செவ்வாய், 3 ஜனவரி, 2012

ஆச்சாரி தேர்தலில் போட்டியிட ராசா உதவவில்லை அதனால் பழிவாங்கவே பொய் சாட்சி

கடந்த 2009ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பிய ஆச்சாரிக்கு, முன்னாள் அமைச்சர் ராஜா எந்த உதவியும் செய்யவில்லை. அதனால், தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ராஜினாமா செய்த ஆச்சாரி, "ராஜாவுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்தார்' என்று ராஜாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் குற்றம் சாட்டினார். முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆசிர்வாதம் ஆச்சாரி. இவர், ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ளார். இவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வார விடுமுறைக்கு பிறகு, நேற்று ஆசிர்வாதம் ஆச்சாரியை ராஜாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது சுஷில்குமார் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆச்சாரி விரும்பினார். அதை முதலில் 2008ம் ஆண்டு நிரா ராடியாவிடம் தெரிவித்தார். அப்போது, தி.மு.க., காங்கிரசோடு கூட்டணியில் இருந்ததால், தனக்கு சீட் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு ராஜாவிடம் கோரியிருக்கிறார்.
அதற்கு ராஜா மறுப்பு தெரிவித்தவுடன், தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ஆச்சாரி ராஜினாமா செய்தார். இவ்வாறு சுஷில்குமார் கூறினார்.

வீடியோ ஆதாரம் : உடனே இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ஆச்சாரி தெரிவித்தார். அதற்கு சுஷில்குமார், "நிரா ராடியாவுடன் நீங்கள் பேசும்போது காங்கிரசில் சேரப் போவதாக கூறியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறதே' என்றார். அதற்கு ஆச்சாரி, காங்கிரசில் சேர நினைத்தேன். மற்றபடி தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முடிவை, முன்கூட்டியே ராஜாவிடம் தெரிவித்து விட்டேன்' என்றார். அதைக் கேட்ட சுஷில்குமார், நீங்கள் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ராஜினாமா செய்தீர்கள்.
அதற்கு பிறகு தான், "2ஜி' தொடர்பான செய்திகள் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து வர ஆரம்பித்தது.
ஏனென்றால், நீங்கள் தான் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களை, அந்த பத்திரிகை நிருபரிடம் கொடுத்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆச்சாரி மறுத்தார்.
அதைத் தொடர்ந்து சுஷில்குமார், "சுப்ரமணியசாமி "2ஜி' தொடர்பாக எழுதிய புத்தகத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்' என்றார். அதற்கு ஆச்சாரி, அது தன்னுடைய பெயர் தானா என்பது தெரியாது' என்று கூறினார்.
உடனே சுஷில்குமார், அந்த புத்தகத்தில் "ஆச்சாரி முதலில் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றினார். பிறகு, ரயில்வே அமைச்சகத்தில் பணியைத் தொடர்ந்தார்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சி.பி.ஐ.,யிடம் ஆச்சாரி கொடுத்த வாக்குமூலம் பற்றியும் சுப்ரமணியசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

என்னுடையதா என்று தெரியாது : அப்படி என்றால், ஆச்சாரி என்ற பெயரில் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் வேறு யாரும் வேலை செய்தனரா என்று கேட்டார். அதற்கு, "ஆச்சாரி என்ற பெயரில் வேறு யாரும் பணியில் இல்லை. ஆனால், சாமி குறிப்பிட்டிருக்கிற பெயர் என்னுடையதா என்று தெரியாது' என்று ஆச்சாரி கூறினார்.
உடனே சுஷில்குமார், "2ஜி' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களோடு ராஜாவை தொடர்புபடுத்த சி.பி.ஐ.,க்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்காகத் தான் உங்களை சாட்சியாக சி.பி.ஐ., சேர்த்திருக்கிறது.

சி.பி.ஐ., மிரட்டலா? : தவிர, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக உங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சி.பி.ஐ., உங்களை மிரட்டியிருக்கிறது. மேலும், உங்கள் அரசியல் ஆசைக்கு உதவ ராஜா மறுத்துவிட்டார்.
இந்த காரணங்களுக்காகத் தான் ராஜாவுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். இவ்வாறு சுஷில்குமார் தெரிவித்தவுடன், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன் என்று ஆச்சாரி கூறினார்.
அதோடு, ஆச்சாரியிடம் சுஷில்குமார் குறுக்கு விசாரணையை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் பெகுராவின் வழக்கறிஞர் மினோச்சா, ஆச்சாரியிடம் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தார். தவிர ஆச்சாரியிடம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமாருக்காக சுஷில்குமார் குறுக்கு விசாரணை செய்வார்.

-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை: