சனி, 15 டிசம்பர், 2018

பா.ரஞ்சித்தின் கருத்து சனநாயகத்திற்கானதே.. சனாதனமல்ல!


இரஞ்சித்தின் கருத்து சனாதனமல்ல, சனநாயகத்திற்கானதே!
மின்னம்பலம்: வாசுகி பாஸ்கர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய இயக்குனர் பா.இரஞ்சித், தலித் மக்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளுக்கு அரசியல் ரீதியாகத் தொடரும் மௌனத்தையும் மெத்தனப் போக்கையும் சுட்டிக் காட்டினார். தலித் இயக்கங்களும் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவையைக் கூறினார். அதற்கான முன்னோட்டமாக வருகின்ற நடாளுமன்றத் தேர்தலில் ஏழு தனித் தொகுதிகளில் மட்டும் வெற்றி தோல்வி குறித்துக் கவலைகொள்ளாமல் முயன்று பார்க்க வேண்டும் என்று கூறியியிருந்தார்.
இது தலித் மேடைகளில் காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டுவரும் கருத்துகளின் தொடர்ச்சிதான். ஒடுக்குமுறைக்கு எதிரான கோபமாகவும், அரசியல் தேவையாகவும் இது போன்ற கருத்துகள் வெளிப்படுவதாகவே புரிந்துவந்திருக்கிறோம்.

பாதிப்பைச் சந்திக்கும் சமூகம் என்ற முறையில் தங்களை அரசியல் சக்தியாக ஆக்குவதற்கான முதல் நிபந்தனையாக மக்களை அமைப்புகளில் திரளக் கோருவதும் ,விரிந்த தேவை எழும்போது அமைப்புகளாக ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவதும் எப்போதும் நடந்துவந்திருக்கின்றன. அவ்வாறே இரஞ்சித்தும் ஒரு கருத்து அல்லது யோசனை என்ற அளவில் இக்கருத்தை முன்வைத்திருக்கிறார்.
ஆதங்கத்தின் வெளிப்பாடு
அக்கருத்து பல்வேறு தளங்களில் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டது. பாதிப்பின் வலியை ஒட்டி வெளிப்பட்ட கோபம் இது. இது போன்று ஆதங்கம் கொள்வதும், அதையொட்டி ஒரு அறைகூவலை முன்வைப்பதும் இயல்பே. செயல் திட்டங்களையெல்லாம் தீட்டி மனதில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப ஆதங்கம் வெளிப்படுவதில்லை. இது போன்ற ஆதங்கங்கள் விவாதத்திற்கு உள்ளாகும்போது கருத்தாகவும் செயலாகவும் மாற்றமடையும். பல நிலைப்பாடுகள் கோபத்திலிருந்தும் ஆதங்கத்திலிருந்தும்தான் வெளிப்பட்டிருக்கின்றன. இது போன்ற கேள்விகளை எழுப்ப தார்மிக அறம் போதுமானது.
இரஞ்சித் முன்வைத்த கருத்தை முற்றிலும் நிராகரிக்கவோ ஏற்கவோ ஒருவருக்கு உரிமையுண்டு. ஆனால் இரஞ்சித்தின் கருத்தை எதிர்கொண்டு வெளிப்பட்ட கருத்துகள் அவரின் கருத்தை நிராகரித்ததோடு இன்னும் ஒருபடி மேலே சென்று அவர் கருத்துகளைச் சாதியவாதம், சனாதானம், பிரிவினைவாதம் என்று முழு முற்றிலுமாகத் தகுதியிழப்புச் செய்து அப்புறப்படுத்துவதாக மாறின. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ரவிக்குமார் அவர்களே இந்த நிராகரிப்பை இணையதளத்திலும், தொலைக்காட்சியிலும், கட்டுரைகளிலும் மீண்டும் மீண்டும் அழுத்திப் பதிவு செய்தார்.
இக்கருத்திற்கான எதிர்ப்பைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுத்தியதன் மூலம் இது கட்சியின் இரண்டொரு நாள் அஜண்டாவாகவே மாறிப்போனது. திருமாவளவன் தன்னைச் சந்திக்கும்போது நடந்த இயல்பான பரிவர்த்தனையைப் பொதுவில் கூறலாகாது என்னும் அடிப்படை நாகரிகத்தைக்கூடப் பின்பற்ற முடியாத வைகோ பற்றி வன்னி அரசு எழுதிய மறுப்பை "அது வன்னி அரசுவின் தனிப்பட்ட கருத்து" என்று கூறிக் கடந்து சென்றார் திருமாவளவன். இரஞ்சித்தின் கருத்தோடு உடன்பாடு இல்லாத பட்சத்தில் அதைப் போன்று கூறிக் கடந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு கடக்க முடியாத அளவிற்கு ரவிக்குமாரால் அக்கருந்து ஊடகங்களில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
யார் பதில் சொல்லியிருக்க வேண்டும்?
இரஞ்சித்தின் கருத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிரானதல்ல. அடிப்படையில் அது, ஆண்ட, ஆளும் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானது. அங்கிருந்துதான் இரஞ்சித்திற்கான பதில் வந்திருக்க வேண்டும். தமிழகத்தில் எப்போதெல்லாம் தலித் எழுச்சிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றனவோ, அப்போதெல்லாம் அக்குரலை மழலையிலேயே நெரிக்கும் போக்கு வரலாறு நெடுகிலும் இருந்திருப்பதைப் பார்க்கிறோம். இம்முறை அதை விரும்பாத சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதைப் போலச் செய்து விட்டது ரவிக்குமாரின் விமர்சனம். தலித்துகளிடமிருந்து இத்தகைய குரல்கள் எழுவதற்கான காரணங்களை விவாதிப்பதற்கு மாறாக, தன்னுடைய வலியைப் பேசியவனையே குற்றவாளியாக ஆக்கிப் பார்த்த போக்காக இது மாறிவிட்டது.
சொல்லப்போனால் தலித் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்போதெல்லாம், தமிழகத்தில் அந்த இயக்கங்கள் எப்படித் துண்டாடப்படுகின்றன என்று வேறெவரையும்விட அதிகம் பேசியவரும் எழுதியவரும் ரவிக்குமார்தான். இது குறித்து மேலும் விவாதிக்கு முன் இரஞ்சித் முன்வைத்த கோரிக்கைக்குப் பின்னே இருக்கும் நியாயத்தைப் பதிவு செய்வது அவசியமாகிறது.

அவர்கள் ஏன் பேசவில்லை?
நவம்பர் இறுதியில் ஓசூரில் கொடூரமான ஆணவக் கொலை நடந்திருந்தது. சேலத்தை ஒட்டிய ஆத்தூரில் சமீபத்தில் மிக குரூரமாக சிறுமி ராஜலக்ஷ்மி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலைக்குச் சமூக வலைதளங்களில் எழுந்த பதற்றம் அரசியல் தளத்தில் இல்லை. ராஜலக்ஷ்மியின் பகுதி தனித்தொகுதிக்கு உட்பட்ட ஊர். அதிமுகவின் தலித் உறுப்பினர் சின்னத்தம்பி பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்வையிடப் போகவில்லை. திமுக சார்பாக தலித் உறுப்பினர் ஒருவர் இத்தொகுதியில் சின்னத்தம்பியை எதிர்த்துப் போட்டியிட்டுயிருப்பார். அவரும் போகவில்லை.
தனித்தொகுதியில் வெற்றி பெற்று உறுப்பினராகிறவர் தலித்துகளின் குறைகளை மட்டுமே தீர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல. ஆனால் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாதென்கிற காரணத்திற்காகவே அரசியலமைப்புச் சட்டம் தனித் தொகுதிகளை உருவாக்கி, அதில் தலித்துகளைப் பங்கு பெறச் செய்திருக்கிறது. மறுக்கப்பட்டுவரும் அதிகாரப் பரவலாக்கத்தில் தலித்துகளின் கோரிக்கைகளும் குறைகளும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்பதால்தான் இப்படிச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோக்கம் இங்கே சிதைக்கப்படுகிறது, பொது நீரோட்ட அரசியல் கட்சி என்று தங்களை நிறுவிக்கொண்ட கட்சிகளில் இருக்கும் தலித் உறுப்பினர்கள், தாம் சார்ந்த கட்சியின் பெரும்பான்மைக் கருத்து என்னவோ, அதைச் சார்ந்தே முடிவெடுக்கக்கூடிய நிர்பந்தத்தில் தள்ளப்படுகிறார்கள், அல்லது தங்களது சுயநல வளர்ச்சிக்கு மௌனமே துணை என்னும் முடிவுக்கு வருகிறார்கள்.
இச்சமூக இழிவுகளுக்கு ஐந்தாண்டு காலத்திற்குள் தீர்வை சாசனமாக்குங்கள் என்று தலித்துகள் கேட்கவில்லை. கொலைக்கெதிராக ஒரு கண்டனம் தெரிவிப்பதில்கூட நிதானித்து செயல்படும் போக்கு இந்த தேர்தல் அரசியல் களத்தில் இருப்பதால், அந்த நோய் தலித் பிரதிநிதிகளுக்கும் தொற்றிக்கொண்டுவிட்டதால், அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல நாடற்ற நாதியற்றவராக தலித்துகள் இங்கே நடத்தப்படுகிறார்களா என்கிற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியாது. இந்த ஆதங்கத்திலிருந்து எழுந்த குரல்தான் இரஞ்சித்தின் குரல். இது லட்சக்கணக்கான தலித் இளைஞர்களின் குரலும்கூட.
ரவிக்குமார்: அன்றும் இன்றும்
பட்டியலின இயக்கங்களும் கட்சிகளும் திரட்சியாக இயங்க வேண்டிய சூழலை வலியுறுத்திய இரஞ்சித்தின் உரையை "சாதிய சனாதனக் கருத்து" என்று நிறுவப் பாடுபட்டிருக்கும் ரவிக்குமார், நவம்பர் 1999ஆம் ஆண்டு தலித் முரசில் எழுதிய கட்டுரையான "தமிழக அரசியலில் தலித் எழுச்சி" என்னும் கட்டுரையில் வலியுறுத்திய கருத்துக்களைக் காட்டிலும் புதிதாய் எந்தக் கருத்தையும் இரஞ்சித் வெளிப்படுத்திவிடவில்லை.
"எதிர்வரும் தேர்தல் வேறெந்த அரசியல் கட்சிகளை விடவும் தலித் அமைப்புகளுக்கு முக்கியமானவை, தலித் மக்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்துவிடக் கூடாது" என்று குறிப்பிடும் அவர், "தலித் அமைப்புகள் அரசியல்ரீதியில் தலித் மக்களை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் இன்னும் கொண்டுவரவில்லை, அந்த அமைப்புகளின் செல்வாக்கு அதிகமுள்ள தொகுதிகளில் அவை பெற்ற வாக்குகளும், பிற தொகுதிகளில் அவை பெற்ற வாக்குகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் இதைத் தெளிவுபடுத்தும். இரண்டாவது காரணம், தலித் அமைப்புகள் கூட்டு சேர்ந்து முன்வைத்த மூன்றாவது அணி, வெற்றி பெறும் அணியாக முன்வைக்கப்படவில்லை என்பதாகும்" என்கிறார்.
"புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி போன்ற கட்சிகள் தலித் மக்களை அரசியல்படுத்தி, அவை தனித்தனியாகப் பெறக்கூடிய வாக்குகளை ஒருங்கிணைத்தால் கணிசமான தலித் உறுப்பினர்களைச் சட்டமன்றத்திற்கும் பாராளமன்றத்திற்கும் கொண்டு போகலாம், அந்த தலித் பிரதிநிதிகளால் அவைகளில் உருவாகும் அழுத்தம் காரணமாக மற்ற அரசியல் கட்சிகளில் பெயரளவில் பொறுப்பு வகிக்கும் தலித் தலைவர்கள் ஓரளவுக்கு அதிகாரம் கொண்டவர்களாக மாறுவார்கள்" என்கிற கருத்தையும் முன்வைக்கிறார்.

தலித் அமைப்புகள் பலம் பெறவும், வாக்குகள் சிதறாமல் இருக்கவும், தலித் இயக்கங்கள் ஒற்றுமையாக இயங்க வேண்டிய அவசியத்தை தேர்தல் வாக்குகளின் ஆய்வுகளின்படியே ஆவணப்படுத்தும் ரவிக்குமார், பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு அதே கருத்தை இரஞ்சித் பேசினால், அது எப்படிச் சாதியவாதமாகும்? அது எப்படிச் சனாதானமாகும்?
பட்டியலின ஒற்றுமை நோக்கில் தேர்தல் அரசியலை அணுகுவதென்பது பொதுச் சமூகத்திலிருந்து விலகுவதல்ல. இந்த அரசியலமைப்பு ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை உரிமைகளை மீட்க இந்தத் திரட்சியும், அதன் மூலம் உருவாகும் அழுத்தம் ஏனைய சமூக இயக்கங்களிலும் எதிரொலிக்கும் என்கிற அடிப்படையில் தான். தலித்துகள் பேர சக்தியாக மாறுவதும், அதனடிப்படையில் அதிகார பகிர்வு உரையாடல் உருவாவதும் தான் இது போன்ற குரல்களின் அடிப்படை.
"புரட்சியாளர் அம்பேத்கரைப் பின்பற்றி தலித் இயக்கங்கள் ஒருங்கிணைத்து ஒரு மாற்றத்தை உருவாக்க முனைந்தால், தலித் இயக்கங்களின் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது" என்று அழுத்தமாக அதே கட்டுரையில் பதிவு செய்தவரும் ரவிக்குமார்தான்.
தலித்துகளின் பொருளாதாரம், தலித்துகளின் அரசியல் பிரதிநித்துவம், தலித்துகளின் சமூக விடுதலை, தலித்துகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்கொடுமைகளென, 2000ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த புள்ளிவிவரங்களைக் கொண்டு ரவிக்குமார் சமூக அவலங்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில், தளங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார். 2000க்கு பிறகு, 2012 வரை தேசிய ஆவணக் காப்பகம் தரும் தரவுகளின்படி தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இன்றும் அது பொருந்தும்
இந்தப் பதினெட்டு வருட இடைவெளியில் தலித்துகள் ஒன்று திரள வேண்டிய அவசியம் எப்படி இல்லாமல் போனது? அந்தக் கருத்தியலை நடைமுறைப்படுத்தச் சிக்கலிருப்பதாக தலித் இயக்கங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தக் கருத்தே எப்படி சாதியவாதக் கருத்தாக மாறும்? ரஞ்சித்தின் பேச்சை அவர் முழுப் பின்னணியோடு எடுத்து வைத்துப் பேசாமல் ஒரு பகுதியை மட்டும் காட்டி அதற்கேற்ப வாதத்தை அமைத்து விமர்சிக்கிறார்.
இரஞ்சித் தனித்தனி சாதியாகத் திரள வேண்டும் என்று சொல்லவில்லை. பல்வேறு ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பிரதிபலிக்கும் பட்டியலின அமைப்புகள் பாதிப்பின் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும் என்கிறார். இவ்வாறு ஒருங்கிணைவதும், ஒருங்கிணையக் கோருவதும் அரசியல் அநீதியல்ல. அது அரசியல் நீதிக்கானதே. இது அம்பேத்கர் அரசியலுக்கு எதிரானதுமல்ல. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 'பொது நீரோட்டக் கட்சி ', பெரிய கூட்டணியில் இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே ஒடுக்கப்பட்ட மக்களோ கட்சிகளோ ஒன்றிணைய வேண்டும் என்று விரிந்த அரசியல் நோக்கில் சிந்திக்க வேண்டியதின் நியாயம் இல்லாமல் போய்விடாது.
இவ்வாறு புரிந்துகொள்ள வேண்டிய ரஞ்சித்தின் வாதத்தை பட்டியலின சாதிகளையே தனித் தனி சாதிகளாக்கும் பாஜக திட்டத்தின் பாற்பட்டது என்பதாக மாற்றி அதன் மூலம் அவர் சனாதனத்திற்கு துணை போகிறார் என்று ஓங்கி அடிப்பது அப்பட்டமான திசை திருப்பல். சொல்லப்போனால் அதே பேச்சில் பட்டியலினத்தைத் தனித்தனிச் சாதிகளாக்கும் பாஜகவின் திட்டத்தையே இரஞ்சித் சாடியிருக்கிறார்.
பட்டியலினக் கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பேசுவதைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்று கூறுவது வாதத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகக் கூறப்படும் கூற்றே தவிர வேறில்லை. ஏதேனும் ஒரு அடிப்படையில் திரட்சியை ஏற்படுத்திக்கொள்ளுதலே இன்றைய தேர்தல் ஜனநாயகத்திற்குத் தேவை. அது இந்தியாவில் சாதித் திரட்சியாக இருக்கிறது. எல்லாக் கட்சிகளும் சாதிகளாகவே திரட்சியைச் சாத்தியமாக்குகின்றன. ஒடுக்கப்பட்டோர் திரட்சி என்ற நியாயம் இருப்பினும் விசிகவும் அத்தகைய திரட்சியையே கொண்டிருக்கிறது. மெலழுந்தவாரியாக எப்படிச் சொல்லிக்கொண்டாலும் இந்த அமைப்பில் இதுவே ஆதாரமான உண்மை. இது எல்லாக் கட்சிகளுக்கும் தெரியும். எனவே இரஞ்சித் சொல்லியதால் தான் முதன் முறையாக ஒடுக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவார்கள் என்பதாகக் கூறுவது பூசணிக்காயை அல்ல மலையையே சோற்றில் மறைப்பது.

ஒன்றிணைந்து தனித்துப் போட்டியிடுவது பிரிவினைவாதமல்ல. உரிமையை ஒட்டி ஆதங்கப்படுவது பிரிந்து வாழுவதற்காகத்தான் என்று மாற்றுவது தலித்துகள் பேசத் தொடங்கும்போதெல்லாம் ஆதிக்க வகுப்பினர் செய்யும் காரியம். அதை இன்று ஒடுக்கப்பட்டோரின் நியாயம் பற்றி பேசியவர்களே மற்றொரு தளத்தைப் பார்த்து சொல்லத் தொடங்கியிருப்பது வியப்பளிக்கிறது. உரிமையைக் கோருவதே இணைந்து வாழுவதற்கான போராட்டம்தானே.
தேர்தல் அரசியல் கூட்டணிக் கணக்குகளுக்குள் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் இதை வழிமொழியவோ ஆதரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லையென்கிற அரசியல் யதார்த்தம் புரியாமலில்லை. ஆனால் அரசியல் நிர்பந்தம் காரணமாக ஒருவர் பேச முடியாத கருத்தைச் சமூகத்தில் வேறு யாரும் பேசிவிடக் கூடாது என்று நெருக்கடிக்குள் தள்ளுவதும், ஒரு கருத்தை முன்வைப்பவரை அடையாளப்படுத்தித் தகுதியிழக்கச் செய்வதும் இங்கே பல்வேறு காலகட்டங்களில் பல தரப்பட்டவர்களால் கூர்தீட்டப்பட்ட தலித் அரசியலை மழுங்கடிக்கச்செய்யவே உதவும்.
இரஞ்சித் உள்ளிட்டோரும் தலித் அறிவுஜீவிகளும் மைய நீரோட்டக் கட்சிகள் மீது எழுப்பும் நிர்பந்தங்கள் அரசியல் கட்சி என்ற முறையில் விசிகவுக்கான முக்கியத்துவமாக மறைமுகமாகவேனும் மாறும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய வேளை இது. எனவே இத்தகைய சக்திகளையும் நாம் அழுத்தக் குழுக்களாகத்தானே கருத வேண்டும்?
மனிதர்களும் காலமும் தற்காலிகமானவை, ஆனால் இந்த மண்ணில் பேசப்பட வேண்டிய அரசியல் ஆண்டாண்டு காலமாய் உயிர்பெற்று இருக்க வேண்டியது. தத்துவங்களுக்கு அந்த வல்லமை உண்டு. "சுயநலம் முதன்மைப்படுத்தும்போது அறிவு தோற்றுப்போகும்" என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். அறிவார்த்தமாக இருக்க வேண்டிய இடத்தில் சுயநலத்தை மட்டுமே கொள்வோமானால் வாதங்களில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். ஆனால் வரலாற்றில் தலித்துகளைக் கைவிட்டவர்களாகி விடுவோம். பிறகு அந்த வரலாறே நமக்கு என்ன பெயரை வழங்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை: