ஆண்களும் அடக்கம். இந்த படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகள் சிறையில் இருந்த பிரம்மேஷவர் சிங் மீது இன்னும் ஏராளமான வழக்குகள் உண்டு. இருப்பினும் பலவற்றில் சாட்சியங்கள் இல்லை என்று இந்த கொலைகார நாய் விடுவிக்கப்பட்டிருக்கிறான். மேற்கண்ட வழக்கில் பிணையிலும் வெளிவந்திருக்கிறான்.
இந்தப் படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா குண்டர் தலைவர்களை நக்சலைட்டுகள் கொன்ற போதும், ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களை தாக்கிய போதும் ரன்வீர் சேனா தலைவன், லஷ்மன் பூர் படுகொலையை விட கொடூரமான படுகொலை நடக்கும் என்று பகிரங்கமாகவே மிரட்டியிருக்கிறான். பல ஊடகங்களிலும் அந்த செய்தி வந்துள்ளது. எனினும் இந்த நாய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை
பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோவாக உலா வந்த லாலுவும் சரி, தற்போது ‘நேர்மையான’ ஆட்சியை நடத்தும் நிதீஷ் குமாரும் சரி இந்த் ஆதிக்க சாதி வெறியர்களுக்குத்தான் ஆதரவாக இருந்திருக்கின்றனர். ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார்.  ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.
இது போக ஓட்டுப்பொறுக்கும் தலித் கட்சிகளும் கூட ஆதிக்கசாதி குண்டர்களை ஆதரிக்கும் இத்தகைய கட்சிகளோடு கூடிக் குலாவியபடிதான் தலித் மக்களுக்கு துரோகமிழைத்தன. காங்கிரசு, பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை இவர்கள் நேரடியாகவே ரன்வீர் சேனாவின் பாதுகாவலர்களாக இருந்தனர். தற்போது கூட கொலைகார நாய் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டதற்கு பாரதிய ஜனதா கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறது. அதன் மாநில தலைவர் சி.பிதாகூர் இந்த கொலைகார நாயை மாபெரும் விவசாயிகள் தலைவன் என்று போற்றியதோடு இறுதி ஊர்வலத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பார்ப்பன இந்து மதம் பஞ்சமர்கள் என்று சொல்லி தலித் மக்களை ஒடுக்கியது போல பாரதீய ஜனதா அதே ஒடுக்குமுறையை ரன்வீர் சேனாவைக் கொண்டு நடத்துகிறது.
எல்லா ஒட்டுக் கட்சி தலைவர்களும் ரன்வீர் சேனா தலைவன் கொன்ற வழக்கை சி.பி.ஐ விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகின்றன. இவை தவிர அதிகார வர்க்கம், போலீசு, நீதிமன்றம் அனைத்தும் ஆதிக்க சாதிவெறியின் செல்வாக்கில்தான் இருக்கின்றன என்பதால் இந்த கொலைகார படை இதுவரை எந்த அரசு அமைப்பாலும் தண்டிக்கப்படவில்லை. ஒரு கொலைகாரனுக்கு கூட தூக்கு வாங்கித் தர முடியவில்லை.
ஆக ரன்வீர் சேனாவை அரசுகள் தடை செய்திருப்பினும் சமூக, சிவில், கட்சி அமைப்புகளால் அது அரவணைக்கப்பட்டதோடு எப்போதும் போலவே இயங்கி வந்தது. ஒவ்வொரு கொலையையும் தான்தான் செய்தோம் என பகிரங்கமாகவே ரன்வீர் சேனா அறிவித்து வந்தது. படுகொலை நடந்த கிராமங்களின் கிணறுகளில் இரத்தத்தால் ரன்வீர் சேனாவின் கொலைச்செய்தியை பொறித்து விட்டே சென்றிருக்கின்றனர். இந்த கொலைகார படை அஞ்சியது நக்சலைட் இயக்கத்தினை பார்த்து மட்டும்தான்.
ஆக இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் இன்னல்களை இங்கிருக்கும் அரசு – கட்சி அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதோடு, அவற்றை செய்யும் ஆதிக்க சாதிவெறிக்கு துணை போனதுதான் வரலாறும், யதார்த்தமும். இரத்தக் கறை படிந்த இந்த வரலாற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது நக்சல் இயக்கம்தான்.
ஆகவே அடையாளம் தெரியாத அந்த ஆறு தோழர்கள் இந்த கொடிய கொலைகார நாயை சுட்டுக் கொன்றதை நாம் மனமார பாராட்டுகிறோம். தலித் மக்களுக்கு தலித் அமைப்புகள் உள்ளிட்டு எந்த கட்சிகளும் பிரதிநிதிகள் இல்லை. நக்சல் இயக்கம் மட்டும்தான் அவர்களுடைய உண்மையான பிரதிநிதிகள் என்பதை பீகாரின் இரத்தக்கறை படிந்த வரலாறு காட்டுகிறது. பதனி டோலோ படுகொலை வழக்கின் குற்றவாளிகள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட காலத்தில், ரன்வீர் சேனாவின் எல்லா படுகொலைகளுக்கும் தலைமை தாங்கிய பிரம்மேஷ்வர் சிங் குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்பட்ட இதே காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை பெருமூச்சாக இந்த கொலை நடந்திருக்கிறது.
தலைவனுக்கு நேர்ந்த கதி அனைத்து குண்டர்களுக்கும் நேரும் வரை நக்சல் இயக்கமும் ஓயப் போவதில்லை.

கருத்துகள் இல்லை: