வியாழன், 3 ஜூன், 2010

அறிமுகம். சமச்சீர் கல்வித்திட்டம் வாழ்க்கை கல்விக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும்,

திருப்பூர் : ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, சமச்சீர் கல்வித்திட்ட பாடங்கள் மிக, மிக அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை கல்விக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும், பாடங்களில் இடம் பெற்றுள்ளன.
நடப்பு கல்வியாண்டு முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் அடங்கிய குழுவினரால், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. இப்புதிய பாடத்திட்டத்தில், வழக்கத்தை காட்டிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஊரக வாழ்க்கைக்கும், நகர்ப்புற வாழ்க்கைக்கும் உள்ள சுற்றுச்சூழல், மருத்துவ வசதி, தொழில் மாற்றங்கள், போக்குவரத்து மேம்பாடு என வேறுபாடுகள் எளிதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடத்திலும், அதைச்சார்ந்த செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன. மக்கள் தொடர்பு திட்ட முகாம், குறைதீர்க்கும் நாள் முகாம் போன்றவற்றுக்கு ஆசிரியர் உதவியுடன் சென்று அங்கு எவ்வாறு குறைகள் தெரிவிக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம் சென்று பணிகளை பார்வையிடவும், தெருவிளக்கு எரியவில்லை, சாலை பழுது, குடிநீர் வரவில்லை, கழிவு நீர் கால்வாய் அடைப்பு, தெருவில் கழிவு நீர் தேக்கம் போன்ற குறைகளுக்கு தீர்வு காண, எங்கு முறையிட வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. பெருளாதாரம் குறித்த பகுதியும் அறிமுகமாகியுள்ளது.
மேலும், புத்தகங்களுடன் மாணவர்கள் கலந்துரையாடும் வகையில், கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் விளக்கப்பட்டுள்ளன. அறிந்து கொள்க, தெரிந்து கொள்க, தகவல் துளிகள், சிந்திக்க சில நொடிகள், உங்களுக்கு தெரியுமா என பாடங்களுக்கு இடையே புதிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அறிவியல் பாடத்தில், மாணவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்த இடையிடையே கார்ட்டூன், வீடியோவில் குழந்தைகள் உரையாடுவது போல் இடம் பெற்றுள்ளன. சிந்தித்து செயல்படும் வகையில், திருமண வீடுகள் மற்றும் விருந்துகளில் உணவு எப்படி வீணாக்கப்படுகிறது என்பது குறித்த செயல் திட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. பறவைகளின் சிறகுகளை கொண்டு அலங்கார பொருட்கள் தயாரிப்பது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட வாழ்க்கைக்கு தேவையான கல்வி முறையும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும், செய்து பாருங்கள் என்ற பகுதியும், இதனால் தெரிந்து கொண்டது என்ன என்ற புதிய பகுதியும் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலப் பாடத்தில், ஒவ்வொரு பாடத்தின் துவக்கத்திலும் ஆசிரியர்களுக்கு சிறப்பு குறிப்புகள் தரப்பட்டுள்ளன. மாணவர்களை நேர்காணல் செய்வது, புதிய வார்த்தைகள் மற்றும் விளக்கங்கள் என இடம் பெற்றுள்ளன. கணித பாடத்தில், எண் விளையாட்டுகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு. தமிழ் பாடத்தில், மொழி விளையாட்டுகள் பகுதியில், சொல் விளையாட்டுகள்; கையெழுத்து இதழ் தயாரிப்பு, ரயில் முன்பதிவு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வது போன்றவை வாழ்க்கை கல்விக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது; தேச தலைவர்களின் கையொப்பங்களும் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு செயல்வழி கற்றல் அட்டையில் இருப்பதை போல், பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,
"அரசு பள்ளி மாணவர்களுக்கு இது முற்றிலும் புதிதானது; பயனுள்ளது. கடந்தாண்டுகளை விட, பாடங்களை எளிமைப்படுத்தி, பயிற்சிகளை அதிகப்படுத்தி உள்ளனர்,'' என்றனர். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், "இப்புத்தகங்கள், அரசு மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வியை உயர்த்த தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மாணவர்களின் கல்வி தரத்தை இப்பாடத்திட்டம் உயர்த்தும். மாணவர்களிடம் இதை கொண்டு சேர்க்கும் வகையில் வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. மேலும், விளையாட்டு குறித்த பாடங்கள் வரும் ஆண்டுகளில் இடம் பெற்றால், கூடுதல் சிறப்பாக இருக்கும். புத்தகத்தில், எழுத்து பிழைகள், அச்சு பிழைகள் இன்றி, கவனம் செலுத்தி உருவாக்கி இருப்பது, மற்றொரு சிறப்பு என்றே கூறலாம்,' என்றனர்.

கருத்துகள் இல்லை: