ஞாயிறு, 24 நவம்பர், 2013

வேடந்தாங்கல் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியது


மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு இச்சரணாலயம் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 22) திறந்துவிடப்படுகிறது. செங்கல்பட்டுக்கு தென்மேற்கில் செங்கல்பட்டு - உத்தரமேரூர் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வெளிநாட்டுப் பறவைகள் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். நீர் நிறைந்த பகுதிகளில் பறவைகள் தங்கி ஓய்வு எடுக்கின்றன. வேடந்தாங்கல் பகுதியைச் சுற்றியுள்ள மதுராந்தகம், வெள்ளபுதூர், வளையபுதூர், உத்தரமேரூர், மலைவையாவூர் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து செய்யப்படுகிறது. கடந்த சிலநாள்களாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுப்பணித் துறையினரால் கட்டப்பட்ட இரண்டு பெரிய கால்வாய்கள் வழியாக வந்து வேடந்தாங்கல் ஏரியின் நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

வேடந்தாங்கல் ஏரியில் நீர் நிரம்பியுள்ள நிலையில் சீசனும் தொடங்கிவிட்டது. பல தேசங்களில் இருந்து பறவைகள் வேடந்தாங்கலுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.கீழே சிறுத்தும் அகன்று விரிந்த கிளைகளும் கொண்ட கடம்ப மரங்கள்தான் இந்த பறவைகளின் தேர்வாக உள்ளது. பறவைகளுக்குப் பிடித்த இந்த கடம்ப மரங்கள் வேடந்தாங்கல் ஏரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. கூடுகட்டி வசிப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் பறவைகள் இப்பகுதியை தேர்ந்தெடுக்கின்றன.
இவற்றின் வரவை எதிர்நோக்கி வனத்துறையினர் அதிக எண்ணிக்கையில் கடம்ப மரங்களை வளர்த்துள்ளனர்.
மேலும் 73 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான நீர்ப் பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது.
மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரிக்குள் வளர்ந்துள்ள கடம்ப மரங்களில் கூடுகட்டி வாழும் பறவைகளை கண்டு களிக்கும் வகையில் ஏரிக்கரையோரமாக 1.4 கி.மீ. தொலைவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க உயரமான பரண் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலமாக பறவைகளை கண்ணருகில் பார்த்து ரசிக்கும் வசதியையும் வனத்துறையினர் செய்துள்ளனர்.
கனடா, சைபீரியா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா ஆகிய குளிர்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான 26 பறவை வகைகள் உள்பட 45 ஆயிரம் பறவையினங்கள் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். கொக்கு வகைகள், நீர்காகங்கள், நாரைகள், வெள்ளை நாரை, கூழைக்கடா, நைட்ஹெரான், க்ரே ஹெரான், ஸ்பூன்பில், லிட்டில் எக்ரெட், ஒயிட் இபிஸ், கேட்டில் எக்ரெட், பின்டெய்ல் என்னும் ஊசிவால் வாத்து, டாப் சிக், ஷோவல்லர டக் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தங்கள் நாட்டிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு விடைபெற்றுச் செல்கின்றன.
மேலும் குளிர் பிரதேசங்களில் இருந்து வரும் உள்ளான், பழுப்பு வாலாட்டி போன்ற பறவையினங்களுடன் உள்நாட்டுப் பறவைகளான வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டு கொக்கு, நத்தை குத்தி நாரை போன்ற பறவைகளும் வேடந்தாங்கல் ஏரிக்கு வருகை தருகின்றன.இச்சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இச்சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்கு வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படுகிறது.
தங்கும் வசதிகள் தேவை:இச்சரணாலயத்துக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் பறவைகளை கண்டுகளிக்க கூடுதல் கோபுரங்களையும் அமைத்துள்ளனர்.
ஆனால் இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
22ம் தேதி முதல் சரணாலயம் திறப்பு
வேடந்தாங்கல் நாட்டின் பழமையான நீர்ப் பறவைகள் சரணாலயமாகும். கனடா, சைபீரியா,ஆஸ்திரேலியா ஆகிய குளிர்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான 26 பறவை வகைகள் உள்பட 45 ஆயிரம் பறவையினங்கள் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம்.   dinamani.com

கருத்துகள் இல்லை: