சனி, 15 டிசம்பர், 2018

பொதுப் பட்டியலை ஒழித்துக்கட்டுங்கள்.. மாநிலங்களின் உரிமை பறி போகிறது .. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்

கண. குறிஞ்சி : பொதுப் பட்டியலை ஒழித்துக்கட்டுங்கள்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று அருமையான ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.
" மாநிலங் களின் உரிமை பறி போய்க் கொண்டிருப்பதை எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருப்பது? இதற்கு விடிவுதான் எப்பொழுது? இந்த நோயை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. அறுவை மருத்துவம் செய்ய வேண்டிய தேவை வந்து விட்டது. எனவே இந்திய அரசியல் சட்டத்திலுள்ள பொதுப் பட்டியலை ஒழித்துக் கட்ட வேண்டும்" என ஆவேசமாகப் பொங்கியுள்ளார்.
அருமை முதல்வரே, அருமை!
கடந்த 70 ஆண்டுகளாக யாரும் எடுத்துரைக்காத, போற்றிக் கொண்டாட வேண்டிய பரிந்துரை இது.
இந்திய அரசியல் சட்டத்திறுள்ள ஏழாவது அட்டவணைப்படி, அதிகாரங்கள் மூன்று வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளதைப் பலரும் அறிவர்.
ஒன்றியப் பட்டியல் ( Union List )
இந்தப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. பாதுகாப்பு, வெளிநாட்டு நடவடிக்கைகள், தொடர்வண்டி, வங்கி போன்ற முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் மைய அரசிடம்தான் உள்ளன.
மாநிலப் பட்டியல் ( State List )

இந்தப் பிரிவில் சுமார் 59 வகை அதிகாரங்கள்தான் உள்ளன. பொது அமைதி, காவல், பொது சுகாதாரம், மருத்துவமனைகள் போன்றவை குறித்த அதிகாரங்கள் மட்டும் மாநில அரசின் கைகளில் உள்ளது.
பொதுப் பட்டியல் ( Concurrent List )
இப்பிரிவின் கீழ் 52 வகை அதிகாரங்கள் உள்ளன. தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி உள்ளிட்ட கல்வி, பல்கலைக் கழகங்கள், மக்கள் தொகை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு, குற்றவியல் சட்டங்கள், விலங்கினங்கள் மீதான கொடுமைகளைத் தடுத்தல், வன விலங்குகள் / காடுகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் போன்ற பல முக்கிய அதிகாரங்கள் வருகின்றன.
இப்பிரிவின் கீழுள்ள விஷயங்களில் முடிவெடுக்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அதிகாரம் உண்டு. எனினும் இது சார்ந்த அதிகாரங்களில் கருத்து வேறுபாடு வரும் பொழுது, இறுதி முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் மைய அரசுக்கு மட்டுமே உண்டு. அதாவது இப்பிரிவு, மைய அரசின் ஒரு நிழல் வடிவாகத்தான் உள்ளது.
1950 ஆம் ஆண்டி விருந்து இந்த ஏழாவது அட்டவணையிலுள்ள அதிகாரங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அதாவது ஒன்றியப் பட்டியலும், பொதுப் பட்டியலும் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. ஆனால், மாநிலப் பட்டியல் மெலிந்து மெலிந்து நோஞ்சானாக மாறிவிட்டது.
அதிலும், அரசியல் சட்டத்தின் 42 ஆவது திருத்தம் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திரா காந்தி மாநிலங்களின் பல அதிகாரங்களைப் பொதுப் பட்டியலுக்கு வசதியாக மாற்றி அமைத்துக் கொண்டார்.
கல்வி, காடுகள், விலங்கினங்களையும் பறவைகளையும் பாதுகாத்தல், நீதித்துறை நிர்வாகம் ஆகிய முக்கிய அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு வலுக்கட்டாயமாக மாற்றிக் கொண்டார்.
" நீட்" போன்ற தேர்வுகள் குறித்து இறுதி முடிவெடுக்க, இதன் காரணமாகச் சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி அறிஞர் அண்ணா குரலெழுப்பினார். அதன் பிறகு 1971 ஆம் ஆண்டில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது, மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பி.வி.இராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் பெறப்பட்டும், பெரிய முன்னேற்றம் இல்லை.
1983 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா முதலமைச்சர்கள் ஒன்று கூடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி ஒரு மாநாடு நடத்தினார். இதனால் கலக்கம் அடைந்த இந்திரா காந்தியின் மைய அரசு, அதிகாரப் பகிர்வு குறித்து சர்க்காரியா குழுவை நியமித்தது. அதற்குப் பிறகும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் நிகழவில்லை.
"மாநிலங்களை நகராட்சி போல மத்திய அரசு நடத்துகிறது" என்ற குரல் அவ்வப்பொழுது மாநில அரசுகளால் எழுப்பப்படுகிறது. ஆனால் அது அரசியல் பற்றுறுதியோடு முன்னெடுக்கப் படுவதில்லை.
இந்தப் பின்னணியில்தான் "பொதுப் பட்டியலை முற்றாக நீக்க வேண்டும்.
அதிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும்" என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எதிர்கால அரசியல் பயணம் அந்தத் திசை நோக்கிச் சென்றால், நல்ல பல மாற்றங்கள் நடக்க வாய்ப்புக்கள் உண்டு.
கண. குறிஞ்சி

கருத்துகள் இல்லை: