புதன், 6 ஜூன், 2012

35 லட்சத்தில் 2 கழிப்பறைகளை புதுப்பித்த திட்டக்குழு

டெல்லி: தினமும் ரூ.28 செலவு செய்ய முடிபவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களாகிவிடுவார்கள் என்று கூறிய திட்டக் குழு தற்போது ரூ.35 லட்சம் செலவில் 2 கழிப்பறைகளை புதுப்பித்துள்ளது.
டெல்லி யோஜனா பவனில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில் உள்ள 2 கழிப்பறைகள் ரூ.35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இந்த தகவலை பெற்றுள்ளார்.
தினமும் ரூ.28 செலவு செய்ய முடிபவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களாகிவிடுவார்கள் என்று திட்டக் குழு கூறியது சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில் திட்டக் குழு அலுவக கழிப்பறையை புதுப்பிக்க ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த 2 கழிப்பறைகளை புதுப்பிக்க ரூ.30,00,305ம், கதவில் பாதுகாப்பு கருவி பொருத்த ரூ. 5,19,426ம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 கழிப்பறைகளை ஆக்சஸ் கார்டு உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது 60 பேருக்கு இந்த ஆக்சஸ் ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கழிப்பறைகளில் சில திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால் அதை தடுக்கும் வகையில் அவற்றுக்கு செல்லும் வழியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் திட்டக் குழு தலைவர் மான்டக் சிங் அலுவாலியா கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரையில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டபோது அவரது ஒரு நாள் செலவு ரூ.2.02 லட்சம் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலுவாலியா 42 முறை அலுவல் நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். அதற்கான செலவு ரூ.2.34 கோடி ஆகும்.
அலுவல்களை முடிக்க வெளிநாட்டுப் பயணம் அவசியமானது என்று அலுவாலியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: