திங்கள், 6 மே, 2019

சந்திரசேகர ராவ் சென்னை வருகிறார் .. மத்தியில் கூட்டணி அரசுக்கு அழைப்பு?

ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்மின்னம்பலம் : மக்களவைத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து அடுத்த வாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசவுள்ளார்.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகளில் உள்ளன. இந்த 17 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தபோது வாக்குப்பதிவு நடந்தது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. சந்திரசேகர ராவைப் பொறுத்தவரையில் இதுவரையில் தேசியக் கட்சிகளுடன் எந்தக் கூட்டணியிலும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.

பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே கூறி வருகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரிடமும் இதுதொடர்பாக பேசி வருகிறார். அவர்களும் இதுவரையில் எந்த தேசியக் கட்சிக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சந்திரசேகர ராவ் இன்று மாலை கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்காக சிறப்பு விமானத்தில் கேரளா சென்றுள்ளார். ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களிலும் வழிபாடு செய்யவுள்ளதாகவும் அவரது பயணத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த வாரத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் இன்று (மே 6) வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவிப்பில், ‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேரளா மற்றும் தமிழ்நாடு பயணிக்க திட்டமிட்டுள்ளார். மே 13ஆம் தேதி சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்திக்கவுள்ளார்.
இருதலைவர்களும் தற்போதைய அரசியல் நிலவரம், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கவுள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி நாயுடு சந்திரசேகர ராவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணியின் தலைமையில் ஆட்சியமைப்பது தொடர்பாகவே ஒவ்வொரு மாநில தலைவர்களையும் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி சென்னை வந்த சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதே மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் திமுக மூன்றாவது அணியில் இணையாது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் திமுக அங்கம் வகிக்கும் என்று அப்போது ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து கலைஞர் சிலை திறப்பு விழாவையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து என்ன செய்யலாம் என முடிவெடுப்போம் எனக் கூறியிருந்தார். இதையடுத்து ஸ்டாலினை சந்திக்க மீண்டும் சந்திரசேகர ராவ் வருவது காங்கிரஸ் மற்றும் திமுக என இரண்டு வட்டாரங்களிலும் புதிரை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: