ஞாயிறு, 27 டிசம்பர், 2020

தினகரன் -அழகிரி-ரஜினி- கிருஷ்ணசாமி: தமிழகத்தில் ஒரு மகா கூட்டணி?

தினகரன் -அழகிரி-ரஜினி- கிருஷ்ணசாமி:   தமிழகத்தில் ஒரு மகாகத்பந்தன்? minnambalam :ஜனவரி 3 ஆம் தேதி மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள துவாரகா திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களை ஆலோசனைக் கூட்டத்துக்காக அழைத்துள்ளார்                      திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரான மு.க. அழகிரி.   கடந்த தீபாவளி பண்டிகை அன்றே, தனது ஆதரவாளர்கள் பலருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்ட அழகிரி, கட்சி ஆரம்பிக்க தேவையான ஆயத்தங்களை செய்யுமாறும், நிர்வாகிகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பேசியதாக மின்னம்பலத்தில் முதன் முதலாக செய்தி வெளியிட்டோம்.                 டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிடப்பட்ட தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த இருக்கிறார் அழகிரி. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திரளான எண்ணிக்கையில் ஆதரவாளர்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் இருந்து 500 பேரைத் திரட்ட வேண்டும் என்று இலக்கு வைத்து ஆள் சேர்த்ததில் அதற்கும் மேலே ஆட்கள் பெயர் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் நிர்வாகிகள்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது ஐநூறு பேர் என்று இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. துவாரகா மண்டபத்தில் 2 ஆயிரம் பேர் அமர வாய்ப்பிருக்கும் பட்சத்தில் மண்டபத்துக்கு வெளியே 20 ஆயிரம் பேர் திரட்டப்பட வேண்டும் என்று அழகிரி உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அழகிரி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

“கட்சி ஆரம்பிப்பது என்று முடிவு செய்துவிட்டார். ஆனால் அதை நிர்வாகிகள் எல்லாரும் சேர்ந்து முடிவு செய்வது போல இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த கூட்டம்.

திமுகவில் மீண்டும் இணைவதற்காகத்தான் கடுமையாக முயற்சி செய்தார் அழகிரி. இதுபற்றி தனது சகோதர சகோதரிகளுடனும் பேசினார். ஆனால் ஸ்டாலின் குடும்பத்தில் துர்கா, உதயநிதி உள்ளிட்டோருக்கு அழகிரியை உள்ளே சேர்ப்பதில் துளியும் விருப்பமில்லை. ஏற்கனவே கனிமொழியை ஓரங்கட்டுவதற்காக அவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அழகிரியும் சேர்ந்துவிட்டால் கட்சியை கைப்பற்றுவதில் பெரும் இடையூறு இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்ட அழகிரி திமுகவுக்கு எதிராகச் செயல்பட ஸ்டாலினாலேயே தான் நிர்பந்திக்கப்படுவதாக கருதுகிறார். அதனால்தான் கடந்த வாரம் கோபாலபுரத்தில் உள்ள தனது தந்தை கலைஞர் வீட்டுக்குச் சென்றார். அங்கே தனது தாயாரைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டார். பின் குடும்பத்தினர் சிலருடன் போனில் பேசியிருக்கிறார். ‘திமுகவுக்கு எதிராக செயல்பட எனக்கு ஆசையில்லை. ஆனால் அதை நோக்கி நான் தள்ளப்பட்டிருக்கிறேன்’ என்பதைச் சொல்லிவிட்டு வெளியே வந்தார். பத்திரிகையாளர்களிடமும் ஆலோசனைக் கூட்டம் பற்றிப் பேசினார்.

அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் அழகிரியிடம், ‘அண்ணே...ஒண்ணு நீங்க திமுகவுக்கு ஆதரவா இருக்கணும். இல்லை எதிரா இருக்கணும். நடுவுல ஒண்ணும் பண்ணாம இருந்தால் பிரச்சினை உங்களுக்குத்தான். திமுகவில் ஸ்டாலினைப் பிடிக்காத பல பேர் இருக்காங்க. அவங்க வெறுமனே நம்ம பக்கம் வர்றதுக்குத் தயங்குறாங்க. ஏதோ ஒரு பதவியில இருக்குறவங்க, எந்த அமைப்பும் இல்லாத நிலையில நம்மகிட்ட வர்றதுக்கு ரொம்ப யோசிக்குறாங்க. அதனால நாம் ஒரு அமைப்பு ஆரம்பிச்சாதான் அவங்களையும் ஒருங்கிணைக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் அழகிரி. தனிக்கட்சி ஆரம்பித்தாலும் அழகிரி தனித்து நிற்க வாய்ப்பில்லை. ஏற்கனவே ரஜினியோடு அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக அமமுக பொதுச் செயலாளர் தினகரனோடும் டச்சில் இருக்கிறார் அழகிரி. மேலும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோருடன் காந்தி அழகிரி மூலமாக அழகிரி தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

ரஜினி நிச்சயமாக தனித்துக் களம் காண மாட்டார். அவருக்குத் தன் பலம், எதிரி பலம் எல்லாம் தெரியும். எனவே ஒரு வலுவான கூட்டணி அமைக்கத்தான் அவரும் விரும்புகிறார்.

இந்த வகையில் ரஜினி, அழகிரி. தினகரன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்தால் தென் மாவட்டத்தில் திமுக. அதிமுக இரண்டுமே பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை உள்ளது. இந்த அணியில் பாஜக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு திட்டம் அழகிரி தரப்பிடம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து இப்போது ஆரம்ப வடிவில் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் இருந்தால் இது ஒரு மூன்றாவது கூட்டணியாகலாம்” என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: