ராஜராஜன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுவோர்
அவன் கட்டிய கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியுமா?
இந்த உரிமைக்காகப் போராட முன்வாருங்கள் - அதுதான் மான உணர்ச்சி!
ராஜராஜன் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்
என்று உரிமை கொண்டாடுவோர், அந்த ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையான்
கோவிலுக்குள் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்ய உரிமை உண்டா? அதற்காகப்
போராடுவதுதானே மான உணர்ச்சிக்கு அழகு? என்று திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெரியார் பிறந்த மண்ணான, திராவிடர்
இயக்கத் தொட்டிலான தமிழ்நாட்டில், பாழும் வாக்கு வங்கி அரசியலுக்காக நாளும்
ஜாதி வெறி, மதவெறிக்கான தீய சக்திகளும், அவற்றின் கூலிப்படைகளும் மலிந்து
வருவது மிகவும் ஆபத்தானதும், கேவலமானதும் - வன்மையான
கண்டனத்திற்குரியதாகும்.
ஜாதி ஒழிப்பிலும், சமூகநீதியிலும்
நம்பிக்கை உடைய அத்தனை முற்போக்குச் சக்திகளும் ஒரே அணியில் திரண்டு
கடுமையாக, போர்க்கால அடிப்படையில் பணியாற்ற முன்வரவேண்டியது அவசர
அவசியமாகும்.
தலைவர்களின் பெயர்களில் மாவட்டங்கள்
கொஞ்சகாலத்திற்கு முன்பு தமிழ்நாட்டின்
அரும்பெரும் தலைவர்களின் பெயர்கள் அவர்களது தியாகத்திற்காகவும்,
தொண்டிற்காகவும், மாவட்டங்களுக்கு சூட்டப்பட்டன. தந்தை பெரியார் பெயர்
தொடங்கி, தொடர்ந்தது.
உடனே ஜாதித் தலைவர்களை முன்னிறுத்தி
புதிது புதிதாக, தோண்டித் துருவி, அவர்களின் பெயர்களை வைக்கக்கோரி
வேண்டுகோள் கிளம்பியது; வாக்குகளைப் பெற ஆட்சிக்கு வந்தவர்களும்,
மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயர்களைச் சூட்டி, குறுக்கு
வழியில் வாக்கு சேகரித்தனர்.
இதனைத் தவிர்த்திடவே, தந்தை பெரியார்;
அறிஞர் அண்ணா பெயர்களைக்கூட நீக்கச் செய்து, ஜாதிவெறி அரசியலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முன்பு தி.மு.க. ஆட்சியில் கலைஞர் இருந்த
(நான்காம் முறை ஆட்சியில்) போது, நாம் கூறினோம்; முதல்வர் கலைஞரும்
துணிந்து மாற்றிவிட்டார்.
புதிய தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டவுடன்,
ஒவ்வொரு ஜாதி சங்கமும்கூட நன்றி, நன்றி என்று ஜாதீய சிமிழுக்குள்
அத்தலைவர்களை அடைத்துக் கேவலப்படுத்தினர். இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?
திருவள்ளுவர் எந்த ஜாதி?
திருவள்ளுவர் பெயரை மாவட்டத்திற்கு
வைத்தபோது, ஒருவரும் விளம்பரம் - நன்றி அறிவிப்பு தரவில்லை; காரணம், அவர்
என்ன ஜாதி என்று அவர்களுக்கு உறுதிப்படுத்தி தெரிவிக்கப்படவில்லை.
திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தையும்கூட ஜாதிக்குள் அடக்கிடப் பார்த்தது கொடுமையல்லவா?
தியாகச் செம்மல் வ.உ.சி.யை ஜாதி சிமிழுக்குள் அடைப்பதா?
கப்பலோட்டிய தமிழர் தியாகச் செம்மல் வ.உ.சி. அவர்களைக்கூட இன்று வெறும் ஜாதி வட்டத்திற்குள் அடக்கிக் குறுக்கிவிட்டனர்!
உலகமகா அறிவாளியும், உன்னத சமூகநீதிப்
புரட்சியாளருமான அண்ணல் அம்பேத்கர், அனைத்து மக்களுக்கும் உள்ள தலைவர்களுள்
ஒருவராவர். அவரை ஏதோ தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர் என்று விஷமமாகக்
குறிப்பிட்டது - ஏற்கத்தக்கதா?
அதுபோல, காமராசர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரை இவ்விஷ முத்திரை குத்தப்பட்டது.
விளைவு...?
கூண்டுக்குள் தலைவர் சிலைகள்!
தென்மாவட்டங்களிலும், பழைய வட ஆற்காடு
தென்னாற்காடு பகுதிகளான மாவட்டங்களிலும் அத்தலைவர்களின் சிலைகளை சிறையில்
வைத்ததுபோல இரும்புக் கம்பி கூண்டுக்குள் அடைத்துப் பாதுகாக்கும்
விசித்திரம்!
வடநாடுபோல அல்லது தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜாதிப் பட்டத்தைப் பெயருக்குப் பின்னால் போடவே வெட்கப்பட்ட நிலை இருந்தது.
ஒரு மரியாதைக்காகப் போடப்பட்டதைக்கூட
அத்தலைவர்களே வெறுத்து தூக்கி எறிந்தனர். 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு
முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில் அந்த வகையிலே தீர்மானமே
நிறைவேற்றப்பட்டது.
இதோடு நிற்கவில்லை, தஞ்சையில் பெரிய
கோவிலுக்குள் ராஜராஜன் சிலை வைக்க தொல்பொருள் துறை அனுமதிக்காததினால்,
வெளியே வைத்துக் காட்டினார் கலைஞர் (கோவில் கட்டிய தமிழன் கதி அதுதானே!).
ராஜராஜன் எந்த ஜாதி என்ற ஆராய்ச்சியா....?
இப்போது தஞ்சையில் பெரிய ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - ராஜராஜன் எந்த ஜாதி என்ற வெட்ககரமான, அநாகரிகமான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்துள்ள (நவம்பர் 16, 2013 பதிப்பில்) செய்தி (3 ஆம் பக்கம் காண்க) தரப்பட்டுள்ளது!
தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்துள்ள (நவம்பர் 16, 2013 பதிப்பில்) செய்தி (3 ஆம் பக்கம் காண்க) தரப்பட்டுள்ளது!
மிகவும் கேவலமாக, கேலிக்கூத்தாக இல்லையா?
பெருமை பேசும் இந்த ஜாதிக்காரர்கள்,
எவரும் ராஜராஜன் கட்டிய கோவிலில் உள்ள மாட்டு உருவத்திற்கோ,
லிங்கத்திற்கோகூட அபிஷேக, ஆராதனை செய்ய உரிமை இல்லையே! காரணம், இவர்கள்
சூத்திரர்; சூத்திரர், சற்சூத்திரர், பஞ்சமர்கள்.
இந்த இழிவை நீக்கி, அர்ச்சனை செய்யும் பூ+செய்=பூஜை செய்யும் உரிமையைப் பெறப் போராடும் எண்ணம் எழுந்ததா?
அதுவல்லவா மானம் உள்ள மக்களுக்கு அழகு?
எனவே, ஜாதி வெறியை மறந்து, உரிமையை நிலைநாட்ட முன்வாருங்கள் - அதுதான் தன்மானத்துக்கு அழகு!
- கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக