வியாழன், 5 ஜனவரி, 2012

வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள்” சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடி!

viruvirupu.com

சசிகலா குடும்பத்தாரிடம் பணம் கொடுத்தவர்கள், கொடுத்ததைத் திருப்பி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
“கட்சியில் பதவி வேண்டுமா? இவ்வளவு வெட்டுங்கள்.. ஆட்சியில் காரியம் ஆக வேண்டுமா? சற்று அதிகமாகக் கொட்டுங்கள்” என்று விலைப் பட்டியல் போடாத குறையாக நடைபெற்ற வசூல் அது. அதுவும் இவர்களிடம் நேரடியாகப் பணம் கொடுத்தவர்கள் யாருமே சில லட்சங்களுக்கு குறைவாகக் கொடுத்ததில்லை. அநேக டீலிங்குகள் கோடிகளில்தான். அவ்வளவு பணத்தைக் கொட்டிக் கொடுத்தவர்கள் சும்மா விடுவார்களா?
பிய்த்து எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
இங்குள்ள மற்றொரு சிக்கல், பணம் கொடுத்தவர்களில் சில வில்லங்க பார்ட்டிகளும் உண்டு, போலீஸ் பார்ட்டிகளும் உண்டு, வேறு கட்சிக்காரர்களும் உண்டு, சென்ட்ரலில் செல்வாக்கு உள்ளவர்களும் உண்டு!
முன்பு நடைமுறை வேறு விதமாக இருந்தது. “பணத்தைக் கொடுத்தமா, காரியமாகும் வரை கம்மென்று இருந்தமா” என்று அனைவரும் காத்திருந்தார்கள். காரணம், சின்டிகேட்டுக்கு இருந்த காவல்துறை கனெக்ஷன் அப்படி! கொடுத்த பணத்தைக் கேட்கப் போனால் தேவையில்லாத வில்லங்கங்கள் வந்து சேரும் என்று கொடுத்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்!

இப்போது இவர்களின் ஆதரவு காவல்துறையினர் தமக்கு ஆதரவு தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்கள் இருக்கும் திசைக்கே அவர்கள் வரப்போவது இல்லை.
இப்படியான சூழ்நிலையில்தான் கொடுத்த பணத்தை திருப்பித் தாருங்கள் என்று பார்ட்டிகள் நெருக்கத் தொடங்கியுள்ளன. இதில் இரு ஆந்திரா பார்ட்டிகள் மிரட்டும் அளவுக்குப் போயிருப்பதாகத் தெரிகின்றது. கட்சிக்குள் காரியம் நடக்க பைசா கொடுத்தவர்கள் சற்று தயங்குவது உண்மைதான்.
காரணம், அந்த பண விவகாரத்தைக் கிளறப் போனால், இவர்களுடன் இவர்கள் டீல் வைத்திருந்த கதை எல்லாம் வெளியே வரத் தொடங்கும் என்ற பயம்தான். கட்சியில் இருந்து ஒதுங்கத் தயார் என்று முடிவு செய்த ஓரிருவர் வேண்டுமானால் கொடுத்த பணத்தைக் கேட்க துணியலாம்.
ஆனால், வர்த்தக ரீதியாக காரியமாக சசிகலா குடும்பத்தினரிடம் பணம் கொடுத்தவர்கள் தயங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
கட்சியில் இருந்து விலக்கப்படுகிறார்கள் என்று அறிவிப்பு வந்து கட்டம் கட்டியபோது, இவர்களுக்கு இந்தளவுக்கு நெருக்கடி ஏற்படவில்லை. காரணம், நாளைக்கே காடசி மாறும் என்று ஒரு பாஸிபிளிட்டியை எல்லோரும் யோசித்தார்கள். “இன்று அடித்துக் கொள்வார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள்” என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஒரு காலத்தில் கார்டனில் திவாகரனுக்கு சிக்கல் ஏற்பட்டபோது, அவரை நீக்கிவிட்டு பாஸ்கரனை கொண்டு வந்தார்கள். சிறிது காலத்தில் அவருக்கு கல்தா கொடுத்துவிட்டு தினகரனை பொறுப்புக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் கார்டனுக்கு வெளியே இவர்கள் அனைவருக்கும் கனெக்ஷன் இருந்தது. இப்போது வேறு யாராவது ஒரு ‘கரன்’ வந்து சேர்வார் என்று சிறிது காலம் காத்திருக்க பணம் கொடுத்த பலர் ரெடியாக இருந்தார்கள்.
அந்த ஆறுதல், அ.தி.மு.க.-வின் பொதுக்குழு கூட்டம்வரைதான் நீடித்தது!
“வெளியே அனுப்பப்பட்டவர்கள் ஆட்டம் அவ்வளவுதான். இனியும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால், உங்க கதையும் அவ்வளவுதான்” என்ற ரீதியில் ஜெயலலிதாவின் பேச்சு பொதுக்குழு கூட்டத்தில் ஒலிக்கவே, பலருக்கும், தாம் பணம் கட்டிய குதிரைகள் இனியும் ஓடாது என்ற விஷயம் தெளிவாகப் புரிந்தே விட்டது. கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த விவகாரங்களில் நல்ல பரிச்சயம் உடைய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “பணத்தைக் கொடுத்து விடலாம். ஆனால், பணம் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து அதை எடுப்பதற்கான சூழ்நிலை இப்போது இல்லையே!” என்றார்கள் லேசாகக் கண்ணடித்தபடி!
அட, அப்படியும் ஒரு விவகாரம் இருக்கிறதா இதற்குள்? கொஞ்சம் பொறுங்கள், அந்த ரூட்டிலும் விசாரிக்கலாம்!

கருத்துகள் இல்லை: