ஞாயிறு, 5 மே, 2019

உப்பை பாக்கெட் போட்டு 5 மூட்டை உயரம் அடுக்கினா 4 ரூபா கூலி” கோடியக்கரை உப்பள பெண்கள்!

vikatan.com - ஹரீஷ் ம - கண்ணன் ர :
உப்பளம்``உப்பை பாக்கெட் போட்டு 5 மூட்டை உயரம் அடுக்கினா 4 ரூபா கூலி
`உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற சொலவடையோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். உப்பின் பெருமையை விளக்கும் சின்னக் கதை ஒன்றையும் சேர்க்கலாம். ஆனால், நாம் தினந்தோறும் மூன்று வேளை உப்பை ருசிக்க, உப்பளம் தொழிலாளர்களின் வாழ்க்கையில் துளியும் ருசியில்லை. கோடியக்கரை உப்பளப் பகுதிக்குச் சென்றிருந்தபோது, பார்த்த காட்சிகள் அழகாயிருந்தன . ஆனால், அங்கு பணிபுரியும் பெண்கள் வெளியுலகில் அனுபவிக்கும் யாதொன்றையும் காணக்கூடச் செய்யாமல் வாழ்கின்றனர்.
கடலோர உப்பளங்களில் வேலை பார்க்கும் பெண் கூலித் தொழிலாளிகளின் அன்றாட வாழ்க்கை கண்ணீர் கதைகள் நிறைந்ததாக இருக்கின்றன. டெல்டா பகுதிகளில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது உப்பு உற்பத்திதான். அதிலும் குறிப்பாக, ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற இடம் வேதாரண்யம்.


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகள் சமீபத்திய கஜா புயலால் உருக்குலைந்தது. கோடியக்கரை உப்பளங்கள் பொட்டல் காடுகளாய் மாறின. கஜாவுக்குப் பின், கோடியக்கரை உப்பளங்களின் நிலை உயர்ந்தாலும், உப்பளத்தில் வேலை பார்க்கும் பெண்களின் நிலை சற்று ஆச்சர்யத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது .
கோடியக்கரை கடற்கரைக்குச் செல்லும் சாலைக்கு இடதுபுறம் கோடியக்கரை காடுகள். வலதுபுறம் காடுகளுக்கு சரிநிகர் அளவில் உப்பளங்கள். கடலோர ஈரக் காற்றுக்கும் , கத்தரி வெயிலின் அனலிற்கும் மத்தியில் உப்பை பாக்கெட் போடும் பெண்கள் வேலைகளுக்கு இடையே பேசினார்கள்.
“கொட்டிக்கிடக்குற உப்பைப் பாக்கெட் போட்டு, ஒரு மூட்டைக்கு 25 பாக்கெட்டுகள் வெச்சி, தைச்சி  5 மூட்டை உசரம் அடுக்கினால் 4 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உச்சி வெயில்ல உப்பு பாக்கெட் போட்டாதான்  200 ரூபாய் கிடைக்கும் ” என்று மூட்டைகளை அடுக்கிக்கொண்டே சொல்கிறார் ஒரு பெண்.
“கோடியக்கரை நகராட்சிங்கிறதால 100 நாள் வேலைத்திட்டம் எதுவும் கிடையாது. கடற்கரை ஓரம் உப்புத் தண்ணிங்கிறதால வயல் வேலையும் இல்லை. வருஷம் பூராவும் உப்பளத்தை நம்பிதான் பொழப்பு நடத்துறோம், அப்பப்ப புயல் வந்து பொழப்ப கெடுக்குது!  மழை வந்தால் உப்பளத்தில் வேலை இல்லை,  ஒரு வேலை சோற்றுக்குகூட கையேந்துற நிலை வந்துடும்” என்று கண்ணீர் சுரக்கச் சொல்கிறார் காமாட்சி அக்கா.
உப்பு சூட்டிலும், வாயில் வெற்றிலை பாக்கை குதப்பிக் கொண்டிருந்த மூதாட்டி, ஏறத்தாழ அந்தப் பெண்கள் குழுவின் சீனியர் போன்ற அனுபவத்தோடு பேசத் தொடங்கினார்,  “மழைக் காலத்துல, உப்பள முதலாளிகளிடம் கடன் வாங்கி பிழைப்பு நடத்துவோம். வெயில் அடிக்கும்போது உப்பளத்தில் வேலைபார்த்து கடனை அடைக்கிறதுமா வாழ்க்கை ஓடுது. கடல் மீனவர்களுக்கு அள்ளிக் கொடுக்குது, எங்களை மட்டுமே வாரி சுருட்டிக்குது. முடியற வரைக்கும் வேலை பார்ப்போம்… உடம்புல வலு இல்லைன்னா, உடம்பு மண்ணுக்குத்தான்” என்றார்.
உப்பளம்
“காலை 9 மணிக்கெல்லாம் வேலைக்கு வர வேண்டும். உப்பளத்தில் குவித்து வைத்திருக்கும் உப்பு குவியலுக்கு மத்தியில் அடுப்பை வைத்துக்கொண்டு, உப்பை அள்ளி பாக்கெட்டில் போட்டு, அடுப்பு சூட்டில் ஒட்ட வேண்டும். ஒட்டிய பாக்கெட்டுகளை, மூட்டைக்குள் வைக்க வேண்டும்” என்று சொல்லும் பெண்கள், பிறந்ததிலிருந்தே உப்பளத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஆயுள் கம்மி தான் என்கிறார்கள்.
“14 மணி நேரம் உச்சி வெயிலில், உப்புக்கு நடுவில் அடுப்போடு பாக்கெட் போடுறதால, முழங்கால், மூட்டு வலி வந்துடும். அரசு ஆஸ்பத்திரிக்குப்போய் ஊசி போட்டுப்போம், உப்புக் காத்துல சீக்கிரம் தோல் நோய் வந்துடும்.
அடுப்புலேருந்து வரும் புகை கொஞ்ச நாள்ல கண்ணைப் பாதிச்சுரும், ஏன் இங்க சில பேருக்குக் கண் தெரியாம கூடப் போயிருக்கு. உப்புச் சூட்டுல வேலை பார்கிறதால வாய்ல இருந்து குடல் வரைக்கும் வெந்திடும்”னு பேசக் கூட நேரமில்லாமல் வேலையில் மும்முரமாகிறார் அக்கா ஒருவர். நம் உணவுக்கு ருசி சேர்க்க உப்பு பாக்கெட் போடும் பெண்களுக்கு வாய் வெந்திருப்பதால் ஒரு வேளை கூட ருசியா சாப்பிட முடியாது நிலையே இருக்கிறது.
இதுவரை பிறர் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சிதம் அக்கா பேசத்தொடங்கும்போதே கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது, “இந்த வேலையை இத்தனை வருஷமா செஞ்சு படுக்கையில கிடக்கிற என் அப்பா, ஆத்தா, அண்ணன்னு வீட்ல மொத்தம் 5 பேர் என்னை நம்பிதான் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு வேளை கஞ்சியாது ஊத்தனும்னுதான் இந்த வேலைக்கு வாறேன். விடிகாலையில எந்திருச்சு வீட்டு ஆளுகளுக்குச் சமைச்சு வெச்சுட்டு, எனக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்துடுவேன். 14 மணி நேரம் உப்பு பாக்கெட் போட்டாதான் இரவு சாப்பாடு ” என்றார்.
“கஞ்சிக்கு உழைக்கவே நேரம் சரியா இருக்கும். அதனால, வருஷத்துக்கு ஆடி அமாவாசை மட்டும்தான் கடலுக்குப் போவோம், ஏதாவது கோயிலுக்கு மாலை போடனும்னா கடலுக்குப் போய் முங்கிட்டு வந்து மாலை போட்டுப்போம். மத்தபடி யாராவது இறந்து சாம்பல கரைக்கணும்னா வீட்டு ஆம்பளைங்க மட்டும் கடலுக்குப் போவாங்க. கடலால எங்களுக்கு நஷ்டம்தான். 1 கி.மீட்டரில் கடல் இருந்தாலும் வருஷத்துக்கு ஒரு முறைதான் போவோம்”னு சொல்லும் பெண்களின் வாழ்க்கை இனிக்காத அளவுக்கு அவர்கள் வாழ்வில் கலந்துவிட்டது உப்பு.
vikatan.com

கருத்துகள் இல்லை: