திங்கள், 6 மே, 2019

நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தலைமை

BBC ; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி புகார் ஒன்றை எழுதி இருந்தார்.புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக உள்விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்விசாரணைக்குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டதோடு, இதில் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதிக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது. ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் நீதிமன்ற ஊழியர் ஒருவர் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதி என்.வி ரமணாவுக்கு பதிலாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா இருப்பார் என்று பிறகு அறிவிக்கப்பட்டது.
நீதிபதி ரமணா அக்குழுவில் இடம் பெற்றிருந்ததற்கு, குற்றச்சாட்டு வைத்த பெண் ஒப்புக் கொள்ளவில்லை.

அந்த விசாரணைக்குழுவிற்கு நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமை வகித்தார்.
ரமணாவுக்கு பதிலாக இந்து மல்ஹோத்ரா சேர்க்கப்பட்ட பின்னர், தலைமை நீதிபதிக்கு எதிராக வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் இரண்டு பெண்கள் இடம் பெற்றார்கள்.
சட்டப்படி இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் குழுவில் குறைந்தது 50 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும்.

யார் இந்த ரஞ்சன் கோகாய்?

ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்றார்.
ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.<>இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "கவுகாத்தி ஹை கோர்ட், ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்" என்ற புத்தகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் பற்றிய ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அசாமில் முன்னாள் முதலமைச்சரும் ரஞ்சன் கோகாயின் தந்தையுமான கெசாப் சந்திர கோகாயிடம் அவரது நண்பர் ஒருவர், உங்களது மகனும் ஒருநாள் அரசியலில் குதித்து முதலமைச்சராவாரா என்று கேட்டார். எவ்வித தயக்கமுமின்றி தன்னுடைய மகன் திறைமைவாய்ந்த வழக்கறிஞர் என்றும், அவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கெசாப் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பது தெரியும். ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. எப்போதெல்லாம் மாற்றம் உள்ளதோ, அப்போதெல்லாம் தனது சொத்து விவரத்தை ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரஞ்சனும் மற்ற சில உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கியமான, சர்ச்சைக்குரிய வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகளும் மட்டுமே விசாரணைக்கு ஒதுக்கீடு செய்கிறார் என்னும் திடுக்கிடும் குற்றச்சாட்டை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்வைத்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பற்றி சக நீதிபதிகளால் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது அதுவே முதல்முறை

கருத்துகள் இல்லை: