திங்கள், 25 நவம்பர், 2013

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரே கொலையாளிகள் ! நீதிமன்றம் தீர்ப்பு


டெல்லி: டெல்லி அருகே இளம்பெண் ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர் டாக்டர் ராஜேஷ் தல்வார், நுபுர் ஆகியோர் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.


டெல்லி அருகில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார். அவர்களுடைய 14 வயது மகள் ஆருஷி. 2008, மே மாதம் 15-ந்தேதி தமது படுக்கையறையில் ஆருஷி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அது குறித்து விசாரணை நடத்திய உத்தர பிரதேச போலீஸார் ராஜேஷ் தல்வார் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ்தான் ஆருஷியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், மறுநாள் தல்வார் தம்பதி வசித்த குடியிருப்பு மாடியில் வேலைக்காரர் ஹேம்ராஜ் (45 வயது) சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதையடுத்து, மீண்டும் விசாரணை நடத்திய உத்தர பிரதேச போலீஸ், ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் மாநில போலீஸார் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது உத்தர பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு, கழித்து சரியான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொள்ள விரும்புவதாக காஜியாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிபதி எஸ். லால், விசாரணையைத் தொடரும்படி உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஆருஷியின் பெற்றோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தனர்.
ஆனால், காஜியாபாத் சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று அந்த நீதிமன்றங்கள் தெரிவித்துவிட்டன. இந் நிலையில், ஆருஷியின் தாய் நூபுர் தல்வார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இக் கொலை வழக்கு தொடர்பாக தல்வார் தம்பதி 15 மாதங்களுக்கும் மேலாக தொடர் விசாரணையை சந்தித்து வந்தனர். ஏறக்குறைய ஐந்தரை ஆண்டுகளாக ஆருஷி கொலை வழக்கு ஊடகங்கள் வழியாக பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந் நிலையில், விரைவில் ஓய்வுபெற உள்ள நீதிபதி எஸ். லால் இன்று இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார்.
ஆருஷி, ஹேமராஜ் கொலையில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.  tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: