புதன், 12 டிசம்பர், 2018

ஜாதி அமைப்பு ஒரு "organized crime" இல் ஈடுபட உதவி கொண்டிருக்கிறது.. எவிடென்ஸ் சார்பில் மதுரையில்..

தமிழகத்தில் சாதி வேறுபாடின்றி எந்த பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தாலும் அவர்களுக்கு நீதி வழங்கிட அவர்களுக்கு SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு நிகரான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட வேண்டும்.
Shalin Maria Lawrence : கடந்த 8 ஆம் தேதி சனிக்கிழமை எவிடென்ஸ் அமைப்பின்
சார்பில் மதுரையில் நடந்த தமிழகமும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளும் என்கிற தலைப்பில் நடந்த பொது விசாரணையில் கலந்து கொண்டேன்.
தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருட காலமாக பாதிக்கப்பட்ட பெண்களிடையே பணியாற்றினாலும் ஒவ்வொரு முறையும் நடந்த கொடுமைகளை திரும்ப கேட்கும்போது அடிவயிற்றில் கத்தியை வைத்து கிழிப்பதை போல் ஒரு உணர்வு தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு உடல் கவர்ச்சி மட்டுமே காரணம் இல்லை என்று இது போன்ற போது விசாரணைகளில் நன்றாக தெரியவரும்.

குறிப்பாக சாதி ,அதிகாரம் ,பண செல்வாக்கு ,அரசியல் ஒடுக்குமுறை போன்ற மற்ற காரணங்களுக்காக தான் கிராமப்புறங்களில் அதிக பாலியல் கொடுமைகள் நடைபெருகுகின்றன என்பது அசைக்க முடியாத உண்மை.
ஆகையால் சாதி கொடுமையின் நீட்சியாக ஒரு பாலியல் வக்கிரம் நடக்கும்போது அதை வெறும் பாலியல் கொடுமை என்று கடந்து விடுவது தவறு.
உதாரணத்திற்கு பழனியில் ஒரு கிராமம் இருக்கிறது இங்கே ஒரு 5 வயது அருந்தயினர் சிறுமி வன்புணர்வு செய்யப்படுகிறார் .அதை முறையாக விசாரிக்கும்போது தெரிகிறது அந்த பெண்ணிம் வீட்டில் இது போல் வேறு ஒருவருக்கும் நடந்திருக்கிறது.அதை இன்னும் தோண்டினால் தெரிகிறது அந்த கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான அருந்ததியினர் பெண்கள் கடந்த 40 வருடகாலமாக பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இங்கேதான் ஜாதி என்கிற அமைப்பு எப்படி ஒரு சமூகத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமை எனும் கருவியை பயன்படுத்தி "organized crime" இல் ஈடுபட உதவி கொண்டிருக்கிறது என்று.
தலித்துகள் மேலான வன்கொடுமைகளை அரசு ஒழிக்க பாடுபடாத காரணிதான் ஒரு கொடூரம் துணிச்சலாக ராஜலக்ஷ்மியை அவளின் தாயின் முன்னாடியே வெட்ட தைரியத்தை கொடுத்தது.
அரசின் மெத்தனம் ,அரசின் சார்பாக ஜாதி ஒழிப்பில் செயல்படாதத்தனம் போன்ற விஷயங்கள் தான் மீண்டும் மீண்டும் இங்கே வன்முறைகளை தூண்டுகிறது.
பாதிக்கப்பட்டவனுக்கு இதெல்லாம் தெரியாது ஆனால் குற்றம் செய்பவன் இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் செயல்படுகிறான்.
ஆக உடல் கவர்ச்சி ,தீராத காமம் மட்டுமே பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்று பகுத்தறிவின் பெயரால் தவறாக பிரசாரம் செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் அவர்களை திருத்தி கொள்ளவேண்டும்.
In india a crime has multiple dimensions.
இன்னொரு முக்கியமான விஷயம் தமிழகத்தில் சாதி வேறுபாடின்றி எந்த பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தாலும் அவர்களுக்கு நீதி வழங்கிட அவர்களுக்கு SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு நிகரான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட வேண்டும்.
இன்னும் பேசுவோம்.

கருத்துகள் இல்லை: