திங்கள், 2 ஜனவரி, 2012

பென்னி குயிக்கு 2000 வெள்ளி கொடுத்த பழனி செட்டி முல்லைப் பெரியாறு அணையை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தென் தமிழகத்தைச் செழிக்கச் செய்த பென்னி குயிக்கைத் தெய்வ மாக வழிபடுகிறார்கள் தென் தமிழக மக்கள்!

பென்னி குயிக் போற்றப்படுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த பலர், வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய்விட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் பழனிசெட்டி!
பெரியாறு அணையைக் கட்ட பென்னி குயிக்குக்குத் தனி மனிதனாகப் பொருள் உதவி செய்தவர்களில் ஒருவர்தான், இந்தப் பழனிசெட்டி. இவருடைய பெயரை இப்போதும் பெருமையுடன் பேசிக்கொண்டு இருக்கிறது பழனிசெட்டிப்பட்டி கிராமம்.
 கர்னல் பென்னி குயிக் அணை கட்டும் வேலைகளைத்தொடங்கிய போது, இரண்டு முறை ஏற்பட்ட வெள்ளத்தில் அணை உடைந்துபோனது. இதனால் அணை வேலைகளை நிறுத்திவிட்டு திரும்பும்படி இங்கிலாந்து அரசு, பென்னி குயிக்குக்கு உத்தரவிட்டது. பஞ்சத்தில் உழன்றுபசியில் தவித்த மக்களைப் பார்த்த பென்னிக்கு இங்கிலாந்து செல்வதற்குத் துளியும் விருப்பம் இல்லை. அணை கட்ட அரசு, பணமும்ஒதுக்கவில்லை. 'செல்வந்தர்களிடம் உதவி கேட்கலாம்’ என முடிவு செய்தார் பென்னி.யாரும் ஒத்துழைப்புக் கொடுக்க வில்லை. மனம் உடைந்த பென்னி, அணைக்கட்டுப் பகுதிகளை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, இங்கிலாந்து கிளம்பலாம் என்கிற முடிவோடு குமுளிக்குக் கிளம்பினார். செல்லும் வழியில் வெயில் அதிகமாக இருந்ததால் பிலாக்கிபுரம் (தற்போதைய பழனிசெட்டிப்பட்டி) ரோட்டில் இருந்த வேப்ப மர நிழலில் ஓய்வு எடுத்து இருக்கிறார். அங்கே பென்னி குயிக்கைச் சந்தித்து இருக்கிறார் பழனிசெட்டி. அணையின் பயன்களை கேட்ட பழனிசெட்டி, பென்னியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோய், 2 ஆயிரம் வெள்ளி பணத்தை அவர் கையில் கொடுத்துஇருக்கிறார். மீதிப் பணத்துக்கு, பென்னி குயிக் தன்னு டைய மனைவியின் நகைகளை விற்று அணையைக் கட்டி, தென் மாவட்டங்களை பஞ்சத்தில் இருந்து மீட்டாராம். (இந்தச் செய்திகளை பென்னி குயிக்கே தன்னுடைய டைரியில் குறிப்பிட்டு உள்ளார்)
பழனிசெட்டியின் வாரிசுகள் பழனிசெட்டிக்கும் அவருடைய தாய் வீரமல்லம் மாளுக்கும் சிலைவைத்து தெய்வமாக வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பழனிசெட்டி வாரிசுகளின் ஒருவரான மல்லிகா, ''எங்க முன்னோர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. அங்கே பிழைப்பு இல்லாம சீப்பாலக்கோட்டையில் இருந்து தேவாரம் பக்கத்தில் உள்ள பொட்டிபுரத்தில் குடியேறினாங்க. அங்கே எங்க குல தெய்வமான சௌடாம்பிகைக்குக் கோயில் கட்டினாங்க. கோயில் கட்ட அதிக நன்கொடை கொடுத்தவர்களுக்குக் கோயில் வளாகத்தில் சிலை வெச்சிருக்காங்க. அதில் பழனிசெட்டியார் சிலையும் இருக்கு. ஒருமுறை அங்கே இருந்த ஜமீன்தாரர்களுக்கும் பழனிசெட்டிக்கும் சண்டை வந்துவிட்டதாம்.பழனிசெட்டி ஊரைவிட்டு வெளியேறி வந்துவிட்டார். அப்போதான் பென்னி குயிக்கைச் சந்திச்சு இருக்கார். இவ்ளோ மக்கள் வாழ்றதுக்குக் காரணமா இருந்த பழனிசெட்டிக்குச் சிலை செஞ்சு கும்பிட்டுட்டு வர்றோம்!'' என்றார் நெகிழ்ச்சியாக.

- இரா.முத்துநாகு
thanks vikatan+muthaiah singapore

கருத்துகள் இல்லை: