புதன், 4 ஜனவரி, 2012

Jeya Tv லிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!



Jaya Tv
சென்னை: ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து டிடிவி தினகரனின் மனைவி அனுராதா நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பாலசுவாமிநாதனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் களையெடுத்து வருகிறார் ஜெயலலிதா. அவர்களில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள் தற்போது விரட்டப்பட்டு வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். விரைவில் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மீதும் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசி குடும்பத்தினரின் கையில் சிக்கியிருந்த ஜெயா டிவி நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில் ஜெயலலிதா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் மனைவி அனுராதாதான். தற்போது அனுராதா அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெயா டிவி நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்தவரான பாலசுவாமிநாதனும் கூட சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயா டிவி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் வருவாய், விளம்பர வருவாய் உள்ளிட்டவை குறித்து பால சுவாமிநாதனிடம் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டை அவர் அமெரிக்காவில் கொண்டாடுவதாக திட்டமிட்டிருந்தார். அதை ரத்து செய்யச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறுகிறார்கள்.

ஜெயா டிவி நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் அத்தனையும் தற்போது தீவிரமாக ஆடிட் செய்யப்பட்டு வருகிறதாம். இந்த ஆடிட்டிங்கில் ஈடுபட்டுள்ளவர்களை, பிரபல பாஜக அனுதாபி குருமூர்த்திதான் அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்.

இதில் யாரெல்லாம் பணத்தை சுருட்டியுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: