ஞாயிறு, 1 ஜனவரி, 2012

RAID. sasi jeya பங்கு பிரிப்பு சிக்கல் மந்திரிகள் வீட்டிலேயே மாநில அரசின்

கவர்னர் ரோசையா அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவது நல்லதல்ல என்று கூறியதால் மந்திரிகளை டிஸ்மிஸ் செயும் முடிவை  சுமார் மூன்று மாதங்களுக் காவது  தள்ளி வையுங்கள். அடிக்கடி மந்திரிகளை மாற்றினால், அரசாங்கம் ஸ்திரத்தன்மையில் இல்லை என்று அர்த்தம்’ என்பதாகச் சொன்னாராம். இதனால் முதல்வர் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம். '11 முதல் 15 அமைச்சர்கள் வரைக்கும் மாற்றம் செய்தே ஆகவேண்டும் என்பதில் அம்மா உறுதியா இருக்காங்க. கவர்னர் இப்படிச் சொன்னதால் யோசிக்கிறாங்க. எப்படியும் ஜனவரி பாதி வரைக்கும் மந்திரிசபை மாற்றம் தள்ளிப் போகலாம். ஆனா, கட்டுச்சோத்துக்குள் பெருச் சாளிகளை மூன்று மாதமெல்லாம் அம்மா தங்கவிட மாட்டாங்க’ என்று சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்!' எல்லாம் பங்கு பிரிப்பு சிக்கல் ''அமைச்சர்களில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட் டையன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே பீதியில் உறைந்து போய் உள்ளனர். அதனால், நித்தியகண்டமாக உலவி வருகிறார்கள் மந்திரிகள்! இதற்கு மத்தியில் இன்னொரு அதிர்ச்சி கரமான சம்பவம். 'மந்திரிகளின் வீடுகளில் 'அன்-அஃபிஷியல்' ரெய்டுகள் நடக்கின்றன’ என்பதுதான் அந்தச் செய்தி!''

''மந்திரிகள் வீட்டிலேயே மாநில அரசின் ரெய்டா?''

''முழுசாகக் கேளும். சசிகலா ஆதரவு பெற்ற சில மந்திரிகள் வீட்டில் குறிப்பிட்ட நபர்கள் நுழைந்து, 'என்ன வைத்துள்ளீர்கள்?’ என்று விசாரணை நடத்தினார்களாம். 'நிலவரம் கலவரமாக இருப்ப தால் வீட்டில் இருப்பவர்களும் ரியாக்ஷன் காட் டாமல் பயபக்தியாக பதில் அளித்து அனுப்பி வைக்கிறார்கள்’ என்றும் சொல்கிறார்கள்.''
''யார் இந்த ரெய்டைச் செய்வது?''
''ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி தனது பிரைவேட் டிடெக்டிவ் டீமை வைத்து இந்த ரெய்டைச் நடத்துகிறார் என்கிறார்கள்!''

''தோட்டத்தில் வேறு என்ன மாற்றங்களாம்?''

''சசிகலாவுக்கு என மாடியில் பிரத்யேகமாக ஒரு அறை இருந்ததாம். அந்த அறையை முழுமையாக துடைத்தெடுத்து மாற்றி விட்டார்களாம். அதில் அவரது அப்பா, அம்மா படம் இருந்ததாம். அதுவும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாம். அதேபோல் கொடநாடு பங்களாவிலும் அவருக்கு தனிஅறை இருந்தது. அதையும் மாற்றி விட்டார்கள். இம்மாதிரியான தகவல்கள் சுடச்சுட சசிகலா குரூப்புக்கு சென்று விடுவதுதான் ஜெயலலிதாவால் தடுக்க முடியாத காரியமாக இருக்கிறது!''

''இன்னுமா?''

''ம்... இதிகாச நாயகன் பெயரைக் கொண்ட ஒருவர் சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவர். அவரை ஏனோ இன்னும் மாற்றாமலே வைத்திருக்கிறார்கள். விட்ட குறை தொட்ட குறையாக சில தகவல்களைத் தெரிந்து கொள்ளத்தான் இப்படி என்று கேள்வி. ஆனால், அரண்மனை ரகசியங்கள் வெளியே கசி கிறதே என்பது விசுவாசிகளின் கவலை. முழுக்க முழுக்க தனக்கு நம்பிக்கையான படையை உருவாக் குவதில் ஜெயலலிதாவுக்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம்!'' என்ற கழுகார்,

''குலோத்துங்கனைப் பற்றி இப்போது அதிகமாகப் பேச ஆரம்பித்து உள்ளார்கள். நடராஜனின் சகோதரியான ஆண்டாளின் மகன் தான் இந்த குலோத்துங்கன். இவர்தான் மிடாஸ் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். அரசாங்க டாஸ் மாக்கே இவருடைய கண் அசைவில்தான் நடந்தது. இப்போது குலோத்துங்கனுக்கு கல்தா கொடுக்கப் பட்டு உள்ளதால் சில ரகசியங்கள் மூடியைத் திறந்துகொண்டு காற்றில் கசிகின்றன!''

''மோப்பம் பிடித்ததை 'ஃபுல்'லாகச் சொல் லும்!'' என்று சிரித்தோம்.

'டாஸ்மாக் விற்பனைக்கென 14 நிறுவனங்களிடம் இருந்து சரக்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை விஜய் மல்லையாவின் கம்பெனியிடம் இருந்து அதிக அளவில் சரக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது எஸ்.என்.ஜெ. டிஸ்லரி மற்றும் மிடாஸ் கோல்டன் டிஸ்லரி ஆகிய நிறுவனங்களிடம் இருந்துதான் அதிகக் கொள்முதல் நடக்கிறது. எந்த நிறுவனம் அதிகமான கமிஷன் தருகிறதோ, அந்த நிறுவனத்திடம் இருந்து அதிகக் கொள்முதல் நடக்கும் என்ற உலகறிந்த உண்மை, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கமிஷன் பேரத்தில் சரிபட்டு வராத நிறுவனங்களின் சரக்குகளை கடைகளுக்கே அனுப்பாமல், 'உங்கள் சரக்குக்கு டிமாண்ட் இல்லை' என்று, கொள்முதல் செய்வதைக் குறைத்து விடுகிறார்கள். இதில் எஸ்.என்.ஜெ. என்பது கருணாநிதியின் ஆசீர்வாதம் பெற்ற சினிமா தயாரிப்பாளர் ஒருவருக்குத் தொடர்பானது என்கிறார்கள்.''

''அரசியல் கடந்தது அல்லவா வியாபாரம்!''

''ம்... தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கிற்கு 41 குடோன்கள் உள்ளன. இந்தக் குடோன்களில் குலோத்துங்கனின் ஆட்கள்தான் வேலை பார்க்கிறார் களாம். இவர்களுக்குத் தனியாக சிம் கார்டு கொடுக்கப் பட்டுள்ளதாம். சென்னையில் இருந்து இந்த நம்பர் களுக்கு அழைப்பு போகும். அந்தக் குறிப்பிட்ட நம்பரில் வரும் அழைப்பை மட்டும்தான் அவர்களும் அட்டண்ட் செய்வார்கள். எந்தக் கம்பெனியின் சரக்கை கடைக்கு அனுப்ப வேண்டும் என அந்த அழைப்பு சொல்கிறதோ, அந்தச் சரக்கு மட்டும்தான் கடைகளுக்கு அனுப்பப்படுமாம். அந்த அளவுக்கு குலோத்துங்கன் கொடி பறந்துள்ளது!''

''கேட்டாலே கிர்ரடிக்கிறது!''

''பார் ஏலம், டெண்டர் என டாஸ்மாக் தொடர்பாக எந்த விஷயமாக இருந்தாலும் குலோத்துங்கன் கவனத் திற்கு வராமல் எதுவும் நடக்காது. கிராமத்தில் உள்ள கடைகளில் விற்பனை சரியாக இல்லை என்று நகரத்துக்கு மாற்றுவதிலும் பணம் ஏராளமாய் விளையாடி இருக்கிறது. இதுபோக, ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை பார்ப்பவர்களை வேறு ஊருக்கு மாற்றுவேன் என்று மிரட்டி பணம் பறிப்பது போன்ற அடாவடிகளும் நடந்துள்ளனவாம். சசிகலாவின் பெயரைச் சொல்லி, டாஸ்மாக் பொதுமேலாளர் மற்றும் ஐந்து மண்டலங்களின் மேலாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டுதான், இந்த வேலைகள் அத்தனையும் நடந்ததாம். மிடாஸில் எக்ஸிகியூட்டிவாக வேலை பார்க்கும் மூவர், இன்னமும் இவர் சொல்லும் வேலைகளைத்தான் செய்து முடிக்கிறார்கள் என்கிறார்கள்!''

''சரி... விட்ட இடத்துக்கு வருவோம். மன்னார்குடி குடும்பத்தை கவனித்து வளர்ந்த அதிகாரிகள் வட்டத் தில் ஏதும் மாற்றம் உண்டா?''

''தோட்டக்கலைத் துறை தொட்டு சென்சிடிவ்வான சில அதிகாரிகளின் இடமாற்றங்களை கவனித் திருப்பீரே... போலீஸைப் பொறுத்தவரை ஒட்டிப் பிறக்காத குறையாக நண்பர்களாக இருந்து, சென்னையை ஆட்டிப் படைத்த இரு அதிகாரிகளும் கூர்ந்து கவனிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர் உரிமை அதிகம் இல்லாத இடத்துக்கு மாற்றப்பட்டாலும்... இன்னொருவருக்கு உணவாக அளிக்கப்பட்டுள்ள இடம் வெயிட்டானதுதானாம். 'இந்த இரு அதிகாரிகளுமே இப்போதும் தி.மு.க. தரப்பினர் மீதான கரிசனத்தோடு இருப்பவர்கள்தான். போதாக்குறைக்கு மன்னார்குடி மகுடிக்குத் தக்கபடி ஆடுபவர்கள்தான்' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறாராம் ஒரு திடீர் ஆலோசகர். எப்படியோ... தலைமைச் செயலகம் தொடங்கி வரிசையாக மாற்றம் எதிர்பார்க்கலாம். இந்த இடைவெளிக்குள், முதல்வரின் செயலாளர் உட்பட முக்கியப் பதவிகளைக் கைப்பற்றுவதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இடையில் பலத்த போட்டி! கார்டனில் இப்போது செல்வாக்கு பெற்றுள்ள புதிய லாபியைச் சேர்ந்தவர்கள், 'முதல்வரின் செயலாளர்களில் ஒருவரோ, இருவரோ மாற்றப் படலாம்’ என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து முதல்வர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம். இதில் ஒரு அங்கமாக, முதல்வரை சந்தித்த ஒரு ஆலோசகர், 'கடந்த தி.மு.க. ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு இந்த ஆட்சி வந்தவுடன் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முக்கியமான பதவிகளில் நியமித்தால் நிர்வாகம் சிறப்பாக நடக்கும். ஆட்சிக்கு நல்ல பெயரும் கிடைக்கும்’ என்று எடுத்துக்கூறினாராம். முதல்வரும் இதை குறித்துக் கொண்டாராம்.''
''அதாவது...?''
''முதல்வரின் செயலாளர்களான ஷீலா ப்ரியா, ராம்மோகன்ராவ் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு மாற்றம் உறுதி என்கிறார்கள். 'சசிகலா தரப்பு தலையீடு இல்லாமல் போன இந்த நேரத்தில், தாங்கள் நினைப்பதை எல்லாம் செய்ய இவர்கள் துடிக்கிறார்கள்’ என்றும் சொல்கிறார்கள். 'முதல்வரைச் சுற்றி நேர்மையான அதிகாரிகள் டீம் உருவாகி விடக்கூடாது’ என்பதிலும் 'பழம் தின்று கொட்டை போட்ட' அதிகாரிகள் சிலர் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமான, வட இந்திய அதிகாரிகள் அனைவருமே திடீர் குஷியாக இருப்பதன் பின்னணியும் உன்னிப்பாக கவனிக்கத் தக்கது!''

''முதல்வர், இனிமேல்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்''

''தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு, தூக்கியடிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். கார்டன் மாற்றத்துக்குப் பிறகு, சிலர் செய்த அரசியலால்தான், சந்தோஷ் பாபுவுக்கு தேவையில்லாமல் பிரச்னை வந்தது என்று மேலிடத்துக்கு எடுத்துச் சொல்லப்பட... கடந்த வாரமே அவர் தோட்டக்கலைத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையின் கூடுதல் இயக்குநராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொன்னுச்சாமி, தோட்டக்கலைத் துறையிலும் பல 'காரியங்களை’ச் செய்துள்ளார் என, ஆதாரங்களுடன் மேலிடத்துக்குப் புகார்கள் போயிருக்கின்றன. அவற்றையெல்லாம் தீவிரமாக விசாரித்து, தனி ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்பதுதான், சந்தோஷ் பாபுவுக்குத் தரப்பட்டுள்ள முதல் அசைன்மென்ட்.''

''அப்படியா?''

''செய்தித் துறையில் பொருட்காட்சிப் பிரிவு துணை இயக்குநராக இருப்பவர் ரவீந்திரன். நடராஜனின் நெருக்கமான நண்பர் என்ற முத்திரை இவருக்கு உண்டு. இவர், 2011 டிசம்பருடன் ஓய்வு பெறுகிறார். இப்போது எட்டு துணை இயக்குநர்களில் ஒருவரை இந்தப் பதவிக்கு இடமாற்றல் செய்வதுதான் முறை. ஆனால், உதவி இயக்குநராக இருக்கும் ஒருவரை பதவி உயர்வு கொடுத்து இந்த இடத்துக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சி நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலையில்தான் வருடாந்திர பதவி உயர்வு தரப்படும். அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அடுத்த ஜூலையில் மீண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். செய்தித் துறையின் தொடக்கம் முதல் இருந்துவரும் விதிமுறையை அப்பட்டமாக மீறி, துறையின் முக்கிய அதிகாரி இதைச் செய்வதில் தீவிரமாக இருக்கிறார். வெளியேற்றப்பட்ட பழைய அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்து காரியங்களைச் சாதித்துக்கொண்டவராம் இந்த அதிகாரி. இப்போதும் அவர் தன் அத்துமீறலை நிறுத்த வில்லை என கோட்டையில் புழுங்குகிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் புறப்படத் தயாரான கழுகார்,

''இரண்டு மந்திரிகள் பற்றி கொசுறுத்தகவல் சொல்கிறேன். பிளைவுட் சப்ளையரான பாடி பில்டர் ஒருவரை வைத்துக்கொண்டு, ஆம்னி பஸ் வேகத்தில் அவசரமாக வசூலை வாரிக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஒரு மந்திரி. மந்திரிக்கு பயப்படாதவர்கள்கூட அந்த பாடிபில்டருக்குப் பயப்படுகிறார்களாம். இன்னொரு மந்திரி, 'நான் பணம் கொடுத்து மந்திரி ஆனவன். இருக்கப் போறது கொஞ்ச நாள்தான். விட்ட பணத்தையாவது எடுத்துட்டுப் போயிடுறேன்’ என்று, செல்லமாகக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறாராம்'' என்றபடியே பறந்தார் கழுகார்!

படம்: சு.குமரேசன்
thanks vikatan +ramani SF

கருத்துகள் இல்லை: