திங்கள், 10 டிசம்பர், 2018

எதிர்க்கட்சிகள் கூட்டம்: அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்த திமுக ..

எதிர்க்கட்சிகள் கூட்டம்: அதிருப்தியாளர்களை அழைத்து வந்த ஸ்டாலின்மின்னம்பலம் :நாடாளுமன்ற கூடுதல் கட்டிடத்தில் இன்று (டிசம்பர் 10) பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் சற்று முன் தொடங்கியிருக்கிறது.
இந்தக் கூட்டத்துக்காகவும், கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் அளிப்பதற்காகவும் டிசம்பர் 9 ஆம் தேதி காலையே டெல்லி சென்றார் திமுக தலைவர் ஸ்டாலின்.
நேற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியாகாந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் அப்போது கலைஞர் சிலையை தாங்கள்தான் வந்து திறந்து வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அப்போது சோனியாகாந்தியிடம் தமிழ் எழுத்தாளர் அஜயன் பாலா எழுதிய, ‘செம்மொழிச் சிற்பிகள்’ என்ற நூலையும் பரிசளித்தார் ஸ்டாலின்.
டெல்லி தீனதயாள் மார்க் பகுதியில் நடைபெற்றுவரும் திமுகவின் அலுவலகக் கட்டுமானப் பணிகளையும் சென்று பார்வையிட்டார் திமுக தலைவர்.

இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சென்று சந்தித்த ஸ்டாலின், அவரிடம் கலைஞர் சிலை திறப்பு விழா அழைப்பிதழை வழங்கினார்.
இன்று பகல் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார் ஸ்டாலின். அப்போதுவரை கேஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு வரவில்லை என்ற முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஸ்டாலின் அவரிடம், ‘இதை காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கண்ணாடி அணிந்து பார்க்காமல் பாஜக எதிர்ப்பு என்ற கண்ணாடி அணிந்து பாருங்கள்’ என்று கேஜ்ரிவாலிடம் சுமார் இருபது நிமிடங்கள் வற்புறுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
ஏற்கனவே சீத்தாராம் யெச்சூரி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கேஜ்ரிவாலிடம் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தும், இன்று ஸ்டாலினுடைய வற்புறுத்தலும் சேர்ந்து கடைசியில் கேஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.
திமுக தலைவர் ஆனவுடன் முதன் முறையாக அரசியல் பயணமாக டெல்லி சென்ற ஸ்டாலின் அதிப்ருதியில் இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை கடைசியாக சென்று சமாதானம் செய்து கூட்டத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்.இது ஸ்டாலினுடைய டெல்லி பயணத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அருகே முக்கியமான இடத்தில் ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது திமுகவுக்கு டெல்லி கொடுக்கும் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.

கருத்துகள் இல்லை: