ஞாயிறு, 30 மே, 2010

வடபுலத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டம் புரியாமல் திகைத்து நிற்கும் பரிதாபம்

வெசாக் அனுஷ்டிப்பின் உட்பொருள் உணர்வீர்
வெசாக் பண்டிகை நாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது.தென்பகுதியை விட வடபுலத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டம் களைகட்டியிருப்பது கண்டு எதுவுமே புரியாமல் திகைத்து நிற்கும் பரிதாபம் மட்டுமே தமிழ் மக்களிடம் மிஞ்சியுள்ளது. அதேநேரம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்ற பழம்பெருமை பேசுவதை விடுத்து சிங்கள மக்களிடம் இருக்கக் கூடிய நல்ல இயல்புகளை நாமும் பின்பற்றப் பழக வேண்டும்.
இவ்வாறு கூறுவது சிலரின் விருத்தியடையாச் சிந்தனைக்குச் சீற்றமாக இருக்கலாம்.அவ்வாறானதொரு சிந்தனை இருக்குமாயின் அது மிகப்பெரும் தவறு. நாம் எதிர்நிலைச் சிந்தனையை வளர்த்து விட்டதால் எங்கள் எதிர்காலம் சூனியமாகிப் போகும் பரிதாப நிலையில் உள்ளது.எனவே நாங்கள் நேர்கணியச் சிந்தனைக்குள் எங்களை உட்படுத்த வேண்டும்.

அவ்வகையில் சிங்கள மக்களிடம் குறிப்பாக அந்த இளம் சமூகத்திடம் இருக்கக் கூடிய பெரியவர்களை மதிக்கும் இயல்பையும் அவர்களிடம் இருக்க கூடிய இறை நம்பிக்கையையும் நாம் உற்றுநோக்குவது அவசியம். சிங்கள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பெற்றோரை-ஆசிரியர்களை-மதகுரு மாரை-காலில் விழுந்து வணங்குவதைப் பார்க்கும் போது நாம் தலைகுனிந்து கண்ணீர் விடவேண்டிய வர்களாக உள்ளோம்.

உயர் பண்பாட்டின் சொந்தக்காரர்கள் என்று எங்களை நாமே உயர்த்திக் கொண்டோமே தவிர எங்கேனும் எங்கள் இளம் சமூகம் பின்பற்றும் உயர் பண்பாட்டுக் கோலங்களை அடையாளப்படுத்த முடியுமா? என்றால் எதுவுமே இல்லை.இந்நிலையில் எங்கள் இனம், அதன் உரிமை பற்றிய நினைப்புகளெல்லாம் கவலை தருவனவாகவே அமையும்.

வெசாக் பண்டிகை நடைபெறுகின்றது. ஒவ்வொரு படை முகாம்களிலும், காவலரண்களிலும் அந்த நாளை எவ்வாறு அனுஷ்டிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஆயுதம் ஏந்தியவர்கள்-போர் நடத்தியவர்கள் கெளதம புத்தபிரானை தொழும் காட்சி அவர்களின் இறைபக்தியையும், தெய்வநம்பிக்கையையும் மதப் பற்றையும் வெளிப்படுத்தி நிற்கின்றதல்லவா?

நாம் என்றால் அப்படிச் செய்வோமா? சிவராத்திரித் தினத்தில்தான் எங்கள் ஊர்ச் சாராயக் கடைகள் திறந்திருக்கும். அன்றுதான் விஜய், கமல், விக்கிரம் ஆகியோரின் காதல் புரிதல்கள் தொலைக்காட்சி வாயிலாக எங்கள் உள்ளங்களுக்கு கிளுகிளுப் பேற்றும். பியர் போத்தல்களுடன் இளவல்கள். கூடவே, அக்கினி குண்டத்தில் இருந்து எழுவது போல சிகரட்புகை.

சிவசிவா உனக்கென்ற இரவில் இப்படியயன்றால் நீ எப்படி எங்களுக்கு உதவுவாய்! எங்கள் நடத்தை பிடிக்காமையால் நீ விட்டுவிலகி எட்டச் செல்ல புத்தருக்கு அவர்களின் பிரார்த்தனை பிடித்துக் கொண்டது. அதனால் அவர் வன்னியிலும் குடியேறுகிறார். வன்னியில் இருந்த மக்கள் மீள்குடியேற முதல் அவருக்கு ஏன் இந்த அவசரம் என்று கேளாதீர்கள்.

முதலில் நாங்கள் திருந்துவோம். இறைவனை மகிழ்விப்போம். அவன் சங்கரன். ஒரு கணப்பொழுதில் சங்காரம் செய்வான்.,பின்பென்ன எங்கள் தாய் மண்ணில் எங்களுக்கு என்ன குறை? திருந்துவோமா? திருத்துவோமா? நடக்குமா? நடந்தால் நாம் சொன்னது நடக்கும்
- யாழ்நகரிலிருந்து வெளியாகும் வலம்புரி  பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்திலிருந்து -

கருத்துகள் இல்லை: