சனி, 11 மே, 2019

திலகவதி ஆணவக் கொலையா? ஆகாஷின் தந்தை சந்தேகம்!

திலகவதி ஆணவக் கொலையா?  ஆகாஷின் தந்தை சந்தேகம்!மின்னம்பலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்னும் இளைஞனை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் சாதி மோதல் பதட்டம் நீடித்துவருகிறது. இதுதொடர்பாக ஆகாஷ் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூல வீடியோவை நாம் வெளியிட்டிருந்தோம். அது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.
மாணவி திலகவதி கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி பாமகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். (இன்று மே 11) திலகவதியுடைய பெற்றோர்கள் பாமக பிரமுகர்களின் புடைசூழ கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் இருவரும் அங்கு இருந்தனர். அவர்களிடம் மனு கொடுத்துப் போட்டோ, வீடியோ எடுத்துக்கொண்டவர்கள் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு எஸ்.பி நீங்கள் நீதிமன்றம் மூலமாக சிபிஐக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்றார்.
மாவட்ட ஆட்சியரிடம், “திலகவதி குடும்பத்திற்கு நிவாரணம் கொடுங்கள். வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுங்கள் என்றபோது, அரசு என்ன கொடுக்கிறதோ அதை வாங்கிக் கொடுக்கிறேன்” என்று நழுவலாக பதில் சொன்னார். உடனே மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரை திரும்பப்பெற்றுக் கொண்டவர்கள், வேறு மனு எழுதிவருகிறோம் என்று வெளியேறி இருக்கிறார்கள். ஆனால் மாலை வரை மனு வரவில்லை என்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் தந்தை ப. அன்பழகன் கடலூர் எஸ்.பியிடம் அளித்துள்ள புகார் மனுவும் வெளியாகியுள்ளது. அதில், “என்னுடைய மகன் ஆகாஷும், திலகவதியும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்துவந்தனர். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலையில் திலகவதியை கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் குத்திக் கொலை செய்துவிட்டனர்.
சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்கு முன்பு திலகவதியிடம் ஆகாஷ்-திலகவதி இருவரும் போனில் பேசியிருப்பதாகக் கூறி, சந்தேகத்தின் பெயரில் என் மகனை கைது செய்தனர். என் மகன் ஆகாஷ் அப்பாவி. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பெண்ணின் தாய், தந்தை அல்லது உறவினர்களோ, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோ ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. எனவே இதனை பல கோணங்களில் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்பழகன் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் காதலிப்பது பிடிக்காத யாரோ திலகவதியை கொலை செய்துவிட்டு என் மீது பழியைப் போட்டுள்ளனர் என்று என் மகனை ஜெயிலில் பார்த்தபோது கூறினான். அடிதாங்க முடியாமல்தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன் என்றான். காவல் துறைதான் உண்மையான குற்றவாளியைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
திலகவதி கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும் வரும் 16ஆம் தேதி விருத்தாச்சலத்தில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
.

கருத்துகள் இல்லை: