ருண் தேஜ்பால், என்னுடைய முதல் நாவலான “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” நூலைவெளியிட்ட “இந்தியா இங்க்” நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அவர் தொடர்பான சமீப நிகழ்வுகளைக் குறித்த என் எதிர்வினையை பல பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த ஆரவாரமான ஊடக கும்மியடிப்புகளுக்கு நடுவே என் கருத்து எதையும் வெளியிட நான் தயங்கினேன். கீழே விழுந்து விட்ட ஒரு மனிதனை மிதிப்பது அற்பமானதாக தோன்றியது. குறிப்பாக, தான் செய்த செயலின் விளைவுகளிலிருந்து அவர் எளிதில் தப்பி விட முடியாது என்றும் அவரது தவறுக்கான தண்டனை வந்து கொண்டிருக்கிறது என்றும் தோன்றிய போது அவரை மேலும் தாக்குவதை தவிர்க்க நினைத்தேன். ஆனால், இப்போது அது அவ்வளவு நிச்சயமின்றி போயிருக்கிறது. வக்கீல்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், பெரிய அரசியல் சக்கரங்கள் சுழல ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு மேலும் நான் மௌனமாக இருந்தால் அதற்கு பல விதமான அர்த்தங்கள் கற்பிக்கப்படும் அபாயம் இருக்கிறது.