திங்கள், 28 டிசம்பர், 2020

ரஜினி கட்சியை தொடங்குவதற்கான தேதியை மட்டும் அறிவித்தால் போதும் .. நேரில் வர வேண்டாம் என்று தமிழருவி மணியன் வேண்டுகோள்

  malaimalar : சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை விரைவாக முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்ட திட்டமிட்டார். இதற்காக காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்தநிலையில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு 3 நாட்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை சீரானது. இருப்பினும் ஒரு வாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என ரஜினிகாந்தை டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னை திரும்பிய ரஜினிகாந்த் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். புதிய கட்சி தொடங்கும் தேதியை வருகிற 31-ந்தேதி வெளியிடப்போவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே கூறி இருந்தார். அதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில்தான் ரஜினியை ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ரஜினி புதிய கட்சியின் அறிவிப்பை திட்டமிட்டபடி வெளியிட மாட்டார் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் இதனை ரசிகர் மன்ற நிர்வாகிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘31-ந்தேதி அன்று கட்சி தொடங்கும் தேதியை தான் சொல்ல இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

மற்றபடி அன்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே திட்டமிட்டபடி ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்கள்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஒருவர் கூறியதாவது:-

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்கிற கோ‌ஷத்தை முன்னெடுத்துள்ள எங்கள் தலைவர் ரஜினி உடல்நலனை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

எனவே புதிய கட்சியை தொடங்கும் தேதி, மாநாடு பற்றிய விவரங்களை அறிவிக்க ரஜினிகாந்த் நேரில் வரவேண்டாம். அவர் ஒருவார காலம் முழுமையாக ஓய்வெடுக்கட்டும். அதே நேரத்தில் புதிய கட்சியை தொடங்குவதற்கான தேதியை மட்டும் அறிவித்தால் போதும். நாங்கள் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றுவோம்.

கடந்த 3-ந்தேதி புதிய கட்சியை தொடங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்த உடனேயே பல கட்சிகளில் இருந்து விலகி இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் மக்கள் மன்றத்தில் இணைந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இது போன்று கட்சியில் இணை பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியான நாங்களும் முழுமையாக களம் இறங்கி மக்களை சந்தித்து வருகிறோம். 31-ந்தேதிக்கு பிறகு அரசியல் களமே மாறிவிடும். மாற்றத்தை விரும்பும் அனைவருமே ரஜினிகாந்தை ஆதரிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியனும்,ரஜினிகாந்த் 31-ந்தேதி புதிய கட்சி தொடர்பான கூடுதல் அறிவிப்பை வெளியிடுவதில் எந்த மாற்றமும் இருக்காது என நம்புவதாகவே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘ரஜினியுடன் தினமும் தொலைபேசியில் பேசி வருவதாகவும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதில் ரஜினி உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு சமூக வலைதளங்களில் ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்களே? என்று கேட்டதற்கு பதில் அளித்த தமிழருவி மணியன், ‘அது சிலரது ஆசையாக இருக்கலாம், என்றும் தெரிவித்தார்.


இதன் மூலம் ரஜினி திட்டமிட்டபடி 31-ந்தேதி புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிடுவது உறுதியாகி உள்ளது.

இருப்பினும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் வருகிற 31-ந்தேதி ரஜினி புதுகட்சி அறிவிப்பை வெளியிடுவாரா? இல்லை அது மேலும் தள்ளிப்போகுமா? என்கிற தவிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ரஜினியின் அறிவிப்புக்காக தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தினர் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: