ஞாயிறு, 27 டிசம்பர், 2020

கார்களில் பம்பர்களை அகற்ற தீவிரம் காட்டும் போலீஸ்.. திடீரென.. என்ன காரணம்!

Velmurugan P -  tamil.oneindia.com :  சென்னை: திடீரென கார்களில் பம்பர்களை அகற்ற போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இவ்வளவு நாளாக பெரிய விவகாரமாக மாறாமல் இருந்த பம்பர் இப்படி மாறும் அளவுக்கு என்ன நடந்து என்று கார் உரிமையாளர்கள் புழுங்கி கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட பொதுநல வழக்கு. இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உண்மையில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை இருப்பது பலருக்கு தெரியுமா? தெரியாதா என்றே கேள்வி எழுகிறது. ஏனெனில் சமூக வலைதளங்களில் பலர் பம்பர் அகற்றப்படுவதற்கும், அபராதம் விதிப்பதற்கு எதிராக கொதிக்கிறார்கள். எனினும் இங்கு சிலவிவரங்களை தெரிவிப்போம். நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு கடந்த மாதம் விசாரித்தது,


போலீசார் தீவிரம் அப்போது மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், பொதுமக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுவதாகவும், கூடுதல் பம்பர் பொருத்தப்படுவதை தடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் போலீசார் பதில் அளிக்க வேண்டும் எனறு கூறினார். அத்துடன். இவ்வழக்கை ஜனவரி 28ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தனர். இதன்படி நாளை விசாரணைக்கு வரப்போகிறது. இதையடுத்தே பம்பரை அகற்றும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


தரமற்ற சாலை இதை எதிர்த்து கொதிக்கும் கார் உரிமையாளர்கள் சிலர் முன் வைக்கும் வாதம், கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு சேதாரம் ஏற்படுவதைத் தவிர்க்க, 'கிராஷ் கார்டு' எனப்படும் பம்பரை பொருத்துகிறோம். என்ஜின் சேதாரம் ஆகாமல் வண்டியை பாதுகாக்கும் என்கிறார்கள். அத்துடன் தரமற்ற சாலையே விபத்துக்கு காரணம் என்கிறார்கள்.

சென்சார் இது கார் மெக்கானிக்குகளிடம் விசாரித்த போது, என்ஜினை பாதுகாப்பதாக நினைத்து போடும் பம்பர், விபத்து ஏற்படும் போது வாகனத்தில் உள்ள 'ஏர் பேக்' விரிவடைவதை பம்பர் தடுத்து விடும்.. இது பலருக்கு தெரிவதில்லை. பம்பர் பொருத்தப்படாத கார், விபத்தில் சிக்கினால் சென்சார் உடனுக்குடன் வேலை செய்யும். இதனால், 'ஏர் பேக்' உடனடியாக வெளியே வந்து காருக்குள் இருப்பவர்களை சூழ்ந்து உயிரைக் காப்பாற்றும்.ஆனால் பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பம்பர் தாங்கிக் கொள்ளும். இதனால், சென்சார் செயல்படுவதில் சிக்கல் ஏற்படும். காருக்குள் 'ஏர் பேக்' வெளியே வராது. கார் ஓட்டுபவர், காரில் பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படும்.


மின்னல் வேகம் டிரைவர், முன் இருக்கை, பயணிகள் என ஆரம்பமாகி நவீன ரக அனைத்து கார்களிலும் 'ஏர்பேக்' குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஏர் பேக்குகளில் 'கிராஷ்' சென்சார், மேக்னட், பால்பேரிங், காண்டாக்ட் சுவிட்சுகள், டிகொனாஸ்டிக் ரெசிஸ்டர், எஸ்.ஆர்.எஸ்., கம்ப்யூட்டர், இன்ப்லெட்டர், ஏர்பேக்ஸ் இருக்கின்றன.. சென்சார் மூலம் இயங்கும் ஏர்பேக்குகள் அதிவேகமாக கார் செல்வதை அறிந்து கொண்டு, அது குறித்த தகவல்களை எஸ்.ஆர்.எஸ்., கம்ப்யூட்டருக்கு தரும். இதைத் தொடர்ந்து, அதில் உள்ள இன்ப்லெட்டர்கள் செயல்படத் தொடங்கும்.அதிவேகமாக செல்லும் காரின் வேகத்தைக் கணித்துக் கொண்டே இருக்கும் இன்ப்லெட்டர்கள், கார் ஏதாவது ஒன்றின் மீது மோதிய உடனே ஏர்பேக்கினை வெளியே அனுப்பிவிடும்.


'இம்பேக்ட்' சென்சார் எப்படி அனுப்பும் என்றால், கார்களின் முகப்பு பக்கங்களில் 45 டிகிரி கோணத்தில் ஏற்படும் அதிர்வலைகளை உணரும் வகையில் ஏர்பேக் 'இம்பேக்ட்' சென்சார்கள் உ.ள்ளன. இவை மிகமிக பலமாக மோதினால் தான் வேலை செய்யும்,. பலமான அதிர்வலையை 'இம்பேக்ட்' சென்சார் உணர்ந்து நொடியில் உயிர் காக்கும் பைகளான ஏர்பேக்கில் காற்றை நிரப்பி, காரில் உள்ளவர்களைப் பாதுகாக்கும்..


ரேடியேட்டர் ஏர்பேக்குகளின் உள்ளே நடக்கும் ரசாயன மாற்றங்கள் மூலமே ஏர்பேக்கில் நைட்ரஜன் காஸ் நிரப்பப்பட்டு வெளியே வரும். மின்னல் வேகத்தில் நடக்கும் இச்செயல்கள் நம்மை விபத்தில் இருந்து உயிர் தப்ப உதவும். காரில் பம்பர் பொருத்தி இருந்தால், இந்த செயல் ஏதும் நடக்காது. விபத்து ஏற்படும் போது அனைத்து சேதங்களையும் தாங்கும் பம்பர் ரேடியேட்டரை நோக்கி வளைந்து விடுகிறது. இதனால் பலத்த மோதல்கள் காருக்கு ஏற்பட்டாலும் சென்சாருக்கு அதிர்வுகள் வேலை செய்யாது. ஏர்பேக் விரிவடையாமல் போய் விடும். இதனால் விபத்தில் சிக்கும்போது காரில் பயணிப்பவர்கள் உயிரிழப்பார்கள். எனவே நாம் நிச்சயம் காரில் பம்பரை அகற்ற வேண்டும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கப்பட வேண்டியது என்றார்கள்.


கருத்துகள் இல்லை: