ஞாயிறு, 27 டிசம்பர், 2020

இரட்டை இலையை முடக்க சதி செய்வது யார்? . ஓ.பி.எஸ். சைதான் சி.வி. சண்முகம் டார்கெட் செய்கிறார் ?

minnambalam : அதிமுகவுக்குள் மீண்டும் ஒரு எரிமலை உருவாகிக்
இரட்டை இலையை முடக்க சதி செய்வது யார்?

கொண்டிருக்கிறது என்பதை சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தின் டிசம்பர் 26 ஆம் தேதி அன்றைய பேச்சு வெளிகாட்டியிருக்கிறது. கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மண்டல பொறுப்பாளரும், அமைப்புச் செயலாளருமான சிவி சண்முகம்... ”எம்ஜிஆரின் வாரிசு என்று யார் யாரோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரின் வாரிசு என்பது இலை சின்னம் மட்டும்தான். அந்த இரட்டை இலை சின்னத்துக்கு இப்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. இரட்டை இலையை முடக்க சதி செய்கிறார்கள். இந்த தேர்தல் நமக்கு வாழ்வா சாவா தேர்தல். கட்சிக்கு சில தலைவர்கள் துரோகம் செய்திருக்கலாம். ஆனால் எந்த தொண்டனும் அதிமுகவுக்கு துரோகம் செய்யமாட்டான். வரும் தேர்தலில் இரட்டை இலை வென்றாக வேண்டும்" என்று உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார் சிவி சண்முகம்.

அதிமுகவின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் படியாக பேசவேண்டிய மேடையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் ஆபத்தில் இருக்கிறது என்று சிவி சண்முகம் கூறியிருப்பதுதான் அதிமுகவில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்திலும் இப்பொழுது விவாதம் ஆகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்கனவே ஒரு முறை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட இரட்டை இலை டிடிவி தினகரனை வெளியேற்றிய பின்பு பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைப்பின் அடிப்படையில் மீண்டும் வழங்கப்பட்டது. இதில் மத்திய பாஜக அரசின் பங்கு அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் மீண்டும் இரட்டை இலை முடக்கப்படுவதற்கான சூழல் என்ன என்று அதிமுகவிலேயே விசாரித்தோம்.

"அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப் பட்டார். அதற்கு முன் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்தன. கட்சிக்குள்ளேயே தனக்கு தரப்பட்ட நெருக்கடியின் காரணமாகத் தான் எடப்பாடி பழனிச்சாமி பெயரை முதல்வர் வேட்பாளராக பன்னீர்செல்வம் முன்மொழிந்தாரே தவிர... அவருக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

இதனை அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் காட்டிக் கொண்டே இருக்கின்றன. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளில் புதிய வேகமும் புதிய அணுகுமுறையும் தென்பட்டன. இதில் ஒரு சில நடவடிக்கைகள் தன்னை புறக்கணிக்கும்படி இருப்பதாக பன்னீர்செல்வம் கருதினார்.

டிசம்பர் 19ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி தனது பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி துவக்கினார். கட்சி ரீதியான ஒரு நடவடிக்கையை இப்படித் தான் தோன்றித்தனமாக முதல்வர் செய்யலாமா என்று பன்னீர்செல்வம் வருத்தப்பட்டிருக்கிறார். ஆனால் பன்னீர்செல்வத்தின் வருத்தத்தையும் கோபத்தையும் அதிமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. குறிப்பாக பன்னீருக்கு ஆதரவாக இருந்த கே.பி.முனுசாமியே இப்போது எடப்பாடியின் பக்கம் சாய்ந்துவிட்டார்.

இந்த நிலையில்தான் முதல்வர் வேட்பாளர் பற்றிய பாஜகவின் அணுகுமுறையும் அதிமுக கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டு பண்ணியது. அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமைச்சர் வேட்பாளரை அறிவித்தே ஆக வேண்டும் என்று பன்னீர்சல்வத்திற்கு கேபி முனுசாமி உட்பட பலர் அன்று அழுத்தம் கொடுத்த போது... இதற்கு பன்னீர் சொன்ன பதில், "கூட்டணி கட்சிகளிடம் விவாதித்து ஜனவரிக்கு மேல் இதை அறிவித்தால் என்ன?" என்பதுதான்.

பன்னீர்செல்வத்தின் இதே கேள்வியைத்தான் இப்போது பாஜகவும் தன் கட்சி அளவில் கேட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஏன் இந்த அவசரம்? கூட்டணிக் கட்சி என்ற வகையில் நம்மோடு ஆலோசித்தார்களா? முதல்வர் வேட்பாளர் அறிவிக்கும் நிகழ்வை கட்சி நிகழ்வாகவே நடத்திவிட்டு கூட்டணியின் சம்மதம் கேட்டால் எப்படி?” என்பதுதான் இப்போதைய பாஜகவின் கேள்வி. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள்.

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தொடர்பாக பாஜக மூலமாக பன்னீர் தான் இந்த விளையாட்டை நடத்துகிறார்கள் என்று அதிமுகவுக்கு உள்ளேயே சீனியர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

அதற்கு ஏற்ற மாதிரி சமீப நாட்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அல்லது மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் நிர்வாகிகளை பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி சிலர் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே போனால் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி எதேச்சதிகாரம் கட்சியில் ஓங்கிவிடும், எனவே இப்போதே நாம் அதற்கு கடிவாளம் போட்டாக வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்ட சில அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசியுள்ளார்கள்.

மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனிடம் அவர்கள் சென்றபோது... "நான் ஒன்றிய சேர்மன் பதவியில் இருந்து அமைச்சர் பதவி வரைக்கும் இந்த கட்சியால் அனுபவிச்சுட்டேன்.வர்ற தேர்தல்ல நான் நிக்க போறதில்ல. எனக்கு பதிலா ஒருத்தர காட்டச் சொல்லி கேட்டிருக்காங்க. அதனால அவரு கோஷ்டி இவரு கோஷ்டினு சொல்லிட்டு என் வீட்டு படியேறி வராதீங்க. எனக்கு கட்சி தான் முக்கியம். இரட்டை இலைதான் முக்கியம்" என்று சொல்லி அனுப்பி விட்டார் அவர்.

இதுபோல சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யால் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையணையும் அவர்களில் சிலர் அணுகியிருக்கிறார்கள். "1989இல் முத்துசாமியை அடக்கிவைக்க அவரது குடும்பத்து பங்காளி ஒருவருக்கு சீட்டு கொடுக்கணும்னு தேடிப்பிடிச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கதான் எம்எல்ஏ சீட்டு வாங்கி கொடுத்தீங்க. ஆனா இப்ப அவரு பண்றதெல்லாம் பார்த்தீங்களா. உங்களையே போன் போட்டு 25 நிமிசம் திட்டுறாரு. இனியும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க போறீங்களா?"என்று கேட்டிருக்கிறார்கள்.

இதைப்போலவே பல்வேறு மூத்த நிர்வாகிகள் அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஒரு திட்டமிட்ட லாபி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

இதைத் தெரிந்து கொண்டு தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலை எதிர்நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரமும் இதனால்தான் அவசரமாக திட்டமிடப்பட்டது.

இந்த விஷயங்களையெல்லாம் எடப்பாடி தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களுடன் விவாதித்ருக்கிறார். இந்தப் பின்னணியில்தான் சி.வி. சண்முகம் இரட்டை இலைக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கட்சி தலைவர்கள் துரோகம் செய்யலாமே தவிர தொண்டர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்றும் அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி போல ஒரு தொண்டன் முதல்வராகலாம் என்பது அதிமுகவில்தான் என்றும் சண்முகம் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் அதிமுகவுக்கு துரோகம் செய்யும் தலைவர்கள் பட்டியலில் எடப்பாடியை வைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியென்றால் ஓ.பி.எஸ். சைதான் அவர் டார்கெட் செய்கிறார்.

இன்று அதிமுகவின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னையில் நடக்கிறது. சிவி சண்முகத்தின் பேச்சுக்கு எதிர்வினையாக ஓ பன்னீர்செல்வம் இந்த மேடையில் என்ன பேசுகிறார்? எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசுகிறார் என்பதே அதிமுகவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.

ஆரா

கருத்துகள் இல்லை: