ஞாயிறு, 5 மே, 2019

லாட்டரி மார்டின் வீட்டில் ரூ.1,214 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்

மார்ட்டின், சொத்து ஆவணங்கள், பறிமுதல், வருமான வரித்துறைதினமலர் :சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில், 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவையை சேர்ந்த, லாட்டரி அதிபர் மார்ட்டின், பல்வேறு மாநிலங்களில், லாட்டரி விற்பனை செய்து வருகிறார்.இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளதாகவும், வருமான வரி துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து, ஏப்., 30ல், நாடு முழுவதும், மார்ட்டினுக்கு சொந்தமான, 70 இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கோவை, வெள்ளாங்கிணறு பகுதியில் உள்ள, மார்ட்டினுக்கு சொந்தமான
வீட்டில் நடந்த சோதனையில், அங்கு ரகசிய அறை அமைத்து, அதில், பணம், நகை மற்றும் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டு கட்டில்களுக்கு அடியில், ரகசிய அறை ஏற்படுத்தி, 2,000, 500, 200 ரூபாய் கட்டுகளாக, 8.25 கோடி ரூபாய் மறைத்து வைத்திருந்ததை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும், 24.57 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் வைர நகைகள், கணக்கில் காட்டப்படாத, 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அதிகாரிகள் கைப்பற்றினர்.


வரி ஏய்ப்பு தொடர்பாக, மார்ட்டினிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள, கணக்கில் வராத பணம், நகை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கு, 'சம்மன்' அனுப்பியுள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வருமான வரி அதிகாரிகள் மீது வழக்கு!

கோவையிலுள்ள, 'பியூச்சர் கேமிங் அண்டுஓட்டல் சர்வீஸ்' நிறுவனத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள், கேஷியர் பழனிசாமியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின், மே, 2ம் தேதி, மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி, அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்ததாக
 கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, காரமடை, வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குளத்தில், பழனிசாமி சடலமாக மிதந்தார். சாவில் மர்மம் இருப்பதாகவும், வருமானவரி அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால், இந்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பழனிசாமியின் குடும்பத்தினர், காரமடை போலீசாரிடம் புகார் செய்தனர்.
அடையாளம் தெரியாத வருமான வரித்துறை அதிகாரிகள், பழனிசாமியை தற்கொலைக்கு துாண்டியதாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: