சனி, 27 ஜூன், 2026

திரு கே பாக்யராஜ் காலமானார் - தமிழ் திரையுலகின் இறுதி Feel good moive maker பீல் குட் மூவியே மேக்கர்

 

ராதா மனோகர் : திரு கே பாக்யராஜ்தான் தமிழ் திரையுலகின் இறுதி Feel good movie maker! 
இவரை திரைக்கதை மன்னன் என்று கூறுகிறார்கள் 
அது ஓரளவு சரிதான் 
ஆனால் அதைவிட இவரை எனக்கு பிடித்திருப்பது இவரின் feel good movie பீல் குட் மூவிகளுக்காகத்தான் 
எம்ஜியார் படங்களும் இந்த வகையில் ஓரளவு வரும் 
சமூக நியதிகளுக்குள் கொஞ்சம் கட்டுப்பட்டுதான் எம்ஜியார் படங்களின் பீல் குட் தன்மை இருக்கும் 
அந்த நியதிகளை உடைத்து எறிந்ததில் பாக்யராஜின் பங்கு  அதிகம்தான் 
இவரின் படங்களில் இடம் பெற்ற பல சிறு சிறு காட்சிகள் 
பல  சமூக அவலங்களை மிக எளிதாக எள்ளிநகை ஆடியிருக்கிறது 
உதாரணமாக தூறல் நின்று போச்சு படத்தில் பெண் பார்க்க வரும் காட்சியில் சுலோக்சனா பயந்து பயந்து நடுங்கும் போது  பாக்யராஜ் 
ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இது பயத்தில டீயை கீயை கொட்டிடப்போகுது என்று கூறிக்கொண்டே அவரின் தட்டை வாங்கி தானே எல்லோருக்கும் கொடுப்பார் 


அந்த காலத்தில் இது ஒரு ஒரிஜினல் சமூக புரட்சி என்று கூறலாம் 
பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜை காதலித்து விட்டு பின்பு தனது சின்ன வயசு காதலன் அவன் அல்ல என்று தெரியும் போது  ரோகிணியின் பாத்திரம் அதை எப்படி எதிர்கொள்கிறது  என்பதை காட்டியது.
கதாநாயகி ரோகிணியின் நிலைகுலைந்து போன மனதை காட்டிய விதம் உருக்கமாக செதுக்க பட்டிருந்தது  
பெண்களின் நீண்ட நாள் ஆதங்கங்களை  புரிந்து கொண்ட ஒரு ஆண்மகனாக  அன்று தமிழ் திரையை ஆட்சி செய்தவர் திரு கே பாக்யராஜ்.
டார்லிங் டார்லிங் டார்லிங் பவுனு பவுனு எங்க சின்னராசா ஆராரோ ஆராரோ தாவணி கனவுகள் போன்ற படங்களில் எல்லாம் சமூகத்தின் பல நோய்களுக்கு  நகைச்சுவையோடு மருத்துவம் பார்த்திருக்கிறார்.
தாவணி கனவுகளில் சிவாஜியின் பாத்திரம் அவரின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத பாத்திரம்தான்.
தூறல் நின்று போச்சு படத்தில் வரும் நம்பியார் பாத்திரமும் ஒரு அபூர்வமானதுதான். 
இவரின் படங்களில் உள்ள பல காட்சிகள் மிகவும் ஒரிஜினலானவை  
அடுத்த காட்சி அல்லது அடுத்த வசனம் எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடியாத அளவு  புதிதாக இருக்கும் 
கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும்  மிக சரியாக பயன்படுத்திய புத்திசாலி 
இவரின் படங்களில் மிக சிறு சிறு பாத்திரங்களில் வந்து போகும் செட் புரொபர்ட்டி பாத்திரங்கள் கூட  ஒரு தனிப்பாத்திர படைப்பை  கொண்டிருக்கும் 
உதாரணத்திற்கு டார்லிங் டார்லிங்கில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்தை மறந்துவிட முடியுமா 
இது நம்ம ஆளு படத்தில் வரும் அந்த உள்ளூர் பூசாரியை கூட மறக்க முடியாதே 
இவரின் படங்களில் இது நம்ம ஆளு ஒரு மைல் கல் என்று கூறவேண்டும் 
ஜாதி என்ற மிக பெரிய பாரத்தை இவர் கையாண்ட விதம்   எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதற்கு இவர்தான் இசையமைத்தார் என்பது மிக மிக ஆச்சரியமான விடையம்  - சிறந்த இசை!
பார்பனீயத்தோடு  மிக சரியாக மோதிய ஒரு படம் இது நம்ம ஆளு 
இதில் தப்பி தவறியும் வெறுப்பு அரசியல் தலை தூக்கவில்லை 
அதே சமயம் ஒரு ஒடுக்கப்பட்டவனின்  கண்ணீரை எதிரியின் மனமும் கரையும் வண்ணம்  படமாக்கி இருக்கிறார்.
இதில் கூட குமரி முத்துவின் பாத்திரம் எவ்வளவு பெரிதாக தெரிகிறது 
ஒரு நாவிதரின் பாத்திரத்தில் குமரிமுத்து வாழ்ந்து விடுகிறார் 
வரலாற்று ரீதியாக சுயமரியாதை அரசியல் அதிகமாக பேசப்பட்டது  அநேகமாக barber  சலூன்களில்தான்
 அதுவும் அந்த நாவிதர் பாத்திரம் மூலம் வெளிக்காட்டி இருப்பது அரசியலும் அழகியலும் வரலாறும்  சேர்ந்த திரைமொழி!  
வழக்கமாக செட் புரொபேர்ட்டி போல வந்து போகும் குமரி முத்துவின் வாயால்  சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றை  அதன் வலிகளை அது சந்தித்த வெற்றியை,
எல்லாவற்றிலும் பார்க்க அதன் தேவையை கூறியிருக்கிறார் திரு கே பாக்யராஜ்.
எல்லா ஜாதிக்குள்ளும் இருப்பது மனிதர்கள்தான் என்ற கோட்பாட்டை முன்னிறுத்திதான் 
இது நம்ம ஆளு படத்தை இயக்கி உள்ளார்.
ஏராளமான பரீட்சார்த்த முயற்சிகளை செய்த பாக்யராஜின் படங்கள் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றவை என்பது முக்கியமாக கவனிக்க படவேண்டிய விடயம்.
உண்மையில் தமிழில் ஆஸ்கார் பரிசுக்கு உரிய படம் என்று இது நம்ம ஆளு படத்தைத்தான் நான் சொல்வேன் 
இந்திய மண்ணின் ஒரு கோரமான பிரச்னையை திரைப்பட அழகியலோடு  உளவியல் ரீதியில்  மக்கள் முன்வைப்பது  அசாத்திய சாதனைதான் 
உண்மையிலேயே திரு கே பாக்யராஜ் பற்றி எழுதுவது இலகுவான காரியமல்ல 
மனிதர் ஏராளமாக சாதித்து விட்டு போயிருக்கிறார்!
வெறும் காட்டுமிராண்டி வன்முறைகளையும்  ஹீரோ வழிபாட்டு குப்பைகளையும் ஒரிஜினல் போர்னோகிராபியை தூக்கி அடிக்கும் அளவுக்கு வரும் மலிவு பதிப்பு திரை குப்பைகளையும்  
ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று கூறி தங்கள் இயலாமையை அம்பலமாக்கும் திரை உலகம் பாக்கிராஜ் பாரதிராஜ் ஸ்ரீதர் பந்துலு பீம்சிங் போன்றவர்களையும் படிக்க வேண்டும் 
பாக்யராஜ் என்ற  கலைஞனுக்கு அழிவில்லை  இவரின் படங்கள் ஒவ்வொன்றும் பல்லாண்டுகள் வாழும் 
இன்று யார் யாரையோ எல்லாம் சினிமாவில் சமூக புரட்சி பண்ணுகிறார்கள் என்று கூறுகிறார்கள் 
ஆனால் தமிழ் சினிமாவில் பாக்யராஜின் சாதனையை  இன்றுள்ள எந்த இயக்குனரும் நெருங்கவே இல்லை

கருத்துகள் இல்லை: