ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சசிகலாவை துரத்தியது ஏன்’ என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

சசிகலாவும் அவருடைய உறவினர்​களும் பணவெறி பிடித்தவர்கள், ஆட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் அளவுக்குக் கொள்ளை அடிப்பவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அம்மையாருக்கு 20 வருடங்களுக்கும் மேல் ஆனதா? தன்னைச் சுற்றி தன் வீட்டிலேயே நடந்த இந்தத் தவறுகளைக் கண்டுபிடிக்க முதல்வருக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டது என்றால், நாட்டில் நடக்கும் தவறுகளைக் கண்டுபிடிக்க அவருக்கு எத்தனை வருடங்கள் தேவைப்படும்!''ஜெயலலிதாவின் அதிரடிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. சசிகலா தரப்பு இன்னமும் சைலன்ட். மீடியாக்களுக்கு மிக நெருக்கமானவரான நடராஜனும் வெளிநாடு சென்று விட்டார். நடராஜன் ஏ.பி.ஆர்.ஓ​-வாக பணியாற்றிய காலம்தொட்டு அவருக்கு நண்பராக இருப்பவர் திருச்சி வேலுச்சாமி.
ஜெ. - சசி மோதல் கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் நடராஜனின் நண்பராக இங்கே மனம் திறக்கிறார் வேலுச்சாமி!
 ராவணன், கலியபெருமாள் என்று கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள், பவர் சென்டர்களாக மாறி கட்சிக்காரர்களை எப்படி எல்லாம் ஆட்டுவித்தார்கள் என்பது கண்கூடு. வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி யார் அமைச்சராவது என்பது வரை அத்தனையும் அந்த பவர் சென்டர்களின் விருப்பப்படியே நடந்தது. இதைப் பார்த்துக் குமுறிய எம்.ஜி.ஆரின் பக்தர்கள் இன்றைக்கு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால், அதேநேரம் இத்தனை காலம் ஜெயலலிதாவுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த சசிகலா, இன்றைக்கு பலவிதமான பழிகளுக்கு ஆளாகி நிற்பதை ஏற்க முடியவில்லை. 'என் உடன்பிறவா சகோதரி’ என சசிகலாவை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா, 'அவரைத் துரத்தி அடித்தது ஏன்’ என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
1990-ம் ஆண்டு லாரி மோதி விபத்துக்கு உள்ளான ஜெயலலிதா, ஐந்து மாதங்கள் யாரையுமே சந்திக்காமல் இருந்தார். அப்போது முதல் ஆளாக சென்று நான் அவரைச் சந்தித்தேன். அடுத்தநாள், சுப்ரமணிய சுவாமியை போயஸ் கார்டனுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது, ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு நிழலாக சசிகலா நின்றார் என்பது எனக்குத் தெரியும். 96-க்குப் பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் கைது செய்யப்பட்டபோது சசிகலாவை பிரித்து, ஜெயலலிதாவை சிக்க வைக்க எவ்வளவோ முயற்சி நடந்தது. அதற்கு சசிகலா சம்மதிக்கவே இல்லை. அதனால், திட்டமிட்டு பலவிதமான சிரமங்களுக்கு சசிகலா ஆளாக்கப்பட்டார். நானும் நடராஜனும் அப்போது மாறுவேடம் போட்டுக்கொண்டு சசிகலாவை சந்திக்கப் போனோம். அப்போது சசிகலா பேசிய வார்த்தைகள் இன்னமும் என் நினைவில் இருக்கின்றன. தனிப்பட்ட விதத்தில் ஒரு சுமைதாங்கியாக சசிகலா விளங்கியதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தன்னுடைய சொந்தங்களை எல்லை மீறி வளர விட்டதுதான் அவர் செய்த மிகப் பெரிய தவறு. எதையும் கண்டுகொள்ளாதவராக அவர் இருந்ததற்கு காரணம், சமீபகாலமாக சசிகலாவின் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதுதான். ஒரு முறை திருச்சி கூட்டத்தில் பேசிய எம்.நடராஜன், 'கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் பவர் சென்டர்களாக விளங்குகிறார்கள். அது என் தம்பியாக இருந்தாலும், கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா இதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது’ எனப் பகிரங்கமாகச் சொன்னார். தன் உறவுக்காரர்கள் என்பதற்காக அவர் சப்பைக்கட்டு கட்டவில்லை. அவருடைய பேச்சு சசிகலா உறவினர்களிடத்தில் எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பது எனக்குத்தான் தெரியும்.

இன்றைக்கு எந்தக் காரணமும் சொல்லாமல் சசிகலா, நடராஜன் உள்ளிட்ட உறவுகளை ஜெயலலிதா விலக்கி இருக்கிறார். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எப்படியும் குறைந்தபட்சத் தண்டனையாவது கிடைக்கும் எனச் சொல்லி, கட்சியைக் கைப்பற்ற நடராஜன் முயற்சித்ததாகவும், அதனால்தான் ஜெ. கோபமானார் என்றும் என்னென்னமோ செய்திகள் எல்லாம் அலை அடிக்கின்றன. நடராஜன் இத்தகைய எண்ணம் கொண்டவரல்ல என்பதற்கு ஒருசம்பவத்தைச் சொல்கி றேன். 91 - 96 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் அப்போதைய கவர்னராக இருந்த சென்னா ரெட்டிக்கும் பனிப்போர் இருந்தது. நடராஜனின் நண்பர் என்கிற முறையில் என்னைச் சந்திக்க விரும்பினார் சென்னா ரெட்டி. நான் போய்ப் பார்த்தபோது அவர் சொன்னது என்ன தெரியுமா? 'அ.தி.மு.க-வைக் கைப்பற்ற நடராஜனை தயார் ஆகச் சொல்லுங்கள். அவருக்கு வேண்டிய உதவிகளை நான் செய்து கொடுக்கிறேன். அந்தம்மா இனியும் முதல்வராக நீடிக்கக்கூடாது’ என்று சொன்னார் சென்னாரெட்டி. அப்போது, கைதாகி மருத்துவமனையில் இருந்த நடராஜனிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். ஒரு நொடிகூட சலனம் காட்டாதவர், 'எனக்கு அதில் சம்மதமோ, விருப்பமோ இல்லை என கவர்னரிடம் சொல்லுங்கள்’ என, பொட்டில் அடித்த மாதிரி சொல்லி​விட்டார். 'கவர்னரே உதவுவதாகச் சொல்லும்போது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். 'சி.எம். நாற்காலியைப் பிடிப்பது பெரிய விஷயம்தான். ஆனால், ஒரு துரோகியாக அதில் என்னால் எப்படி அமர முடியும். இன்றைய காலத்தை விடுங்கள்... நாளைய தலைமுறையும் வரலாறும் நம்மை எப்படி எல்லாம் தூற்றும்? எட்டப்பனின் வரிசையில் என்னையும் சேர்த்து விடக்கூடாது’ என்றார். 'துரோகிப் பட்டம் வரக்கூடாது என்பதற்காக தமிழ்​நாட்டுக்கே துரோகம் செய்கிறீர்களே’ என, அப்போது ஆதங்கப்பட்டவன் நான். கட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு வலியவந்து கதவைத் தட்டியபோதும் அதனை மறுத்த நடராஜன் இன்றைக்கு அந்த முயற்சியை ஆள் திரட்டிச் செய்திருப்பாரா என்பதுதான் என் கேள்வி.

சசிகலாவும் அவருடைய உறவினர்​களும் பணவெறி பிடித்தவர்கள், ஆட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் அளவுக்குக் கொள்ளை அடிப்பவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அம்மையாருக்கு 20 வருடங்களுக்கும் மேல் ஆனதா? தன்னைச் சுற்றி தன் வீட்டிலேயே நடந்த இந்தத் தவறுகளைக் கண்டுபிடிக்க முதல்வருக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டது என்றால், நாட்டில் நடக்கும் தவறுகளைக் கண்டுபிடிக்க அவருக்கு எத்தனை வருடங்கள் தேவைப்படும்!''

- நமது நிருபர்
thanks vikatan+ramani SF

கருத்துகள் இல்லை: