ஞாயிறு, 5 மே, 2019

யோகி பாபு :வருமான வரியே இன்னும் 20 லட்சம் கட்டாமல் இருக்கிறேன்

யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?மின்னம்பலம் : யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் திரையரங்கில் நேற்று (மே 4) நடைபெற்றது. அப்போது தனது சம்பளம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் யோகி பாபு.
விழாவில் யோகி பாபு, ரேகா, ஞானவேல் ராஜா, இயக்குநர் சசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய யோகிபாபு, “இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள். நான் எமலோகத்தில் எமதர்மனாக நடிக்கிறேன். பூலோக காட்சிகளில் ஷாம் நடித்துள்ளார். நானும் படத்தின் இயக்குநர் முத்துவும் 15 ஆண்டுக்கால நண்பர்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பே இக்கதையைப் பற்றி பேசினோம். இப்போது அது ஜெயிக்கப்போகிறது. சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தைத் திரைக்குக் கொண்டுவர நினைத்த தயாரிப்பாளருக்கு நன்றி.

நான் லொள்ளு சபாவில் இருக்கும்போது ரூ.300 சம்பளமாக வாங்கியிருக்கிறேன். சில நாட்கள் சம்பளமே இல்லாமல் மொட்டை மாடியில் சாப்பிடாமல் படுத்திருக்கிறோம். அதையெல்லாம் பேச வேண்டாம். காமெடியாக போய்விடலாம். இந்தப் படம் ஒப்புக்கொண்ட அதேநேரத்தில்தான் கூர்கா படம் தொடங்கப்பட்டது. இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று 45 நாட்கள் தூங்காமல் பணியாற்றினேன். சில நாட்கள் கேமராவில் முகம் ரொம்ப சோர்வாக இருப்பதைப் பார்த்து என்னை 1 மணி நேரம் தூங்கிவிட்டு வரச் சொல்வார்கள்.
ஆனால், எமதர்மன் ஒரு கம்பீரமான கதாபாத்திரம். ரேகா கூட சொல்லுவாங்க. நான் தூங்காமல் பணியாற்றினாலும் இந்தக் கதாபாத்திரம் கம்பீரமாக வந்துள்ளது. அந்த நேரத்தில் எமதர்மன் எனக்குள் வந்துவிட்டதாக உணர்கிறேன். எமதர்மன் கெட்டப் போட்டவுடனே என்னமோ தெரியவில்லை திமிர் வந்துவிடும். ஏனெனில் பெரிய ஜாம்பவான்கள் நடித்த கதாபாத்திரம். ஆண்டவன் கட்டளை, பரியேறும் பெருமாள் பட வரிசையில் இந்தப் படமும் என் வாழ்க்கையில் காலமெல்லாம் அழியாத படமாக அமையும் என்று நம்புகிறேன்.
ஞானவேல்ராஜா சார் இங்கு, எனக்கு ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், 15 லட்சம் என்று பேசினார். வருமான வரியே இன்னும் 20 லட்சம் கட்டாமல் இருக்கிறேன். யாரிடம் இருந்தும் பணம் வரவில்லை, கேட்டுட்டு இருக்கேன்.
நேற்றிரவு கூட ஒரு பையன் அவனது குடும்பத்தைப் பற்றிப் பேசினான். தஞ்சாவூரைச் சேர்ந்த அந்த பையன், நான் ஜெயித்தால்தான் என் குடும்பம் தலைநிமிரும் என்றான். நான் உனக்கு அண்ணன் மாதிரி என்று கூறி தயாரிப்பாளரிடம் பேசினேன். எனக்குத் தரவேண்டிய தொகை பாதியாகக் குறைத்துக் கொடுக்கவும், அந்தப் பையனுக்கு நல்வழி செய்து கொடுக்கவும் தயாரிப்பாளரிடம் கூறினேன்.
என்னைப் பிடிக்காதவர்கள் பலரும், பல விஷயங்களைச் சொல்வார்கள். அதை எல்லாம் யாரும் கேட்க வேண்டாம். என்னிடம் கேட்டால் மட்டுமே பதில் தெரியும். யாரும் இல்லாத இடத்தைப் பிடித்துவிட்டார் என்றெல்லாம் பேசுவதாகக் கேள்விப்பட்டேன். நான் சிக்ஸ் அடிக்கிறேன் என்றால் சரியான அணி கிடைத்தது அடிக்கிறேன். மைதானத்தில் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது வரட்டும். நான் கிடைச்ச வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: