வியாழன், 13 டிசம்பர், 2018

தினகரனின் நாடகம் முடிவுக்கு வருகிறது : செந்தில் பாலாஜி விலகல் குறித்து வைகைச்செல்வன் பேட்டி

Vaigaichelvannakkheeran.in - rajavel : அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக அதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் நக்கீரன் இணையதளத்திடம் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல கட்சிகளுக்கு தாவியவர். பல கட்சி சாயங்களை பூசிக்கொண்டவர். சிந்தாந்த ரீதியாக கொள்கை ஈடுபாடோ, லட்சிய ஈடுபாடோ இல்லாத செந்தில் பாலாஜி, தனி நபர் வளர்ந்தால் போதும் என்று நம்புகிற ஒருவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள், ''தன்னுடைய வளர்ச்சியை மாத்திரமே நம்புகிறவர் அந்த இயக்கத்தின் புற்றுநோய் போல. மாறாக கட்சியினுடைய வளர்ச்சியை நம்பி தன்னை அதற்காக அர்ப்பணித்துக்கொள்பவர்களே நல்ல தொண்டர்கள்'' என்று சொல்லுவார். அதைப்போல ஒவ்வொரு கட்சிக்கும் பலபேர் இருப்பார்கள். அந்த வகை பட்டியலில் செந்தில் பாலாஜியும் அடங்குவார்.

அடிப்படையில் திமுகவிலும், மதிமுகவிலும் பின்னர் திமுகவிலும், அதன் பின்னர் அதிமுகவிலும், அதற்கு பின்னர் அமமுகவிலும், தற்போது திமுகவில் தஞ்சமடைந்திருக்கிறார். தன்னுடைய வளர்ச்சியை மாத்திரம் எண்ணுகிற இவரால் ஒருபோதும் கட்சி வளராது.
அமமுக ஒரு கொள்கை பலம் இல்லாத ஒரு கட்சி. வெறும் ஒரு சிறு குழுவை வைத்துக்கொண்டு அதை கட்சியாக மாற்றலாம் என்று நினைத்ததால் தினகரன் தனது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அவருடைய ஓரங்க நாடகம் ஒரு முடிவுக்கு வருகிறது.

மன்னாரன் கம்பெனி அன்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற ஒரு கட்சியாக வைத்துக்கொண்டிருக்கிற தினகரன், ஜெயலலிதாவாலும் அதிமுகவாலும் வளர்ந்தவர். அதை மறந்துவிட்டு அதிமுகவை அழிக்க நினைத்ததும், அதிமுக அரசை கலைக்க நினைப்பதும், அவருடைய அரசியல் வாழ்வில் நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறார்.

பெற்றத் தாயையும், தகப்பனையும் விஷம் வைத்து கொல்லத் துடிக்கிற மகனைப்போல, தான் வளர்ந்த இயக்கத்தையே அழிக்க நினைக்கும் தினகரன் கட்சியில் இருப்பவர்கள் அந்த கட்சியையே அழிக்க நினைத்து அவரை விமர்சனம் செய்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவருகிறார்கள் என்பதைத்தான் செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் காட்டுகிறது. இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: