செவ்வாய், 23 ஜூன், 2026

யாழ்ப்பாணம் கிளிநொச்சி வீதி விபத்துக்கள்! தொடர் உயிரிழப்புக்கள்

 Murukaiya Thamilselvan :  கிளிநொச்சி வீதிகளில் மலியும் மரணங்கள்: சமூக வலைத்தளப் போராளிகளாகவே இருந்துவிடப் போகின்றோமா?
மற்றுமொரு வீதி விபத்து, மற்றும் ஒரு பெறுமதிமிக்க உயிர் பலி! கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த கல்வியளாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான பெருமாள் கணேசன் அவர்களை நாம் இழந்து நிற்கின்றோம். அதுவும் எங்கே?
 கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு நேர் முன்பாக உள்ள பாதசாரி கடவையில்! வீதியைக் கடக்க முயன்றவரை, அதிவேகமாக வந்த ஆடம்பர உந்துருளி மோதி இழுத்துச் சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரது மூச்சு அடங்கியிருக்கிறது. 


14 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் லீசிங்கில் எடுத்து, ஒரு மாதம் கூட ஆகாத அந்தப் பெரிய மோட்டார் சைக்கிள், இன்று ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின் வழிகாட்டியைப் பலியெடுத்திருக்கிறது. அதிவேகம், பொறுப்பற்றத்தனம், விதிமுறைகளை மதிக்காமை, மதுபோதை, போதைப்பொருள் பாவனை – இவைதான் இன்றைய கிளிநொச்சி இளைஞர்களின் அடையாளமாக மாறி வருகிறதா? இந்த நாட்டில் கிளிநொச்சி மாவட்டமே அதிக சீரழிவுக்குள்ளாகி வருகிறதே... இதற்கு நாம் என்ன செய்யப் போகின்றோம்?!
எமக்கெல்லாம் மறதி மிக அதிகம்
2024 நத்தார் தினம், மதுபோதையில் வந்த டிப்பர் வாகனம்  மோதி, 34 வயது தாயும் அவரது குழந்தையும் பலியானார்கள். நாம் என்ன செய்தோம்? சில நாட்கள் எழுதினோம், பேசினோம், கடந்து சென்றோம். 
2025 யூலை மாதம், பரந்தன் சந்தியில் மதுபோதை டிப்பர் சாரதியால் 29 வயது இளம் பட்டதாரிப் பெண்
பலியானார். நாம் என்ன செய்தோம்? கவலை தெரிவித்துவிட்டு அடுத்த சம்பவத்திற்கு தயாரானோம். 
2026 மே மாதம், பரந்தனில் மாலை நேர வகுப்பு
முடிந்து திரும்பிய மூன்று சகோதரிகளுக்கு ஒரு சகோதரனான மாணவனை மதுபோதை உந்துருளி பலியெடுத்தது. நாம் கவலையும் கண்டனமும் தெரிவித்துவிட்டு நகர்ந்தோம்.
அதே மே மாதம் உருத்திரபுரம் கரடிபோக்கு வீதியில்  போதைப்பொருள் பாவித்த இளைஞர்களின் அதிவேக உந்துருளி மோதி 31 வயது இளம் தாய் உயிரிழந்தார். நாம் கோபத்தை சமூக வலைத்தளங்களில்
கொட்டிவிட்டு அடுத்த மரணத்திற்காகக் காத்திருந்தோம்
இப்போது அந்த 'அடுத்த மரணம்' கணேசன் சேரின் வடிவில் வந்து நிற்கிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க, அதுவும் பொலிஸ் நிலையத்தின் கண் முன்னே உள்ள
பாதசாரி கடவையில் இந்த கொடூரம் நடந்திருக்கிறது.  நாம் கணேசன் சேரின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை பேசிவிட்டு, ஆழ்ந்த அனுதாபங்கள்' (RIP) போட்டுவிட்டு அவரது ஆளுமையினையும், சேவைகளையும் பாராட்டிவிட்டு அடுத்த விபத்துக்காகக் காத்திருக்கப் போகின்றோமா? இந்த
மரணத் தொடருக்கு நாம் வைக்கப் போவது முற்றுப்புள்ளியா? அல்லது காற்புள்ளியா?
சமூகமாகிய நமக்கும் இதில் பெரும் பொறுப்பு இருக்கிறது. இலட்சங்களில் மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து, பிள்ளைகளின் கைகளில் மரணப்
பிடியைக் கொடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை உணர்வது எப்போது? நம் வீட்டுப் பிள்ளைகள் வீதியில் எப்படிச் செல்கிறார்கள், போதைக்கு அடிமையாகிறார்களா என்று கண்காணிக்கத் தவறுவது ஏன்? நம் கண் முன்னால் வீதி
விதிமுறைகளை மீறிச் செல்பவர்களை ஒரு சமூகமாக நாம் ஏன் தட்டிக்கேட்பதில்லை? சமூக வலைத்தளங்களோடு நம் கடமைகளை முடித்துக் கொள்ளப் போகின்றோமா? அல்லது வீதிக்கு வந்து, இந்த சீரழிவுகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு சக்தியாக மாறப் போகின்றோமா?
அதேவேளை, சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையின் கடமை இங்கே எங்கே போனது? காப்புறுதி (Insurance), வருமான அனுமதிப்பத்திரம் (Tax) முடிந்துவிட்டால், அதை ஒரு பாரிய குற்றமாகக் கருதி வீதியில் மறித்து மிரட்டி வகுப்பு எடுக்கும் பொலிஸாரே... பொறுப்பற்ற முறையில், மது மற்றும் போதைப்பொருள்,மதுபானம் பாவித்து வாகனம் செலுத்துபவர்கள் மீது ஏன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை? வீதியில் செல்லும் பெண்களை மறித்து, சிரித்துப் பேசி வகுப்பு எடுக்கும் சட்டத்தின் காவலர்களே... தலைக்கவசம் இன்றி, அதிவேகமாக வீதியை மரணக் காடாக்கிச் செல்லும் தறுதலைகளை ஏன் நீங்கள் கண்டுகொள்வதில்லை? உங்கள் மூக்கிற்கு நேரே, பொலிஸ் நிலையத்தின் முன்னாலேயே, அதுவும் பாதசாரி கடவையில் ஒரு உயிர் பறிபோகிறது என்றால், இது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பலவீனமல்லவா?
எனவே நான் உட்பட, நாங்கள் அனைவரும் இதற்குப்
பொறுப்பாளிகள். கணேசன் சேரின் மரணமே கிளிநொச்சியின் இறுதி வீதி மரணமாக இருக்க வேண்டும்! சட்டம் கடமையை தவறும்போது சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும். நாம் என்ன செய்யப் போகின்றோம்?! 

கருத்துகள் இல்லை: