
மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று (மே 7) மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டது. சூறைக் காற்றால் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மீண்டும் மின் இணைப்பு ஏற்படுத்தத் தாமதமாகியிருக்கிறது. இதனால் மதுரை ராஜாஜி மருத்துவமனையின் வென்டிலேட்டர் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின் தடை ஏற்பட்ட போது மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
வென்டிலேட்டருக்கு மின் சப்ளை வராததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கு மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸ் துணை ஆணையர் சசிமோகன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா, உள்ளிடோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த டீன் வனிதா, நேற்று மாலை மின்தடை ஏற்பட்டது. பின்னர் பேட்டரிகள் மூலம் வென்டிலேட்டர் இயக்கப்பட்டன. யாரும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழக்கவில்லை. தனியார் மருத்துவமனையிலிருந்து ஆபத்தான நிலையில், இங்கு வந்து அனுமதிக்கப்பட்டவர்களே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக