![]() |
Sharmila Seyyid : இந்தக் குழந்தைகள் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.
இன்னும் பத்தாண்டுகளில் இவர்கள் பதினெட்டு வயதையடைவார்கள்.
இதே உடையில் இன்னும் மகிழ்ச்சியாக உட்கார்ந்து கதைபேசுவார்கள்.
நீச்சலடிப்பார்கள். எந்தப் பையனும் நீ என்ன உடை உடுக்கவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று பெண்ணுக்கு வகுப்பெடுக்க மாட்டான்.
தொடை தெரிய உடை இருக்கிறதே அப்போ அவள் அந்த மாதிரிப் பெண் என்ற எண்ண ஓட்டம் கூட வராது.
இந்தக் கலாசாரத்தில் ஆசியப் பண்பாட்டிலிருந்து வந்தவர்களுக்குப் பல ஒவ்வாமைகள் இருக்கலாம். இருப்பினும் என் இரு ஆண் பிள்ளைகளும் பெண்களை மதிக்கிறவர்களாக நீச்சலுடையில் கூட அவர்களோடு கண்ணியமாக அருகே அமர்ந்து உண்டு களிக்கும் 'மனிதர்களாக' வளர்வதைக் கண்டு உண்மையில் பெருமிதம் கொள்கிறேன்.
நீளக் கை, நீண்ட உடைகளில் தயாராகும் என்னைக் காணுகையில், 'வெளிய என்ன டெம்பரேச்சர் தெரியுமா மம்மீ' என்று அலர்ட் பண்ணி உடை மாற்ற வைக்கும் ஆண்பிள்ளைகளோடு மகா சௌகரியமாக உடை அணிவதற்காக இந்த சூழலை பெரிதினிதாய் காண்கிறேன்.
இப்போது சிலபேர் நாம் இஸ்லாமியர் நமக்கென்று ஒரு கலாசாரமுள்ளது. அதன்படியே உடை அணியணும் என்பார்கள். இஸ்லாம் ஆடை பற்றி சொன்னது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும். அதோடு அது சொல்லப்பட கால சூழல் வேறு. அது ஒரு வழிகாட்டல் மட்டுமே தவிர, பெண்களை அடக்கியாளத் தரப்பட்ட ஆயுதமல்ல.
இஸ்லாத்தின் மையப் போதனைகளைப் பார்த்தால், முதலில் பார்வையைக் கட்டுப்படுத்தச் சொல்லப்படுவது ஆண்களுக்குத்தான். “நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் கூறுவீராக; அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் ஒழுக்கத்தைக் காத்துக் கொள்ளட்டும்” (குர்ஆன் 24:30). அதற்குப் பிறகே பெண்களைப் பற்றிய வழிகாட்டல் வருகிறது (24:31). ஆனால் இன்று பலர் இந்த வரிசையையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள். பெண்களின் உடை பற்றிய உரைகள் முடிவதேயில்லை. ஆனால் ஆண்களின் பொறுப்பைப் பற்றிய உரைகள் அரிதாகவே கேட்கின்றன.
நபி முகம்மது அவர்களின் வாழ்க்கையிலும் பெண்களை அவமதிப்பதோ, அவர்களை ஆடையின் அடிப்படையில் தீர்ப்பதோ ஒரு பண்பாக இருந்ததில்லை. “உங்களில் சிறந்தவர்கள், தங்கள் மனைவியரிடம் சிறந்த முறையில் நடப்பவர்களே” என்ற அவர்களது போதனை, பெண்களின் உடையைக் கட்டுப்படுத்துவதைப் பற்றியா? இல்லை. அவர்களிடம் கண்ணியமாகவும் கருணையுடனும் நடப்பதை அளவுகோலாக வைத்தது.
ஒழுக்கம் என்பது பெண்களுக்கானதில்லை. அனைவருக்கும் பொதுவானது. அதுவும் அதன் மதிப்பீடு ஒருவரின் உடையில் மட்டும் இல்லை; அது பார்வையில், மொழியில், நடத்தையில், அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் என பரந்த பொருள்கொண்டது. ஒரு பெண்ணின் உடையைப் பார்த்து அவளின் குணத்தையும் மதிப்பையும் தீர்மானிக்கத் தொடங்கும் இடத்தில்தான் ஒழுக்கம் தோல்வியடைகிறது.
என் பிள்ளைகள் வளரவேண்டியது பெண்களை எச்சரிக்கும் ஆண்களாகவோ பெண்களின் உடலைக் கட்டுப்படுத்துகிற ஆண்களாகவோ இல்லை;
பெண்களை சம மனிதராக காண்கிற, அவர்களின் எல்லைகளையும் சுதந்திரத்தையும் மதிக்கிறவர்களாக. அதுதான் நான் அவர்களிடம் விட்டுச் செல்ல விரும்பும் பண்பாடும், அதுதான் நான் புரிந்துகொண்ட இஸ்லாமிய அறநெறியும்.
குறிப்பு: இந்த ஒளிப்படங்கள் உரியவர்கள் அனுமதியோடே பதிவிடப்படுகின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக