வெள்ளி, 4 ஜூன், 2010

அருந்ததிராய்,மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை

மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை என்று எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார்,பிரபல ஆங்கில எழுத்தாளரான அருந்ததிராய் (வயது 48). பிரசித்தி பெற்ற புக்கர் பரிசு பெற்றவர். சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து காங்கிரசிடமிருந்தும், பாரதீய ஜனதாவிடமிருந்தும் ஒரே நேரத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டவர் இவர்.

இப்போது மறுபடியும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். இம்முறை அவர் குரல் கொடுத்திருப்பது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி மனித வேட்டை நடத்தி வரும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகத்தான்.

காந்தீயம் வெற்றி பெறுவதில்லை...

மும்பையில், ஜனநாயகத்தை காக்கிற உரிமைக்குழுவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் மீதான யுத்தம் என்ற தலைப்பில் அருந்ததி ராய் ஆற்றிய உரையின் போது கூறியதாவது:-

தற்போதைய சூழலில் காந்தீயக் கொள்கைகள் வெற்றி பெறுவதில்லை. எனவேதான் நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நான் வன்முறையை ஆதரிப்பவள் அல்ல. அதேபோன்றுதான் அரசியல் ஆய்வு அடிப்படையிலான கடுமையான கொடுஞ்செயல்களுக்கு முழுமையாக எதிரானவள்.

இது (மாவோயிஸ்டுகள் போராட்டம்) ஆயுதப்போராட்டம். காந்தீய வழியிலான எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தேவை. ஆனால் இங்கே அது இல்லை. இந்த வழியிலான போராட்டத்தை (ஆயுதமேந்திய போராட்டம்) கையில் எடுப்பதற்கு முன் அவர்கள் வெகுவாக விவாதித்திருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு ஆதரவானவள். இதற்காக நான் கவலைப்படவில்லை. என்னை வேண்டுமானால் பிடித்து சிறையில் தள்ளுங்கள்.

கனிமங்கள், தண்ணீர், காடுகள் போன்ற இயற்கை வளத்தினை அடைவதில் பழங்குடியினருக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறுகிற யுத்தத்தின் தொடர் விளைவுதான் நக்சலைட்டுகளின் வன்முறை.

99 சதவீத மாவோயிஸ்டுகள்-பழங்குடியினர் ஆவார்கள். அதே நேரத்தில் 99 சதவீத பழங்குடியினர்-மாவோயிஸ்டுகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: