Abilash Chandran : அமைச்சர் கில்லி சரத் கொக்கெய்ன் விவகாரம் தந்த நன்மை
தவெகவினர் போதை இல்லா தமிழகம் மராத்தான் நடத்தும்போது திமுக தரப்பு இந்த கொக்கெய்ன் காணொளியை வெளிவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
தவறில்லை. அரசியலில் இப்படியான எதிர்ப்பிரச்சாரமும் வேண்டும்.
அதேநேரம் என்னுடைய பார்வையில் ஒரு அமைச்சர் கொக்கெய்ன் பயன்படுத்துவது பிரச்சினை அல்ல. முதல்வர் மீதே இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்டு.
அதாவது அவர் முன்பு தன் வீட்டில் நடத்திய சினிமா பார்ட்டிகளில் இது வெள்ளமாக ஓடுவதாகச் சொல்வார்கள்.
அவர்தான் என்றில்லை இந்தியாவில் கணிசமான மேற்தட்டு இளைஞர்களின் விருந்துகளில் கொக்கெய்ன் உள்ளிட்ட போதை வஸ்துகள் புழங்குவது சாதாரணமாகி விட்டது.
ஏனென்றால் ஊழல், பெரும் பணம், மேற்தட்டினரின் போதைத் தேவை என ஒரு வலைத்தொடர்பு உருவாகி இருக்கிறது.
இது சுலபத்தில் உடையாது. கீழ்த்தட்டிற்கும் போதை மருந்து பரவப் பரவத்தான் சமூகத்தில் எதிர்ப்பும் அதிகமாகும்.
ஒருமுறை பரவி நிலைப்பெற்றால் பின்னர் இதை வேரறுக்க மூடியாது என்பதே வரலாறு.
தாராளமயப் பொருளாதாரமும் தடையற்ற சந்தையும் பணத்தின் அளவை வைத்தே ஒன்றைக் குற்றமாகப் பாவிப்பதா,
எந்தளவுக்கு அதைக் கட்டுப்படுத்தலாம் எனச் சிந்திக்கும். அரசும் இச்சந்தையின் முகவராக மட்டுமே இன்று இருக்க இயலும். இப்படி இருக்கும்வரையில் போதை மருந்தை யாரும் கட்டுப்படுத்தவோ ஒழிக்கவோ இயலாது.
இது ஒரு பொருளாதார அமைப்பின் இயல்பின் பிரச்சினை,
இது ஒரு குற்றமோ ஒழுக்கப் பிறழ்வோ அல்ல.
தனிமனிதர்களுக்கும் சந்தைக்கும் குறுக்கே அரசோ வேறு நிறுவனங்களோ வரத் தயங்கும் எல்லா நாடுகளிலும் போதை மருந்துகள் கட்டுப்பாட்டை மீறி எல்லா மட்டங்களிலும் கிடைக்கும்.
சந்தைக் கலாச்சாரம் வளரும்போது போதைப் பழக்கமும் அதிகரிக்கும்.
வேளாண் பண்பாட்டும், கிராமப் பண்பாடும் ஓங்குகிற காலங்களில் போதை மருந்து மாபியாவால் அங்கு ஊடுருவ முடியாது.
அதற்கான பணமும் சந்தர்ப்பமும் அங்கு இருக்காது.
போதை மருந்து, மது ஆகியவற்றை நாம் அரசின் கையாலாகாத்தனமாகவும்,
ஊழலாகவும் மட்டும் பார்ப்பது நம்மைச் சமாதானப்படுத்தத் தான்.
தாராளவாத சந்தைக் கலாச்சாரம் நமக்கு கட்டற்ற சுதந்திரத்தையும் தருகிறது.
நிறைய பணமும் வருகிறது. இரண்டும் இம்மாதிரி குற்றங்களைத் தோற்றுவிக்கின்றன.
இந்தச் சுதந்திரம் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே, செல்வத்தையே ஒரு ஒழுக்கக் கேடாக, ஏற்றத்தாழ்வின் காரணியாகப் பார்த்தால் மட்டுமே நம்மால் சில மாற்றங்களைச் சாத்தியமாக்க முடியும்.
உ.தா., யார் எப்படிச் சம்பாதித்தாலும் அவரிடம் பணம் இருந்தால் அவர் நல்லவர், பாராட்டத்தக்கவர் எனும் போக்கு இன்று வலுவாக உள்ளது.
அவரிடம் பணம் உள்ளது, அவர் போதை மருந்தைப் பயன்படுத்துகிறார், அதுவும் பாராட்டத்தக்கவே என்று நினைக்க நம்மை எது தடுக்கிறது?
சொல்லப் போனால் அப்படிச் சிந்திப்பதற்கு ரொம்ப பக்கத்தில்தான் நாம் நிற்கிறோம்.
எதுவோ நம்மை கொஞ்சம் தடுத்து வைத்திருக்கிறது. கொஞ்ச நாட்களில் அங்கு போய்விடுவோம். இது உலகம் முழுக்க நடப்பதே. பழைய சமூகத்தில் தனிமனிதர்களின் பரிவர்த்தனைகளை சமூகம் கட்டுப்படுத்தியது. அன்று இப்பிரச்சினைகள் குறைவு. இன்று அரசு தனிமனிதரின் சுதந்திரத்தில் கைவைக்கும் நாடுகளில் மட்டுமே ஓரளவுக்கு இதைத் தடுக்க இயல்கிறது. இதுவே உலகம் முழுக்க உள்ள நிலைமை.
அரசை எடுத்துக் கொள்வோம் - பணம் நல்லது,
பணம் மட்டுமே நல்லது, வழிமுறை அல்ல, போதை மருந்தை விற்றுப் பணம் சம்பாதிக்கிறவரும் நல்லவரே என அரசும் நிர்வாகிகளும் நினைத்தால் அது எப்படித் தப்பாகும்?
(சட்டம் அடிக்கடி மாறுவதுதானே.) அரசு மாற வேண்டுமெனில் சமூகம் மாற வேண்டும். நம்மைச் சுற்றி முறைகேடாகச் சம்பாதித்து பெரும் கோடீஸ்வரரானவர்கள் ஏராளம். இவர்களை விமர்சிப்பதில் முதலில் துவங்குவோம்.
அப்போதுதான் நமது பழக்கங்களும் மாறும். பணம் மட்டுமே போதாது,
பணம் பல கேடுகளை விளைவிப்பது எனும் நம்பிக்கை பரவ வேண்டும். நமது ஒரு எதிர்-தாராளமயமாக்கல் புரட்சி அவசியம். இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை -
அரசின் மீது கடும் அழுத்தம் இருந்தால் ஓரளவுக்குக் கட்டுப்பாடு வரும். சமூகம் தனிமனிதர்கள் மீது கடும் அழுத்தம் போட்டால் இன்னும் தீவிரமாக மாற்றம் வரும். அதாவது, தனிமனிதர்கள், சந்தை மீது சமூகமும் அரசும் கட்டுப்பாடுகளைப் போடாமல் மாற்றம் வராது. கொஞ்சம் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமல் இதைச் சரிசெய்ய முடியாது.
ஆகையால், ஒரு அமைச்சர் பயன்படுத்துவது சமூகத்தைச் சீரழிக்கப் போவதில்லை. தவெகவில் உள்ள அமைச்சர்கள் ஒழுங்காக ஆட்சி பண்ணுவதில்லை, முழுநேர விளம்பரத் துறைகளை மட்டும் நடத்துகிறார்கள், அவர்கள் எப்பிரச்சினைகள் குறித்தும் தீர்வோ பதிலோ சொல்வதில்லை என்பதே பிரச்சினை.
கொக்கெய்ன் பயன்படுத்துவது, புகைப்பது, குடிப்பது எல்லாம் தனிப்பட்ட விவகாரங்கள். வேலையை ஒழுங்காகச் செய்கிறார்களா? அதற்கான திறனும் அக்கறையும் உண்டா? தலைமைத்துவம், தொலைநோக்குப் பார்வை உண்டா? இல்லை.
ஆனால் இந்த விவகாரத்தால் ஒரு நன்மை விளைந்துள்ளது - போதை மருந்தை இப்படிப் பொதுவெளியில் காவலர்கள் உலவும் இடத்தில் ஒருவர் அசால்ட்டாக எடுத்துப் பகிர்ந்து அதை நுகர்வார், அதைத் தன் நண்பர்கள் பார்ப்பதற்காக ட்வீட் செய்வார் என்று இதற்கு முன் யாராவது கதையிலோ சினிமாவிலோ சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
யாராலும் நம்ப முடியாத விசயங்கள் நடக்கின்றன என்பதை தவெக அரசும் அதன் தலைவர்களும் நமக்குத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். அதற்கு அவர்களை முதலில் பாராட்ட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக