ஞாயிறு, 30 மே, 2010

மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருப்போரூர் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உத்தரப்பிரதேச மாநிலம், அலிகாரைச் சேர்ந்த அனித்ரா பெசிசியா (19) என்ற மாணவி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்தார்.

இந்தக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வகுப்பறைகளில் கேமரா பொருத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன் அனித்ரா வகுப்பறையில் சக மாணவருடன் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து அனித்ராவை கண்டித்த கல்லூரி நிர்வாகம் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தது. இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் மீண்டும் அனித்ரா நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கல்லூரி நிர்வாகி ஒருவர் அழைத்து மிகக் கடுமையாக கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அனித்ரா தனது விடுதி அறையில், நைலான் கயிற்றில், மின் விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தரப்பட்டு, கதவு உடைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே அனித்ராவின் சாவுக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என்று கூறி மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகியின் அறைக்குசென்று கடும் வாக்குவாதம் செய்தனர். அங்கிருந்த ஊழியரை அடித்து உதைத்தனர். அலுவலக அறையும் சூறையாடினர்.

கல்லூரி கட்டிடத்தின் ஜன்னல், கதவு கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.

மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கல்லூரி நிர்வாக அலுவலர் சதீஷ் கன்னாவை (27) கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: